பிரீமியம் ஸ்டோரி

மதிப்புக்குரிய வாசகப் பெருமக்களே...

நமது ரசனையோடும் சிந்தனையோடும் இயைந்து போகிற மனிதர்களைச் சந்திப்பதில் இருக்கும் சுகமே தனி. அதிலும் அப்படிப்பட்ட மனிதர்கள் நம்முடைய வாசகர்களாக இருந்துவிட்டால், சுகம் இரட்டிப்பு ஆகிவிடும். அப்படிப்பட்ட அனுபவம்தான் சமீபத்தில் கிடைத்தது. பெரும்பாலானவர்களை வீட்டுச் சிறையில் கொரோனா அடைத்து வைத்திருக்கும் காலத்தில், ஜூம் செயலி வாயிலாக இந்தச் சந்திப்பு நடைபெற்றது. ஆம், நாம் குறிப்பிடுவது ஆயா அகாடமியோடு இணைந்து, மோட்டார் விகடன் நடத்திய ஐந்து நாள் ஆன்லைன் - கார் டிசைன் பயிலரங்கத்தைப் பற்றித்தான்.

தினமும் ஒரு மணி நேரம் பயிலரங்கம் நடத்துவதாகத்தான் திட்டம். ஆனால், பங்கேற்பாளர்கள் காட்டிய உற்சாகத்தால், ஒவ்வொரு நாளுமே குறிப்பிட்ட காலஅளவைத் தாண்டி வெகுநேரம் பயிலரங்கம் நடைபெற்றது. 10 வயது சிறுவர்களும் கலந்து கொண்டனர். ஆட்டோமொபைல் துறையில் பத்து ஆண்டுகள் அனுபவம் பெற்ற பொறியாளர்களும் கலந்து கொண்டனர். நம் மாநிலத்தின் சிற்றூரில் இருப்பவர்களும் கலந்து கொண்டார்கள். கடல் தாண்டி அமெரிக்கா, ஐரோப்பா, வளைகுடா போன்ற பகுதிகளில் இருப்பவர்களும் கலந்து கொண்டார்கள். பெருவாரியான ஆண்கள் கலந்து கொண்ட இந்தப் பயிலரங்கத்தில் ஒரு சில பெண்களும் கலந்து கொண்டார்கள். இப்படி பாலினம், வயது, நாடு என்று அனைத்தையும் தாண்டி கதம்பமான பங்கேற்பாளர்கள் கலந்து கொண்ட பயிற்சிப் பட்டறை என்றாலும், அத்தனை பேரின் ஆர்வத்தையும் அறிவையும் ஒருசேரத் தூண்டும் வண்ணம் அமைந்திருந்தது, பயிற்சியாளர் க.சத்தியசீலனின் கருத்துப் பரிமாற்றங்கள்.

வகுப்புகளில் கொடுக்கப்படும் வீட்டுப்பாடங்களை எத்தனை மாணவர்கள் செய்வார்கள் என்பது தெரியாது. ஆனால், இந்தப் பயிலரங்கத்தில் கொடுக்கப்பட்ட அனைத்து அசைன்மென்ட்களையும் வரைந்ததோடு மட்டுமல்லாது, அதை கூகுள் லென்ஸ் கொண்டு சரியா தவறா என்றும் பரீட்சித்துப் பார்த்து மகிழ்ந்தார்கள் பங்கேற்பாளர்கள். கார் டிசைன் தொடர்பான ஓவிய உக்திகள், மாதிரி வடிவங்களைச் செய்யும் க்ளே மாடலிங் பயிற்சி, மென்பொருள்கள் என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சுவாரஸ்யமான அம்சம் பேசுபொருளாக எடுத்துக் கொள்ளப்பட்டு விளக்கப்பட்டதுடன், விவாதிக்கவும் பட்டது.

``உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்..." என்பது தமிழ்ப் புலவர்களுக்கு மட்டுமல்ல, கார் ஆர்வலர்களுக்கும் பொருந்தும். இதோ, அதற்குள் இன்னுமொரு பயிலரங்கத்துக்கு மோட்டார் விகடன் தயாராகிவிட்டது. வாருங்கள், பயிலரங்கில் சந்திப்போம்.

அன்புடன்

ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு