பிரீமியம் ஸ்டோரி

வணக்கம்.

ஆண்டுதோறும் உங்கள் வீட்டு தீபாவளிக் கொண்டாட்டத்தில் இடம் பிடிக்கும் விகடன் தீபாவளி மலர், இதோ இந்த ஆண்டும் புத்தம் புதிய பொலிவோடு உங்கள் கைகளில் தவழ்ந்துகொண்டிருக்கிறது. தனித்துவம்தானே விகடனின் அடையாளம். அதை ஒவ்வொரு பக்கமும் தாங்கி வெளியாகியிருக்கிறது இந்த தீபாவளி மலர். `எல்லோரும் இன்புற்றிருக்க' என்பதுதானே எங்களின் தாரக மந்திரம். அதை நிஜமாக்கும் விதமாக, படிக்கும் அனைவருக்கும் இனிய அனுபவம் தர இந்த மலரில் ஏராளமான அம்சங்கள் இருக்கின்றன.

அன்பார்ந்த வாசகர்களே!

நல்லுணர்வு ஊட்டும் ஆன்மிகப் பக்கங்கள், ஆன்மிகப் பெரியோர்களின் அருளுரைகள், நாம் வெள்ளித்திரையிலும் சின்னத்திரையிலும் பார்த்து ரசிக்கும் பிரபலங்களின் உரையாடல்கள், வாசிப்பு ருசியைக் கூட்டும் முன்னணி எழுத்தாளர்களின் சிறுகதைகள், மொழியின் இனிமை பேசும் கவிதைகள், பயணத்தின் மேல் காதல் கொள்ள வைக்கும் பரவசப் பகிர்வுகள், மண்மணமும் மனிதர்களின் வாழ்வியல் அனுபவமும் பேசும் கட்டுரைகள், பாரம்பரியத்தையும் மரபுகளையும் உணர்த்தும் வரலாற்றுப் பக்கங்கள், நகைச்சுவைப் பக்கங்கள் எனப் பல்சுவை விருந்தாக மின்னுகிறது இந்த இதழ்.

கொரோனா என்னும் பேரிடர் நம்மை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக விலகிவருகிறது. அடுத்த அலை குறித்த பயமும் முன்னெச்சரிக்கையும் ஒருபக்கம் இருந்தாலும், பிரச்னைகளுக்கு நடுவே மகிழ்ச்சியைத் தொலைக்காமல் வாழ்வதற்கு, இந்தப் பெருந்தொற்று நமக்குக் கற்றுக்கொடுத்திருக்கிறது. பல்லாயிரம் முன்களப் பணியாளர்களின் அயராத உழைப்பால் உருவான இந்தப் பாதுகாப்பு நிலையை நன்றியுடன் நினைவுகூர்வதோடு, கற்றுக்கொண்ட பாடமான மகிழ்ச்சியைப் பகிர்ந்தளித்தல் என்பதையும் இந்த விழாக்காலப் பொழுதில் ஞாபகப்படுத்துகிறது விகடன். அதன் சிறு துளியே இந்த தீபாவளி மலர்.

பண்டிகைகளின் நோக்கமே, அன்புக்கரம் நீட்டி உறவுகளையும் நண்பர்களையும் அரவணைப்பதுதான். இந்த தீபாவளித் திருநாளில் அன்பும் ஆனந்தமும் மலரட்டும். உங்கள் இல்லங்களில் வளமும் மங்கலமும் பெருகட்டும்!

அன்புடன்,

ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு