சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

சாதனையில் மகிழ்வோம்... எச்சரிக்கை தேவை!

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
தலையங்கம்

தலையங்கம்

இந்தியாவின் முதல் கொரோனாத் தடுப்பூசி ஜனவரி 16 அன்று போடப்பட்டது. 278 நாள்களில் 100 கோடித் தடுப்பூசிகள் என்ற சாதனை இலக்கை நாம் எட்டியுள்ளோம். மத்திய, மாநில அரசுகளும், மருந்து நிறுவனங்களும், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளன. ‘‘இந்த சாதனையின் பின்னால் 130 கோடி இந்தியர்கள் உள்ளனர். இது அவர்களின் வெற்றி’’ என்று பெருமிதத்துடன் கூறியுள்ளார், பிரதமர் நரேந்திர மோடி.

வயது வந்தவர்களுக்கான இதுபோன்ற தடுப்பூசி இயக்கத்தை நம் நாடு இதுவரை மேற்கொண்டதே இல்லை. அதற்குத் தேவையான முன் அனுபவமும் நமக்கு இல்லை. இருப்பினும், செயற்கரிய இந்தச் செயலை நம் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், தன்னார்வலர்கள் என அனைத்து முன்களப்பணியாளர்களும் இணைந்து சாத்தியமாக்கியுள்ளனர். உயிர்க்கவசம் தந்த இந்தக் கொடையாளிகளின் அர்ப்பணிப்புணர்வையும் உழைப்பையும் என்றென்றும் மக்கள் மனதில் வைத்திருப்பார்கள்.

இது சாதனைதான் என்றாலும், நமது இலக்கு எது என்பதை மறக்கக்கூடாது. 130 கோடி மக்கள்தொகை கொண்ட நம் நாட்டில், முதல் தவணைத் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டவர்கள் 51 சதவிகிதம் என்றால், இரண்டு தவணைத் தடுப்பூசிகளையும் செலுத்திக்கொண்டவர்கள் 21.9 சதவிகிதம்தான். பல நாடுகளில் ஒரு தவணை போட்டுக்கொண்டவர்களுக்கும், இரண்டு தவணை போட்டுக்கொண்டவர்களுக்கும் வித்தியாசம் குறைவாகவே இருக்கிறது. இந்தியாவில்தான் இது அதிகம். இரண்டாவது தவணைக்கான காலக்கெடுவை அதிகரித்ததே இதற்குக் காரணம். இந்தியாவில் 12 முதல் 16 வாரங்கள் கழித்து இரண்டாவது தவணைத் தடுப்பூசி போடப்படுகிறது. உலகிலேயே இந்தக் காலக்கெடு இந்தியாவில்தான் அதிகம்.

தலையங்கம்
தலையங்கம்

தடுப்பூசிகள் தாராளமாகக் கிடைக்கும் இந்த நேரத்தில் இந்தக் காலக்கெடுவைக் குறைத்து, இரண்டு தவணை போட்டுக்கொண்டவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது முக்கியம். இன்னமும் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கும் விரைவில் தடுப்பூசி அளிப்பது அவசியம்.

18 வயதுக்குக் கீழே இருப்பவர்களுக்கான தடுப்பூசியும் இந்தியாவில் அவசர கால அனுமதி பெறும் நிலையில் உள்ளது. என்றாலும், ‘‘18 வயதுக்கு மேலே உள்ள எல்லோருக்கும் இரண்டு தவணைத் தடுப்பூசிகளைப் போடுவதே முதல் பணி’’ என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தொற்றுநோய்ப் பிரிவுத் தலைவர் டாக்டர் சமீரன் பாண்டா கூறியுள்ளதை அரசு கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

கொரோனா காலக் கட்டுப்பாடுகளில் பெரும்பாலானவை தளர்த்தப்பட்டுவிட்டன என்றாலும், நாம் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். உலகிலேயே அதிகம் பேருக்குத் தடுப்பூசி போட்டிருக்கும் சீனாவிலும் கொரோனாத் தொற்று சில பகுதிகளில் பரவுகிறது. ஐரோப்பிய நாடுகளிலும் இஸ்ரேலிலும் புதுவகை கொரோனாத் தொற்று அச்சுறுத்துகிறது. துர்கா பூஜைக் கொண்டாட்டங்களுக்குப் பிறகு மேற்கு வங்காளம், அசாம் போன்ற மாநிலங்களில் தொற்று அதிகரித்துள்ளது.

இதோ தீபாவளி வருகிறது... பயணங்களிலும் பண்டிகைக் கொண்டாட்டங்களிலும் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை இந்த அனுபவங்கள் உணர்த்துகின்றன. ‘100 கோடித் தடுப்பூசி’ என்ற சாதனையில் மகிழ்ந்து அலட்சியமாக இருந்துவிடாமல், எல்லோருக்கும் தடுப்பூசி என்ற இலக்கை விரைவில் எட்டுவோம். அதுவரை கொரோனாத் தற்காப்பு வழிமுறைகளை மறக்காமல் இருப்போம்.