Published:Updated:

அதிகாரிகள் பகடைக்காய்கள் இல்லை!

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

தலையங்கம்

அதிகாரிகள் பகடைக்காய்கள் இல்லை!

தலையங்கம்

Published:Updated:
தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

இந்தியாவில் நிலவும் கூட்டாட்சி அமைப்பின் ஆணிவேர் என்று அகில இந்திய ஆட்சிப் பணிகளைச் சொல்லலாம். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் போன்ற ஆட்சிப் பணி அதிகாரிகளை மத்திய அரசு தேர்ந்தெடுத்து நியமிக்கும். இவர்கள் பல்வேறு மாநிலங்களில் பணிபுரிய அனுப்பி வைக்கப்படுவார்கள். டெல்லியில் இருந்துகொண்டு மத்திய அரசு எடுக்கும் கொள்கை முடிவுகளையும் உருவாக்கும் திட்டங்களையும் கடைக்கோடி கிராமம் வரை கொண்டு சேர்ப்பது இவர்கள்தாம்.

மாநில அரசின்கீழ் பணிபுரிந்தாலும், இவர்கள் மத்திய அரசு நியமித்த அதிகாரிகளே! சுதந்திரம், பாதுகாப்பு உணர்வு மற்றும் திறந்த மனத்துடன் இவர்கள் பணிபுரியவே இப்படிப்பட்ட நியமன முறை இருக்கிறது. ‘இந்தியா போன்ற பன்முகத்தன்மை வாய்ந்த நாட்டை ஒருங்கிணைத்து ஆட்சி புரிய இப்படிப்பட்ட முறை தேவை’ என்பதை உணர்ந்து சர்தார் பட்டேல் இதை உருவாக்கினார்.

அகில இந்திய ஆட்சிப் பணிகளுக்கான விதி 6(1)-ன் படி, ஒவ்வோர் ஆண்டும் மாநிலங்களிலிருந்து மத்திய அரசுக்கு மாற்றுப்பணியாகச் சில அதிகாரிகள் அனுப்பி வைக்கப்படுவார்கள். அதிகாரிகளின் விருப்பம் கேட்டு இந்த மாற்றுப்பணி வழங்கப்படும். சமீப ஆண்டுகளாக இப்படி மத்திய அரசுப்பணிக்குச் செல்லும் அதிகாரிகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்திருக்கிறது. இதனால் ஆள் பற்றாக்குறையில் மத்திய அரசு திண்டாடுகிறது.

எனவே, இந்த விதியில் நான்கு திருத்தங்களைச் செய்வதற்கு மத்திய அரசு எல்லா மாநில அரசுகளிடமும் கருத்து கேட்டுள்ளது. இதற்குத் தமிழகம் உள்ளிட்ட பத்து மாநில முதல்வர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ‘ஒவ்வோர் ஆண்டும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் அதிகாரிகளைக் கட்டாயம் அனுப்ப வேண்டும், ஒரு குறிப்பிட்ட சூழலில் ஓர் அதிகாரியை மத்திய அரசு கேட்டால் அனுப்பி வைக்க வேண்டும்’ ஆகிய இரண்டு திருத்தங்களையே பலரும் எதிர்க்கிறார்கள். அரசியல் பழிவாங்கலுக்கு இவை பயன்படுத்தப்படலாம் என்ற அச்சமே காரணம்.

கடந்த 2001-ம் ஆண்டு, முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதி கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அந்தக் கைது நடவடிக்கையை மேற்கொண்ட முத்துக்கருப்பன், ஜார்ஜ், கிறிஸ்டோபர் நெல்சன் ஆகிய மூன்று ஐ.பி.எஸ் அதிகாரிகள், மாநில அரசின் ஒப்புதல் இல்லாமலே மத்திய அரசுப் பணிக்கு அழைக்கப்பட்டனர். அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, அவர்களை அனுப்ப மறுத்தார். கூட்டணியில் இருக்கும் தி.மு.க-வின் வற்புறுத்தலால் மத்திய பா.ஜ.க அரசு அரசியல் செய்வதாகக் குற்றம் சாட்டினார். 2020 டிசம்பரில் இதேபோல மேற்கு வங்காள ஐ.பி.எஸ் அதிகாரிகள் மூன்று பேர் மத்திய அரசுப் பணிக்கு அழைக்கப்பட்டனர். மம்தா பானர்ஜி அவர்களை அனுப்ப மறுத்தார். அதன்பின் மேற்கு வங்காள தலைமைச் செயலாளர் ஆலபன் பந்தோபாத்யாயவுக்கும் இப்படி ஒரு நெருக்கடி ஏற்பட்டது. அவர் பதவியை ராஜினாமா செய்தார். இதுபோன்ற சூழல்களைத் தவிர்க்க, இருதரப்புக்கும் இணக்கமான முறையில் அதிகாரிகளை அனுப்பி வைக்க ஒரு நடைமுறையை உருவாக்க வேண்டும்.

அதிகாரிகள் பகடைக்காய்கள் இல்லை!

அதேநேரத்தில், பல மாநிலங்களில் திறமையான அதிகாரிகளை எந்தப் பொறுப்பும் கொடுக்காமல் ஓரங்கட்டி வைப்பதும் நடக்கிறது. நேர்மையான அதிகாரிகள் கட்டாயக் காத்திருப்பில் வைக்கப்படுவதும், அரசியல்வாதிகளுடன் அனுசரித்துப் போகிறவர்கள் முக்கிய பதவிகளை அலங்கரிப்பதும் தொடர்கிறது. இதைத் தடுக்கவும் ஒரு விதித் திருத்தம் தேவைப்படுகிறது. அதிகாரிகளை அரசியல் பகடைக்காய்களாக மாற்றும் இத்தகைய சூழல், அவர்களின் ஈடுபாட்டை மழுங்கடித்துவிடக் கூடும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism