Published:Updated:

வீரத்திருமகனுக்கு வீர வணக்கம்!

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
தலையங்கம்

உறைபனிச் சூழல் நிலவும் ஜம்மு காஷ்மீர்ப் பகுதியிலும், சவால்கள் நிறைந்த சீன எல்லையிலும் பல ஆண்டுகள் பணிபுரிந்தவர் ராவத்.

``சிக்கலான சூழல்களில் விரைந்து முடிவெடுக்கும் திறன், துணிச்சல் கலந்த நேர்மை, சவால்களை எதிர்கொள்ளும் வீரம் மற்றும் படையினரை ஊக்குவிக்கும் தலைமைப் பண்பு என அனைத்தும் கலந்த தளபதி பிபின் ராவத். இப்படிப்பட்ட மாவீரரின் தலைமையில் பணியாற்றியதைப் பெருமையாக நினைக்கிறேன்’’ என, குன்னூர் அருகே ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைத் தளபதிக்கு ராணுவத்தினர் புகழாரம் சூட்டியிருக்கிறார்கள். பிபின் ராவத்துடன் மறைந்த அவரின் மனைவி மற்றும் 11 வீரர்களுக்கும் நாடு வீர வணக்கம் செலுத்துகிறது.

ஒரு ராணுவ வீரரின் மகனாகப் பிறந்து, ராணுவத் தலைமைத் தளபதி பதவி வரை உயர்ந்து, இந்தியாவின் முதல் முப்படைத் தளபதியாக நியமிக்கப்பட்டு சுமார் 40 ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றிய அவரது கடைசி மூச்சு பிரிந்ததும் ராணுவப் பணியில்தான். அவரின் பேச்சு, மூச்சு, சிந்தனை, செயல் என அனைத்திலும் ராணுவமும் தேசநலனும் மட்டுமே இருந்தன.

உறைபனிச் சூழல் நிலவும் ஜம்மு காஷ்மீர்ப் பகுதியிலும், சவால்கள் நிறைந்த சீன எல்லையிலும் பல ஆண்டுகள் பணிபுரிந்தவர் ராவத். வடகிழக்கு மாநிலங்களில் தீவிரவாதச் செயல்களைக் கட்டுப்படுத்திய பெருமைக்குரியவர். மணிப்பூரில் நம் ராணுவ வீரர்கள் 18 பேரை நாகா தீவிரவாதிகள் கொன்றுவிட்டு எல்லை தாண்டி மியான்மர் காட்டுக்குள் சென்று பதுங்க, அங்கு போய் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்தியவர். காஷ்மீரின் உரி பகுதியில் ஜெய்ஷ் இ முகமது அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள், 19 ராணுவ வீரர்களைக் கொன்றுவிட்டு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்ப் பகுதியில் சென்று அடைக்கலம் புகுந்தனர். அங்கு சென்று நம் ராணுவம் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்தித் தீவிரவாத முகாம்களை அழிப்பதற்குத் திட்டமிட்டுக் கொடுத்தவர் ராவத். இப்படி அவரது வீரமும் விவேகமும் ஒவ்வொரு தருணத்திலும் வெளிப்பட்டுக்கொண்டே இருந்தது.

அதனால்தான் ராணுவம், கப்பல்படை, விமானப்படை என்று முப்படைகளையும் ஒருங்கிணைக்கும் ஒரு தலைமை வேண்டும் என்று மத்திய அரசு முடிவு செய்தபோது, அதற்கு மிகவும் பொருத்தமானவரான பிபின் ராவத் தேர்ந்தெடுக்கப்பட்டார். நாடு தனக்குக் கொடுத்த மிகப்பெரிய பொறுப்பை உணர்ந்த அவர், மாறிவிட்ட யுத்தக் களங்களுக்கு ஏற்ப நம் முப்படைகளை நவீனப்படுத்துவதில் கவனம் செலுத்திவந்தார்.

தலையங்கம்
தலையங்கம்

நாகாலாந்தில் ஒருமுறை அவர் புறப்பட்ட ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. அதில் நல்வாய்ப்பாக பிபின் ராவத்தும் மற்ற வீரர்களும் உயிர்தப்பினர். ‘`நான் வீரம் செறிந்த உத்தரகாண்ட் மலைப்பிரதேசத்தில் பிறந்தவன். புகழ்பெற்ற கூர்க்கா படைப்பிரிவில் பயிற்சி பெற்றவன். இதுபோன்ற விபத்துகள் எல்லாம் என்னை எதுவும் செய்யாது’’ என்று மரணத்தின் வாசல்வரை சென்றுவந்த பதற்றமே இல்லாமல் பிபின் ராவத் அப்போது சொல்லி அனைவரையும் வியக்க வைத்தார். காலம் அப்படி ஒரு நல்வாய்ப்பை நாட்டிற்கு இன்னொரு முறை கொடுக்கவில்லை.

இமயமலையை ஒட்டிய உத்தரகாண்ட் மலைப்பிரதேசத்தில் தோன்றிய பிபின் ராவத் என்ற நட்சத்திரம், நாட்டின் தென்பகுதியில் இருக்கும் மேற்குத் தொடர்ச்சி மலையில் மறைந்துவிட்டது. நட்சத்திரங்கள் சில சமயங்களில் கண்களை விட்டு மறையும். ஆனால், நம் நினைவை விட்டு என்றும் மறையாது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz