Published:Updated:

மதிப்புக்குரிய வாசகப் பெருமக்களே!

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

அன்பு வணக்கம்!

மதிப்புக்குரிய வாசகப் பெருமக்களே!

அன்பு வணக்கம்!

Published:Updated:
தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

`பழையதே புதியது’ என்கிற ஒரு சொல்லாடல் உண்டு. அந்த வகையில் யெஸ்டி புதியதே!

ஜாவா மோட்டார் சைக்கிள்களுக்கு எப்படி ஒரு Cult ஸ்டேட்டஸ் இருக்கிறதோ, அப்படி ஒரு ஸ்டேட்டஸ் யெஸ்டி பைக்ஸுக்கும் உண்டு. ஜாவா உயிர்த்தெழத் துணை நின்ற மஹிந்திரா, இப்போது யெஸ்டி உயிர்த்தெழவும் உதவியிருக்கிறது. கால் நூற்றாண்டு காலத்துக்குப் பிறகு களம் கண்டிருக்கும் யெஸ்டி, எடுத்த எடுப்பிலேயே ரோட்ஸ்ட்டர், ஸ்க்ராம்ப்ளர், அட்வென்ச்சர் என்று ஒரே சமயத்தில் மூன்று அவதாரங்களில் அறிமுகமாகியிருக்கிறது. ஜாவா மோட்டார் சைக்கிள்கள் விற்பனையாகும் அதே க்ளாஸிக் லெஜெண்ட்ஸ் ஷோரூம்களில் இவை விற்பனைக்கு வந்திருக்கின்றன.

சாகசம், விடுதலை, வேகம் ஆகிய வார்த்தைகளோடு மட்டுமல்ல; தன் ரசிகர்களின் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்தது அது. யெஸ்டி ரசிகர்களின் எதிர்பார்ப்புகள் உணர்வுப்பூர்வமானது என்பதால், அதைப் பூர்த்தி செய்வது ஒரு மிகப் பெரிய சவால். அந்தச் சவாலை யெஸ்டி எப்படி எதிர்கொண்டிருக்கிறது என்பதை இந்த இதழில் சொல்லியிருக்கிறோம்.

கொரோனா, ஒமிக்ரான், டெல்ட்டா, லாக்டவுன் என்று எது வந்தபோதிலும் சற்றும் அசராது தன் எஸ்யூவி அடையாளங்கள் கொண்ட எம்பிவியை அறிமுகப்படுத்தியிருக்கிறது கியா மோட்டார்ஸ். கியாவின் `ஸ்ட்ரைக்கிங் ரேட்’ நன்றாக இருக்கிறது என்பதால், கேரன்ஸ் ஹிட் அடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கின்றன. தொழில்நுட்பம் சார்ந்த பல புதிய அம்சங்களை இந்த காரில் கியா அள்ளி வழங்கியிருக்கிறது என்பதால்... போட்டியாளர்களும் இவற்றை எல்லாம் கொடுத்தாக வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகியிருக்கிறார்கள். அந்த வகையில் கியா வாடிக்கையாளர்களுக்கு நல்லது செய்திருக்கிறது.

டெஸ்லாவின் இந்திய வருகை மீண்டும் பேசுபொருளாகியிருக்கிறது. மின்சார வாகன உற்பத்தியில் நாட்டில் 34 சதவிகிதத்தைத் தன்னகத்தே கொண்ட தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களும் அதைப் போட்டி போட்டுக்கொண்டு தங்கள் மாநிலத்துக்கு வந்து தொழிற்சாலையைத் துவங்க எலான் மஸ்க்குக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்கள். `டெஸ்லா கார்களை இறக்குமதி செய்து இந்தியாவில் விற்பனை செய்ய வசதியாக வரிச்சலுகை கொடுங்கள்’ என்று எலான் மாஸ்க் கேட்கிறார். டெஸ்லாவுக்கு மட்டும் வரிச் சலுகை கொடுத்தால், ஏற்கெனவே இங்கே தொழிற்சாலை அமைத்து மின்சாரக் கார்களை உற்பத்தி செய்யும் டாடா மற்றும் மஹிந்திரா போன்ற நிறுவனங்களுக்கு அது பாதகமாக அமையும். அது சமமான போட்டியை ஏற்படுத்தாது என்பதால், `முதலில் எங்கள் நாட்டில் உற்பத்தியைத் துவங்குங்கள்; வரிச்சலுகைகளைப் பற்றிப் பார்க்கலாம்’ என்கிறது இந்திய அரசு.

ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, திறந்த மனதோடு நேர்மையாகப் பேச்சுவார்த்தை நடத்தினால், எத்தகைய பிரச்சனையாக இருந்தாலும் தீர்வு கிடைக்கும் - டெஸ்லா பிரச்சனை உள்பட!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism