கட்டுரைகள்
Published:Updated:

இது நம்பிக்கைத் துரோகம்!

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
தலையங்கம்

தலையங்கம்

கொரோனாவும் ஊரடங்கும் இந்தியப் பொருளாதாரத்தில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. ஆனால் அதைக் காரணம் காட்டி மாநிலங்களுக்குத் தர வேண்டிய ஜி.எஸ்.டி நிலுவைத்தொகையை மத்திய அரசு தர மறுப்பது இந்திய ஜனநாயகத்துக்கும் கூட்டாட்சித் தத்துவத்துக்கும் முற்றிலும் எதிரானது.

‘மத்திய மற்றும் மாநில அரசுகளால் வசூலிக்கப்படும் பலமுனை வரிகளுக்குப் பதிலாக ஒரே வரி’ என்றுதான் 2017-ல் ஜி.எஸ்.டியை மத்திய அரசு கொண்டுவந்தது. இதனால் மாநில அரசுகளுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுகட்டுவதற்கான தொகையை ஐந்தாண்டுகளுக்கு மத்திய அரசு வழங்கும் என்று உறுதியளிக்கப்பட்டது. ஆனால் மூன்று நிதியாண்டுகளுக்குத் தமிழகத்துக்கு வழங்கவேண்டிய நிலுவைத்தொகையான ரூ.12,254.94 கோடியை மத்திய அரசு வழங்கவில்லை. இந்த நிலுவைத்தொகையை வழங்கவேண்டும் என்று சமீபத்தில் நடந்த ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தியது. மற்ற மாநில அரசுகளும் இதே கோரிக்கையை முன்வைத்தன.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனோ மத்திய அரசு நிலுவைத்தொகை வழங்குவதற்குப் பதிலாக, ‘மாநில அரசுகள் குறைந்த வட்டியில் ரிசர்வ் வங்கியிடம் கடன்பெற்றுக்கொள்ளலாம்’ என்று யோசனை தெரிவித்திருக்கிறார். மேலும் ‘கொரோனா பாதிப்பு கடவுளின் செயல்’ என்று நிலுவைத்தொகை வழங்கப்படாததற்கான காரணமாகவும் கூறியிருக்கிறார். ஏற்கெனவே நிதிப்பற்றாக்குறையாலும் கடன் சுமையாலும் தவிக்கும் மாநில அரசுகளின்மீது மேலும் கடன்சுமையை ஏற்றுவது என்ன நியாயம்?

ஜி.எஸ்.டி முறையைக் கொண்டுவந்தபோது அளித்த உறுதிமொழியை மத்திய அரசு மீறுவது என்பது மன்னிக்கவே முடியாத நம்பிக்கைத் துரோகம். கொரோனா பாதிப்பு என்பது கடந்த ஆறு மாதங்களாக ஏற்பட்டிருக்கும் பேரிடர். ஆனால் மத்திய அரசோ மூன்று நிதியாண்டுகளாக மாநிலங்களுக்கு வழங்கவேண்டிய ஜி.எஸ்.டி நிலுவைத்தொகையை வழங்காமலிருக்கிறது. இது தார்மிக நியாயம் கிடையாது. கொரோனா பாதிப்பு தவிர்க்கவே முடியாத பெருந்துயர் என்பது உண்மைதான். ஆனால் இதன் தாக்கம் மத்திய அரசை மட்டுமல்ல, மாநில அரசுகளையும் கடுமையாக பாதித்துள்ளது என்பதைக் கணக்கிலெடுக்காமல் மத்திய அரசு செயல்படுவது எப்படி சரியாகும்?

கொரோனாவால் இந்தியப் பொருளாதாரம் பாதிக்கப்பட்டபோது, பல்வேறு பிரிவினருக்கும் மத்திய அரசு 20 லட்சம் கோடி ரூபாயை ஒதுக்கித் திட்டங்களை அறிவித்தது. அதேபோல்தான் மாநிலங்களின் பொருளாதாரம் பாதிக்கப்படும்போதும் அதைச் சீர்செய்ய வேண்டியது மத்திய அரசின் கடமை. ரிசர்வ் வங்கி மூலம் கூடுதல் ரூபாய் நோட்டுகளை அச்சடித்தோ, கடன் பத்திரங்களைத் தானே வெளியிட்டு நிதி திரட்டியோ ஜி.எஸ்.டி நிலுவைத்தொகையை மாநில அரசுகளுக்கு அளிக்க மத்திய அரசு முன்வர வேண்டும்.

இதை விட்டுவிட்டு மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி நிலுவைத்தொகை வழங்காமல் மத்திய அரசு பொறுப்புகளைத் தட்டிக்கழிப்பதும் உறுதிமொழிகளை மீறுவதும் கூட்டாட்சியின் அடித்தளத்துக்கு ஆபத்து விளைவிக்கும்.