Published:Updated:

பாதிக்கப்படுவது அடித்தட்டு மக்கள்தான்!

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

தலையங்கம்

பாதிக்கப்படுவது அடித்தட்டு மக்கள்தான்!

தலையங்கம்

Published:Updated:
தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

‘`வசூலில் பல சாதனைகளை முறியடித்த RRR திரைப்படம் போல இந்தியப் பொருளாதாரமும் பல சாதனைகளை முறியடிக்கும்’’ என்று கூறியிருக்கிறார், மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர். இந்தியாவின் ஏற்றுமதி கொரோனா காலத்துக்குப் பிறகு இப்போது உச்சம் தொட்டிருக்கிறது. ஜி.எஸ்.டி வசூலும் அதிகரித்துள்ளது. இவை எல்லாமே பொருளாதார வளர்ச்சியை உணர்த்தும் குறியீடுகள் என்கிறார் அவர்.

ஆனால் இன்னொருபுறம், தொழில் துறை வளர்ச்சியை உணர்த்தும் முக்கியமான குறியீடுகளான மின் உற்பத்தி, இரும்பு உற்பத்தி, கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு போன்றவை பெரிய அளவில் வீழ்ச்சியடைந்திருக்கின்றன. பணவீக்க விகிதமும் கவலைக்குரிய நிலையில் இருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. கொரோனா காலத்துக்குப் பிறகு தொழில் துறையும் தனிநபர் குடும்பப் பொருளாதாரமும் இன்னமும் சீரடையவில்லை என்பதையே இவை உணர்த்துகின்றன.

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வும்; சுங்கச்சாவடிக் கட்டண உயர்வும் இந்த நிலையை இன்னும் மோசமாக்கும். காய்கறி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலைவாசியில் இவை நேரடியாக எதிரொலித்துள்ளன. அலுவலகம் செல்கிறவர்கள், வியாபாரிகள், சிறுதொழில் செய்கிறவர்கள், தொழிலாளர்கள் என அனைத்துத் தரப்பினருமே பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆட்டோ, டாக்ஸி டிரைவர்கள், வீதிவீதியாக வாகனத்தில் சென்று காய்கறி, கீரை போன்றவற்றை விற்கும் சிறு வியாபாரிகளில் இருந்து இ-காமர்ஸ் பொருள்கள் டெலிவரி செய்யும் லட்சக்கணக்கான இளைஞர்கள் வரை அனைவரின் வாழ்வாதாரமும் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பெருமளவில் பாதிக்கப்பட்டிருக்கிறது. வர்த்தகத்துக்காகப் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்வால் சாலையோரக் கடைகளில் விற்கப்படும் டீ முதல் தள்ளுவண்டியில் விற்பனையாகும் இட்லி, தோசை விலை வரை ஏறிவிட்டது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை ஏற்றத்தைப் பொறுத்தே எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலையை நிர்ணயித்துக்கொள்ளலாம் என்று மத்திய அரசு கொள்கை முடிவு எடுத்துப் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. என்றாலும், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏறும்போது உயரும் பெட்ரோல், டீசல் விலை, கச்சா எண்ணெய் விலை குறையும்போது இறங்குவதில்லை. அதேபோல தேர்தல் அறிவிப்புகள் வரும் நேரங்களில் விலை உயர்வதில்லை. பெட்ரோலியப் பொருள்களுக்கு உலகிலேயே அதிகமாக வரி விதிக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியாதான் உச்சத்தில் இருக்கிறது.

பொருளாதாரத்தை வைத்து மட்டும் பெட்ரோலியப் பொருள்களின் விலையை நிர்ணயம் செய்யாமல், ஏழை மக்களின் வாழ்வாதாரத்தைப் புரிந்துகொண்டும் செய்ய வேண்டும். எந்த ஒரு விலையேற்றமாக இருந்தாலும் உடனடியாக பாதிக்கப்படுவதும் அதிகம் பாதிக்கப்படுவதும் அடித்தட்டு மக்கள்தான்.

‘மத்திய அரசு மூலதனச் செலவுகளை அதிகரிப்பதும், வேலைவாய்ப்புகளை உருவாக்குவதுமே கொரோனா பாதிப்புகளிலிருந்து குடும்பப் பொருளாதாரம் மீள்வதற்கு வழிவகுக்கும்’ என்று பொருளாதார நிபுணர்கள் சொல்கிறார்கள். அதைச் செய்யாமல் விலைகளை உயர்த்திக்கொண்டே போவது எந்த வகையிலும் பலன் தராது.