Published:Updated:

நமக்குள்ளே...

நமக்குள்ளே
பிரீமியம் ஸ்டோரி
நமக்குள்ளே

தலையங்கம்

நமக்குள்ளே...

தலையங்கம்

Published:Updated:
நமக்குள்ளே
பிரீமியம் ஸ்டோரி
நமக்குள்ளே

சமீபத்தில் நட்சத்திர ஜோடி சமந்தா - நாக சைதன்யா தங்களின் மணமுறிவு அறிவிப்பை இணைந்து வெளியிட்டிருந்தனர். அறிவிப்பை பரஸ்பர மரியாதையுடன் வெளியிட்டது, பின்னரும் தாங்கள் நண்பர்களாகத் தொடர்வோம் எனத் தெரிவித்தது, நாக சைதன்யாவின் அப்பா நாகார்ஜுனா, சமந்தா எப்போதும் தங்கள் குடும்பத்தின் அன்புக்குரியவராக இருப்பார் என்று அறிவித்தது என இதில் ஆரோக்கியமான விஷயங்கள் பல இருந்தன. ஆனால், ‘சமந்தா 200 கோடி ஜீவனாம்சம் கேட்கிறார்’ என்ற புலனாய்வுச் செய்திகளையும், ‘பெண்களுக்கு ஜீவனாம்சம் கொடுக்கும் ஆண்களின் பரிதாப நிலை’, ‘இன்று வருமானம் ஈட்டும் பெண்களும் ஜீவனாம்சம் பெறுவது நியாயமில்லை’ என்ற ஆராய்ச்சிக் கட்டுரைகளும் சமூக வலைதளத்தில் எழுதினார்கள் பலர்.

பெண்களின் பொருளாதார சார்பு நிலை, விவாகரத்து முடிவை அவ்வளவு எளிதாக அவர்களை எடுக்கவிடுவதில்லை. எனவே, விவாகரத்து என்பது பெரும்பாலும் ஆண்களின் முடிவாகவே இருக்கிறது. அத்தகைய சூழலில் கணவர், மனைவிக்கு சட்டப்படி வழங்கக் கடமைப்பட்டுள்ள மற்றும் மனைவியின் நிதி உரிமையே... ஜீவனாம்சம். இதை விவாகரத்துக்கு முன்பு ஒரே தொகையாகவோ, விவாகரத்துக்குப் பின் மாதப் பராமரிப்புத் தொகையாகவோ தரலாம். வேலைக்குச் செல்லும் பெண்களும், தன் வருமானத்தால் தன்னை பராமரித்துக்கொள்ள முடியாது என்ற சூழலிலும், தன்னைவிட கணவர் சம்பளம் அதிகம் வாங்கு கிறார் என்பதை நீதிமன்றத்தில் நிரூபித்தும் ஜீவனாம்சம் பெற முடியும்.

இன்று பொருளீட்டும் பெண்கள் பலர், மணவிலக்கு சுதந்திரத்துக்கு ஜீவனாம்சத்தை விலையாகக் கொடுத்துவிட்டு ஒதுங்கிவிடுகிறார்கள். ஆனால், இது சொற்பமே. பொருளாதார ரீதியில் பின் தங்கியிருக்கும் பெண்களின் எண்ணிக்கைதான் அதிகம். அதிலும், பெரும்பாலும் அம்மா பொறுப்பிலேயே குழந்தைகள் வளர்வதால், ஜீவனாம்சம் பெற்றாலும் பெறாவிட்டாலும் பெண்கள் கடும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகிறார்கள். இன்னொருபக்கம், தன் பெற்றோரின் பெயரில் சொத்துகள் வாங்குவது, தன்னை வருமானமில்லாத நபராகக் காட்டிக்கொள்ளும் ஆவணங்கள் தயார் செய்வது, வேலையை விடுவது என சட்ட ஓட்டைகளைப் பற்றிக்கொண்டு ஜீவனாம்சம் வழங்க மறுக்கும் ஆண்களும் இருக்கிறார்கள்.

நமக்குள்ளே...
நமக்குள்ளே...

என்.டி.டி.வியின் சீனியர் பத்திரிகையாளர் ஜெனிஃபர், தன் கணவர், செல்வாக்குமிக்க மறைந்த ஐ.ஜி அருளின் மகனான தொழிலதிபர் மைக்கேல் மீது தொடர்ந்த குடும்ப வன்முறை சட்டம் அடிப்படையிலான இழப்பீட்டு வழக்கில், இழப்பீடு மற்றும் பராமரிப்புத் தொகை வழங்க, எழும்பூர் பெருநகர மாஜிஸ்திரேட்டு நீதிமன்றம் 2009-ல் உத்தரவிட்டது. ஆனால், பராமரிப்புத் தொகை நிலுவையிலேயே இருக்க, மைக்கேலை கைது செய்து மூன்று மாதங்கள் சிறையில் வைக்க, கடந்த ஜூலை மாதம் உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம். 12 வருடப் போராட்டமா, மூன்று மாத சிறையா... எது பெரிய தண்டனை தோழிகளே? பத்திரிகையாளருக்கே இதுதான் நிலை என்றால், சாமான்யப் பெண்களின் ஜீவனாம்ச உரிமையின் சட்டப் போராட்டத்தைச் சொல்ல வேண்டியதில்லை.

‘பெண்களும் விவாகரத்துக் கேட்கிறார்கள்’, ‘பெண்களும் ஆண்களைவிட அதிகம் சம்பாதிக்கிறார்கள்’, ‘ஆண்களும் குழந்தைகளைப் பார்த்துக்கொள்கிறார்கள்’ போன்ற விதிவிலக்குகளை முன்னிறுத்தி பொது நிதர்சனத்தை, அவலத்தைப் புதைக்க முனைபவர்களைப் புறம்தள்ளுவோம். ஜீவனாம்ச உரிமைக்கான குரல்களையும் செயல்களையும் ஒருங்கிணைப்போம் தோழிகளே!

உரிமையுடன்,

ஸ்ரீ

ஆசிரியர்