Published:Updated:

ஆங்கில வெறுப்பு அவசியம் இல்லை!

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

தலையங்கம்

ஆங்கில வெறுப்பு அவசியம் இல்லை!

தலையங்கம்

Published:Updated:
தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

மீண்டும் ஒருமுறை அரசியல் களத்தில் மொழி பற்றிய விவாதம் விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. அலுவல் மொழிக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் 37வது கூட்டம் கடந்த வாரம் நடைபெற்றது. இந்த நாடாளுமன்றக் குழுவுக்குத் தலைவராக இருப்பவர், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா. அலுவல் மொழி நிலைக்குழுவின் தலைவராக அமித் ஷா அந்தக் கூட்டத்தில் பேசிய உரையே சர்ச்சைக்கான அடித்தளம்.

“அரசு நடைமுறைகளுக்கான மொழியாக இந்தியைப் பயன்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி முடிவெடுத்திருக்கிறார். இந்திக்கான முக்கியத்துவத்தை இது அதிகரிக்கும். வெவ்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் தங்களுக்குள் உரையாடும்போது, இந்தியாவின் மொழியான இந்தியைப் பயன்படுத்த வேண்டும். உள்ளூர் மொழிகளுக்கு மாற்றாக இல்லாமல், ஆங்கிலத்துக்கு மாற்றான இணைப்பு மொழியாக இந்தியைப் பயன்படுத்த வேண்டும்’’ என்பது அமித் ஷா உரையின் சுருக்கம். அமித்ஷாவின் கருத்துக்குத் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களிலும், வடகிழக்கு மாநிலங்களிலும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

ஒரு மொழி என்பது எந்த அளவுக்கு ஒரு சமூகத்தின் பண்பாட்டை வெளிப்படுத்துகிறதோ, அதே அளவுக்கு ஒரு சமூகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும் அடித்தளமாக விளங்குகிறது. பிரிட்டன் மற்றும் அமெரிக்காவைப் போல அதிகம் பேர் ஆங்கிலம் அறிந்த சமூகமாக நாம் இருந்ததே இந்தியர்களின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவியது என்பதை யாரும் மறுக்க முடியாது. இன்று அமெரிக்காவில் மூன்றாவது தலைமுறையாக இந்தியர்கள் கோலோச்சுகிறார்கள். மைக்ரோசாஃப்டில் சத்யா நாதெல்லா, கூகுளில் சுந்தர் பிச்சை எனப் பல முன்னணி நிறுவனங்களில் இந்தியர்கள் தலைமைப் பொறுப்பு வகிப்பதற்குத் தொழில்நுட்ப அறிவு தாண்டி ஆங்கில மொழிவளமும் முக்கியமான காரணம். ஐ.டி சேவைத்துறையில் இந்தியா முன்னணியில் இருப்பதற்கு ஆங்கில மொழியறிவே அடிப்படை. பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகள் இதில் இந்தியாவுடன் போட்டி போட ஆங்கிலவழிக் கல்வியைத் தீவிரமாக நடைமுறைப்படுத்துகின்றன.

ஆங்கில மொழியறிவு தரும் பொருளாதாரப் பலன்களை உணர்ந்து இப்போது சீனாவிலும் ஆங்கிலம் படிப்பது அதிகரித்துவருகிறது. இங்கேயும் தாய்மொழிக் கல்வியைத் தாண்டி ஆங்கிலவழிக் கல்வியை நாடுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தனியார் பள்ளிகளின் அசுர வளர்ச்சிக்கு அதுவே காரணமாக உள்ளது.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வி அறிமுகமாகியுள்ளது. ஆந்திராவிலும் இப்படி உள்ளது. தெலங்கானா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களின் பள்ளிப் பாடநூல்களில் மாநில மொழி, ஆங்கிலம் என இரண்டு மொழிகளிலும் பாடங்கள் உள்ளன. வருங்கால வளர்ச்சிக்கு உதவும் ஆங்கிலத்தைத் தங்கள் பிள்ளைகள் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற பெற்றோர்களின் விருப்பமே இப்படிப் பல மாநில அரசுகளை முடிவெடுக்க வைத்திருக்கிறது. சீன மொழி மற்றும் ஸ்பானிஷைவிட ஆங்கிலம் பேசுவோர் எண்ணிக்கை உலக அளவில் குறைவு என்றாலும், இந்தியர்களுக்கு ஆங்கிலமே உலகத் தொடர்புமொழியாகப் பழகிவிட்டது.

நடைமுறை எதார்த்தத்தைப் புறந்தள்ளிவிட்டு ஒரு மொழியை மற்ற மொழி பேசும் மக்கள்மீது திணிப்பது வளர்ச்சிக்கு எதிரானது. இணைப்பு மொழி என்பதைத் தாண்டி வளர்ச்சிக்கான ஒரு கருவியாக மொழியறிவை இன்று உலகம் பார்க்கிறது. அந்த வகையில், ஆங்கில வெறுப்பு நமக்கு அவசியம் இல்லாத ஒன்று.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism