பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

நான்காவது தூண்

நான்காவது தூண்
பிரீமியம் ஸ்டோரி
News
நான்காவது தூண்

இந்தத் தாக்குதலில் கடுமையான பாதிப்புக்குள்ளானவர், இடதுசாரி மாணவர் அமைப்பான இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த ஆயிஷே கோஷ்.

ந்திய அளவில் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் அடுத்தடுத்து நடைபெறும் சம்பவங்கள் அதிர்ச்சியையும் வருத்தத்தையும் அளிக்கின்றன. ஜே.என்.யுவில் வெவ்வேறு அரசியல் குழுக்களைச் சேர்ந்த மாணவர்களுக்குள் முரண்பாடுகள் இருப்பது அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால் அது வன்முறை என்ற நிலையை அடைவது விரும்பத்தக்கதல்ல.

பல்கலைக்கழக விடுதிக்கட்டணம் அதிகரிக்கப்பட்டதில் இருந்தே, கடந்த நவம்பர் மாதத்திலிருந்து மாணவர் போராட்டங்கள் நடைபெறத் தொடங்கின. மத்திய அரசு குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைக் கொண்டுவந்தபோது அதற்கு எதிராகவும் இடதுசாரி மாணவர் சங்கத்தைச் சேர்ந்த மாணவர்கள் போராடிவந்தனர். இந்நிலையில், ஜனவரி 5 அன்று பல்கலைக்கழகத்தின் மாணவர் விடுதியில் நுழைந்த, 50க்கும் மேற்பட்டவர்கள் அடங்கிய முகமூடி அணிந்த கும்பல் ஒன்று, மாணவர்கள்மீது கடும் வன்முறைத்தாக்குதலை நடத்தியது. இந்தியா முழுக்க அதிர்வலைகளை எழுப்பிய இந்த வன்முறைத் தாக்குதலை நடத்தியது இந்துத்துவ மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏ.பி.வி.பி) என இடதுசாரி மாணவர்களும், தாக்குதலை நடத்தியது இடதுசாரி மாணவர்கள் என ஏ.பி.வி.பி அமைப்பினரும் பரஸ்பரம் குற்றம் சாட்டிக்கொண்டனர்.

இந்தத் தாக்குதலில் கடுமையான பாதிப்புக்குள்ளானவர், இடதுசாரி மாணவர் அமைப்பான இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த ஆயிஷே கோஷ். ஆனால், சமீபத்தில் வன்முறைத்தாக்குதலில் ஈடுபட்டவர்கள் என டெல்லி காவல்துறை வெளியிட்டுள்ள பட்டியலில் முதல் ஆளே ஆயிஷே கோஷ்தான் என்பது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. `தாக்குதலுக்கு உள்ளானவர் மீதே வழக்குப்பதிவா?’ என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எதிரொலித்தது.

ஆனால் இந்தியா டுடே நடத்திய ஸ்டிங் ஆபரேஷன், ஏ.பி.வி.பி அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் தாக்குதலில் ஈடுபட்டதை அம்பலப்படுத்தியுள்ளது. இதற்கு முன்பே, பல்கலைக்கழகத் தாக்குதலுக்குத் தாங்கள் பொறுப்பேற்பதாக இந்து ரக்‌ஷா தளம் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது. ஆயிஷே கோஷ் மீது வழக்கு பதிவு செய்துள்ள டெல்லி காவல்துறை, ஸ்டிங் ஆபரேஷன் மூலம் அம்பலமாகியுள்ள, ஏ.பி.வி.பி மாணவர்கள்மீதோ இந்து ரக்‌ஷா தளம் அமைப்பின் மீதோ எந்த நடவடிக்கையும் எடுக்காதது, இது பாரபட்சமற்ற விசாரணைதானா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.

தாக்குதலில் ஈடுபட்டவர்கள் இடதுசாரிகளோ இந்துத்துவவாதிகளோ, யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியவர்கள் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் அது பாரபட்சமற்ற விசாரணையின்மூலம்தான் சாத்தியம்.

`இந்தியா டுடே’ ஸ்டிங் ஆபரேஷனுக்குப் பிறகு, இப்போது ‘தாக்குதலில் ஈடுபட்ட 37 பேரும் ‘இடதுசாரிகளுக்கு எதிரான ஒற்றுமை’ என்ற வாட்ஸ்-அப் குழுவில் இருந்தவர்கள் என்றும், இவர்களில் 10 பேர் மாணவர் அல்லாதவர்கள் என்றும் விசாரணைக்குழு தெரிவித்துள்ளது. யார் குற்றம் செய்தாலும் நேர்மையாக நடவடிக்கை எடுக்கவேண்டிய காவல்துறை, நான்காவது தூணான ஊடகம் ஒரு விஷயத்தை அம்பலப்படுத்தியபிறகே, பாரபட்சமற்ற விசாரணையை நோக்கி நகரும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது, ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள அனைவருக்கும் கவலையளிக்கிறது.