Published:Updated:

அன்பு வணக்கம்!

அன்பு வணக்கம்!
பிரீமியம் ஸ்டோரி
News
அன்பு வணக்கம்!

மதிப்புக்குரிய வாசகப் பெருமக்களே...

மதிப்புக்குரிய வாசகப் பெருமக்களே...

`தீமையிலும் நன்மை உண்டு. நன்மையிலும் தீமை உண்டு’ என்பது பெளத்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. அந்த நம்பிக்கை சரியானதுதான் என்று மறுபடி நிரூபணமாகியிருக்கிறது. லாக்டெளன் காரணங்களால் பல ஊர்கள் முடங்கியிருப்பதால், ஹார்ன் சத்தமில்லாத...வாகன நெரிசலற்ற சாலைகளைப் பார்க்க முடிகிறது. பொதுவாக, டெஸ்ட் டிரைவ் என்றால் இதுபோன்ற அமைதியான நெடுஞ்சாலைகளைக் கொண்ட ஜோத்புர், ஜெய்ப்பூர், உதய்பூர் என்று ராஜஸ்தானுக்குத்தான் போய்வர வேண்டும். விமான சேவைகள் இப்போது ரத்தாகியிருப்பதால்... புதிய கார்களுக்கான டெஸ்ட் டிரைவ்கள் அனைத்துமே கொரோனா விதிமுறைகளுக்கு உட்பட்டு உள்ளூரிலேயே இப்போது சத்தமில்லாமல் நடக்கின்றன. டெஸ்ட் டிரைவ் என்றால் கார்களை ஓட்டுவதற்கும் புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பதற்கும் அரை நாள்தான் கொடுக்கப்படும். ஆனால், இப்போது டெஸ்ட் டிரைவ் கார்கள் நம் வீடு தேடி வந்துவிடுவதுடன் காரை வைத்திருந்து இரண்டு மூன்று நாட்கள் நிதானமாக ஓட்டிப் பார்க்க வாய்ப்பு கிடைக்கிறது.

ஹூண்டாய் வெர்னாவை சென்னையில் ஓட்டிப் பார்க்க அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தது. தளர்வில்லாத ஊரடங்கில்லாத வார நாட்களில் அதை நிதானமாக ஓட்டிய அனுபவத்தை டெஸ்ட் ரிப்போர்ட்டாகக் கொடுத்திருக்கிறோம்.

புதிய இயல்பு வாழ்க்கை இப்படித்தான் இருக்கும் என நிதர்சனத்தைப் புரிந்து கொண்டு, அதற்கு ஏற்றாற்போல வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்வதைப்போல - வியாபார முறையையும் கார் தயாரிப்பாளர்கள் மாற்றிக் கொண்டுவிட்டார்கள். இணையம் வழியாகவும், மெய்நிகர் அனுபவம் வாயிலாகவும் கார்களை விற்பனை செய்ய ஒவ்வொருவரும் ஒவ்வொரு யுக்தியைக் கையாள்கிறார்கள். கனெக்டட் கார்ஸ், இன்டர்நெட் கார்ஸ் என்று தயாரிக்கிறவர்களுக்கு இந்த யுக்தி இயல்பாகவே வருகிறது. அதனால் சென்ற மாதத்தில் ஒரு வாரம் முழுக்க எம்ஜி ஹெக்டர் ப்ளஸ், ஹோண்டா சிட்டி, ஹூண்டாய் வெர்னா, பென்ஸ் GLS,­ நிஸான் B-SUV என கார் கம்பெனிகள், ஆட்டொமொபைல் பத்திரிகையாளர்களை இணையத்தின் வழியாக பிஸியாகவே வைத்திருந்தன.

வரப்போகும் பண்டிகை காலங்கள் எப்படியிருக்கும் என்பது பற்றி, ஒவ்வொருவருக்கும் ஓர் அபிப்ராயம் இருக்கும். ஆனால் கார் தயாரிக்கும் கம்பெனிகள் நம்பிக்கையோடு இருக்கின்றன. கியாவின் சோனெட் துவங்கி, பல கார்களின் அணிவகுப்பு இந்த மாதம் நடக்க இருக்கின்றன.

கார் கம்பெனிகள் மட்டுமல்ல, கார் ஆர்வலர்களும் அதிலும் பள்ளிக்கூடங்களில் படிக்கும் கார் ஆர்வலர்கள்... நம்மை வியப்பில் ஆழ்த்துகிறார்கள். கடந்த மாதம் மோட்டார் விகடன் நடத்திய கார் டிசைன் அறிமுகப் பயிலரங்கத்தில் கலந்து கொண்ட மாணவர்களின் அறிவுத்தேடல் கொண்ட கேள்விகள் நம்மைத் திணரடித்ததன. இவர்களின் கேள்விகள் அனைத்துக்கும் ஒரே நாளில் பதில் சொல்லிவிட முடியாது என்பதால், நான்கு நாட்களுக்கு ஓர் அட்டவணை தயார் செய்து, சிறப்புக் கட்டணத்தில் ஒரு பயிலரங்கத்தை மோட்டார் விகடன் இந்த மாதம் நடத்துகிறது.

இந்தப் பயிலரங்கத்தில் கலந்து கொள்ள வாய்ப்பில்லாதவர்கள் கவலை கொள்ளத் தேவையில்லை. இதுபோல தொடர்ச்சியாக பல பயிலரங்கங்கள் நடக்கயிருக்கின்றன. ஜூம் செயலியில் சந்திக்கலாம்.

அன்புடன்

ஆசிரியர்