Published:Updated:

நமக்குள்ளே...

நமக்குள்ளே
பிரீமியம் ஸ்டோரி
News
நமக்குள்ளே

அவள் யூடியூப் சேனல் என இப்போது நாங்கள் உங்களை வந்தடைவதற்கான வழிகள் விரிந்திருக்கின்றன. இணைந்து பயணிப்போம்.

23-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது அவள் விகடன். நிச்சயமாக இது ஒரு சாதனைப் பயணம். வழியெங்கும் துணையாக நின்று இந்த வெற்றியை வசப்படுத்திய வாசகிகளுக்கு நன்றியும் அன்பும். இதழ் மட்டுமல்லாது விகடன் வலைதளம், அவள் யூடியூப் சேனல் என இப்போது நாங்கள் உங்களை வந்தடைவதற்கான வழிகள் விரிந்திருக்கின்றன. இணைந்து பயணிப்போம்.

பெருவிருந்துக்குப் பின்னான அடுப்படியின் மகிழ் களைப்பில் இருக்கிறோம். உங்களுக்குப் பார்த்துப் பார்த்து செய்திருக்கும் 23-ம் ஆண்டுச் சிறப்பிதழின் பக்கங்கள் குறித்து நீங்கள் பகிரப்போகும் கருத்துகளுக்குக் காத்திருக்கிறோம்.

பல பரிமாணங்களில் வாழ்வைப் பிரித்துப் படிக்க வைக்க... புதிய தொடர்கள் ஆரம்பமாகின்றன. ஆண்களின் உலகத்தை அவர்களின் புள்ளியிலிருந்து பேசும் `ஆண்களைப் புரிந்துகொள்வோம்', ஆன்மிக அறிவியலை எளிமையாக விளக்கும் `மெய்ப்பொருள் காண்பது அறிவு', டெக்னாலஜிக்கும் பெண்களுக்கும் இடையில் விழுந்துகிடக்கும் இடைவெளியைக் குறைக்கும் `கேட்ஜெட் கிளாஸ் ரூம்', மகிழவைத்து வாழும் பெண்களை அறிமுகப்படுத்தும் `சேவைப் பெண்கள்', பெண்களுக்கு அரசு வழங்கும் உதவிகளை விளக்கும் `அரசுத் திட்டங்கள்...' எனத் தொடங்குகின்றன புதிய அத்தியாயங்கள்.

இன்னும், வாசகிகளின் பலதரப்பட்ட கேள்விகளுக்கும் பதிலளிக்கும் `அவள் பதில்கள்', மூளைக்கு வேலைகொடுக்கும் `புதிர்ப்போட்டி', அடுப்படி ஐயங்கள் தீர்க்கும் `சமையல் சந்தேகங்கள்', `குட் பிராக்டீஸ்'களை சொல்லிக்கொடுக்க அறிமுகமாகும் `iஅக்கா', சேனல் ஏரியா சுவாரஸ்யங்களைத் தொடுக்கும் `சேனல் சைட் டிஷ்.' கெட் செட் கோ. விசேஷ வீடுகளின் அழகு, இளமைப்பட்டாளம்தானே..? இதழியல் மாணவர்கள் மவுஸ் பிடித்து தயாரித்து அளித்திருக்கும் `2கே கிட்ஸ்', அப்படி ஓர் அனுபவமாக இருக்கும்.

இன்னும், ஆரோக்கியம், மனநலம், அழகு, ஃபேஷன், நிதி நிர்வாகம், நகைச்சுவை, பெண்ணியம், செலிபிரிட்டிகள்... உங்கள் மனம் விரும்பும் தேர்வுகளைப் பார்த்துப் பார்த்து கோத்திருக்கிறோம். மேலும், உங்களை அவள் இதழில் எழுத வைத்து அழகுபார்ப்பதற்கான பக்கங்களும் உள்ளன.

தாய்வீட்டுக்கு வந்து திரும்பும் மகளுக்குப் புதுப்புடவை முதல் தோட்டத்துக் காய்வரை எல்லாம் கொடுத்த பின்னரும், இன்னும் என்ன கொடுக்கலாம் என அலைபாயும் அம்மாவின் மனது. அப்படித்தான், இதழ் முடித்த பின்னரும் எங்கள் தேடல் முடியவில்லை. அடுத்த இதழ் தயாரிப்பில் உங்களுக்குப் பிடித்தவற்றை எல்லாம் கொண்டுசேர்க்க... இதோ இப்போதே கிளம்பிவிட்டோம்.

நமக்குள்ளே...