Published:Updated:

விழித்திருப்போம்... விரட்டுவோம்!

பசுமை விகடன்
பிரீமியம் ஸ்டோரி
News
பசுமை விகடன்

அனைவருக்கும் பசுமை வணக்கம்!

‘வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும்.’

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நோய்களை எதிர்கொள்ள எப்படி எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதைத் திருவள்ளுவர் சொல்லிவைத்திருக்கிறார். அது இன்றைய இன்டெர்நெட் காலத்துக்கும் ஏற்றதாகவே இருக்கிறது. `கொரோனா வைரஸ்’ (Coronavirus) என்ற நச்சுயிரி பூவுலகைப் புரட்டிப்போட்டுவருகிறது. `நாகரிகத்தில், தொழில்நுட்பத்தில் நாங்கள்தான் சிறந்தவர்கள்’ என்று மார்தட்டிப் பேசிவந்த மேலை நாடுகள், இந்த நச்சுயிரியைக் கண்டு நடுங்கிக் கொண்டிருக்கின்றன. கண்டம்விட்டு கண்டம் பாயும் அணு ஆயுதங்களைக் கண்டறிந்த நாடுகளால்லகூட இந்த நச்சுயிரியைக் கட்டுப்படுத்த முடியாமல் கையைப் பிசைந்துகொண்டிருக்கின்றன.

சீனாவில் தொடங்கிய இந்த பாதிப்பு உலகம் முழுக்கப் பரவிவருகிறது. சீனாவுக்கு அண்டை நாடான இந்தியாவையும் இது விட்டுவைக்கவில்லை. இந்தியாவினுள்ளே ஊடறுத்துப் பாய்ந்து வருகிறது. `வேகமாகப் பரவிவரும் தொற்றுநோய் இது’ என்று உலகச் சுகாதார நிறுவனம் எச்சரிக்கை செய்திருக்கிறது. ‘`கைகுலுக்குவதைவிட, வணக்கம் வைப்பதுதான் நல்லது என்பதை இந்தியாவில் கற்றுக்கொண்டேன்’’ என்று அமெரிக்க அதிபர் நம் வாழ்க்கை முறையைப் பாராட்டியிருக்கிறார்.

கொள்ளை நோய்களை எப்படிக் கையாள வேண்டும் என்பதை நம் வாழ்க்கை முறையைக் கொஞ்சம் கவனித்துப் பார்த்தாலே, அதிலுள்ள கலையும் நுட்பமும் தெரியும். ‘அம்மைநோய் ஒருவரைத் தாக்கிவிட்டால், அந்த நபரை வீட்டைவிட்டு வெளியே அனுப்ப மாட்டோம். வீட்டைச் சுத்தம் செய்து, வேப்பிலையை வீட்டு வாசலில் கட்டிவைப்போம். உணவு தொடங்கி உடை வரை அனைத்திலும் எச்சரிக்கையாக இருப்போம். அம்மைநோய் நீங்கும் வரை அந்த வீட்டுக்கு அக்கம் பக்கத்தினர் வர மாட்டார்கள். இவர்களும் மற்றவர்கள் வீட்டுக்குச் செல்ல மாட்டார்கள். இதைத்தான் இப்போது, ‘நோய் பரவுவதைத் தடுக்கச் சமூக இடைவெளியுடன் இருப்போம்’ எனச் சொல்லிவருகிறார்கள்.

வைரஸ் தாக்குதல், பாக்டீரியா பரவுதல்... போன்ற எதிர்பாராத இயற்கை இடர்பாடுகளை எப்படிக் கையாள வேண்டும் என்பது மற்றவர்களைவிட பசிப்பிணிப் போக்கும் பயிர் மருத்துவர்களான உங்களுக்கு நன்றாகவே தெரியும். `கிராமத்தில் இருக்கிறோம்; வயல்வெளியில் உழைக்கிறோம்; நம்மையெல்லாம் கொரோனா தாக்காது’ என்று இருந்துவிடாதீர்கள். அனைவரும் விழிப்புணர்வுடனிருந்து, அந்த நச்சுயிரியை விரட்டியடிப்போம்; நல்வாழ்வு பெறுவோம்.

- ஆசிரியர்