பிரீமியம் ஸ்டோரி

மிழ்நாட்டின் தலைநகர் சென்னையின் மெரினா கடற்கரை... அதிகாலை நடைப்பயிற்சி நேரம், பேசிக்கொண்டே பலரும் நடக்கிறார்கள். அநேகம் பேர் பேசுவது ஆங்கிலம். இடையிடையே இந்தி, சுந்தரத்தெலுங்கெல்லாம் ஓங்கி ஒலிக்கின்றன. இவற்றுக்கு நடுவே கொஞ்சம்போல் தமிழும்!

தனிப்பெருமைமிக்க தமிழ்நாடு!

‘மொழிதான் ஓர் இனத்தின் அடையாளம். ஆனால், அதை எவ்வளவு வேகமாக தமிழினம் இழந்துகொண்டிருக்கிறது’ என யோசித்தபோது, கடற்கரையின் குளிரையும் தாண்டி வியர்க்கவே செய்தது. கடந்த 20 ஆண்டுகளில் பேச்சு, எழுத்து, வாசிப்பு என எல்லாவற்றிலும் தேய்ந்துகொண்டிருக்கிறது தேமதுரத்தமிழ். மொழி, கலை, உணவு, உடை, பண்பாடு எல்லாவற்றிலும் தன் தடத்தை தமிழ்மண் கொஞ்சம் கொஞ்சமாகத் தொலைத்துக்கொண்டிருக்கிறது. ரயில்நிலையம், தபால்நிலையம், விமானநிலையம் எனப் பல்வேறு இடங்களிலும் வேலையில் இருக்கும் தமிழர்களின் எண்ணிக்கை அருகிக்கொண்டே வருகிறது. போட்டித்தேர்வுகளில்கூட புறக்கணிக்கப்படுகிறது தமிழ்நாடு.

ஆறுகள் மடிந்துகொண்டிருக்கின்றன, மலைகள் கரைந்துகொண்டிருக்கின்றன, நதிகளின் தாய்மடியான காடுகள் காணாமல்போய்க்கொண்டிருக்கின்றன. வருங்கால சந்ததியை நினைக்காமல், வாக்குவங்கிக்காக மட்டுமே திட்டங்கள் தீட்டப்படுகின்றன. தன்னலமற்ற, தன்னிகரற்ற தலைவர்கள் எவரையும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை காண முடியவில்லை.

ஊழலிலும் லஞ்சத்திலும் உச்சம் தொட்டு நிற்கிறது தமிழ்நாடு. ‘ஆட்சியாளர்கள் எவ்வளவு வேண்டுமானாலும் கொள்ளையடிக்கட்டும். நமக்கான பங்கை தேர்தலுக்குத் தேர்தல் கொடுத்தால் போதும்’ என்ற மனநிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள், தமிழ்நாட்டின் பெரும்பாலான வாக்காளர்கள். ஒருகாலத்தில் மாநில சுயாட்சிக்காக வீறுகொண்டு எழுந்த தமிழ்நாடு, எல்லா உரிமைகளையும் இழந்தாவது பதவியைக் காப்பதே அரசியல் அறம் என்று இப்போது வீழ்ந்து கிடக்கிறது.

அதேசமயம், இதே 20 ஆண்டுகளில் உள்கட்டமைப்பு, போக்குவரத்து, தொழில்வளம், உயர்கல்வி, மருத்துவம், தகவல் தொழில்நுட்பம், கண்டுபிடிப்பு, மின்ஆளுமை, நிர்வாகம் என எல்லாவற்றிலும் பல மாநிலங்களைப் பின்னுக்குத் தள்ளி பீடுநடைபோடுகிறது தமிழ்நாடு. இது ஆறுதல் தரும் விஷயம். ஆனால், இதுமட்டுமே தேறுதலைத் தந்துவிடாது. இப்படியான சூழலில்தான் ‘ஜூனியர் விகடன் 2020 ஸ்பெஷல் - கழுகுப்பார்வை’ சிறப்புக் கட்டுரைகளின் தொகுப்பாக இந்த நூலை வெளியிடுகிறோம்.

கழுகுப்பார்வை
கழுகுப்பார்வை

தமிழ்நாட்டின் தனித்த வளர்ச்சி, உள்ளாட்சிகளில் என்ன சீர்திருத்தம் தேவை, நல்ல தமிழில் எழுதுவது எப்படி, இலங்கையில் ஈழத்தமிழர் இனப்படுகொலை செய்யப்பட்ட வரலாறு, 2019-ம் ஆண்டு நீதித்துறையில் ஏற்பட்ட சீரழிவுகள் உட்பட பலவற்றையும் நேர்கொண்ட பார்வையுடன் இந்தச் சிறப்பிதழில் அலசுகிறார்கள் துறைசார்ந்த வல்லுநர்கள். தவிர, கடந்த 20 ஆண்டுகளில் நாம் எதிர்கொண்ட மாற்றங்கள் என்ன, பரிணாம வளர்ச்சிகள் என்ன, பிரச்னைகள் என்ன, தீர்வுகள் என்ன என்பதையும் விரிவாக இதில் அலசியிருக்கிறோம்.

ஆயிரம் பிரச்னைகள் இருந்தாலும்கூட, ஒட்டுமொத்த வளர்ச்சிப்பாதையில் தனிப்பெருமையுடன் நிற்கிறது தமிழ்நாடு! இந்த வெற்றிப்பயணம் தொடரட்டும்....

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு