Published:Updated:

தீர்ப்பாயங்களைக் கலைப்பதுதான் தீர்வா?

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

தலையங்கம்

தீர்ப்பாயங்களைக் கலைப்பதுதான் தீர்வா?

தலையங்கம்

Published:Updated:
தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

வெவ்வேறு துறைகளில் மேல்முறையீடுகளைக் கவனித்து நீதி வழங்கிவந்த ஏழு தீர்ப்பாயங்களை, ஒரே ஓர் அவசரச் சட்டத்தின் மூலம் மத்திய அரசு கலைத்திருக்கிறது. இந்தத் தீர்ப்பாயங்களில் நிலுவையில் இருக்கும் வழக்குகளையெல்லாம் இனி நீதிமன்றங்கள் கவனிக்கும் என்றும் உத்தரவிடப்பட்டிருக்கிறது.

கடந்த பிப்ரவரியில் இதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மக்களவையில் நிறைவேறி, மாநிலங்களவையில் இது நிலுவையில் இருக்கிறது. எதிர்க்கட்சிகள் இதை நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்புமாறு கேட்டன. இதற்கு மத்திய அரசு சம்மதம் தெரிவித்திருந்த நிலையில், திடீரென இந்த அவசரச் சட்டம் போடப்பட்டிருக்கிறது.

மத்திய அரசு கலைத்திருக்கும் ஏழு தீர்ப்பாயங்களில், அறிவுசார் சொத்துரிமைத் தீர்ப்பாயமும் ஒன்று. ஓர் ஆராய்ச்சி மாணவரோ அல்லது சிறு குறு தொழில் நிறுவனங்களோ தங்கள் கண்டுபிடிப்பிற்குக் காப்புரிமை மறுக்கப்பட்டால், சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவந்த இந்தத் தீர்ப்பாயத்தை நாடி இதுநாள்வரை நீதிபெற்றுவந்தனர். இனிமேல் அவர்கள் நீதிமன்றத்தையே அணுகவேண்டும்.

தாவரவகைப் பாதுகாப்பு மேல் முறையீட்டுத் தீர்ப்பாயமும் கலைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் தாங்கள் உருவாக்கிய புதிய விதைகளுக்கான உரிமைகளைப் பதிவதற்கான விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால், இதுவரை இந்த மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தைத்தான் அணுகிவந்தார்கள். இனி விவசாயிகளும் நீதி வேண்டி, நீதிமன்றத்தின் நெடிய படிக்கட்டுகளில்தான் ஏறி இறங்க வேண்டியிருக்கும்.

திரைப்படச் சான்றிதழ் மேல்முறையீட்டுத் தீர்ப்பாயமும் கலைக்கப்பட்டிருக்கிறது. ‘இது கருத்துச் சுதந்திரத்தின் கழுத்துக்கு வந்திருக்கும் கத்தி’ என்று பாலிவுட் இயக்குநர்கள் கடுமையாக எதிர்க்கின்றனர். வட்டிக்குப் பணம் வாங்கித் திரைப்படம் எடுக்கும் ஒரு சிறிய தயாரிப்பாளரின் படத்துக்கு பிராந்திய தணிக்கை வாரியம் சான்றிதழ் மறுத்தாலோ, அல்லது, படத்தின் காட்சிகளை வெட்டச் சொன்னாலோ, மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தில் போய் முறையிட இதுவரை வழியிருந்தது. அங்கே சமூகத்தின் பலதரப்பட்டவர்களும் படத்தைப் பார்த்து, குறுகிய காலத்திற்குள் தீர்ப்பைச் சொல்லிவிடுவார்கள். இப்போது இந்த மேல் முறையீட்டுத் தீர்ப்பாயம் கலைக்கப்பட்டுவிட்டதால், சம்பந்தப்பட்ட மாநில உயர் நீதிமன்றத்தையே அணுக வேண்டும். மேல் முறையீட்டுக்காக நீதிமன்றம் செல்ல நேர்ந்தால் எத்தனை வருடங்கள் ஆகும் என்று சொல்லமுடியாது.

துறைசார் வல்லுநர்களே தீர்ப்பாயத்தில் இருப்பார்கள் என்பதால், வழக்கின் தன்மையைப் புரிந்துகொண்டு நீதி வழங்கிவந்தனர். நீதி விரைவில் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே இந்தத் தீர்ப்பாயங்கள் செயல்பட்டன. போதுமான எண்ணிக்கையில் நீதிபதிகள் இல்லாமலும், தேங்கிக் கிடக்கும் லட்சக்கணக்கான வழக்குகளின் சுமையைத் தாங்கமுடியாமலும் தள்ளாடிக்கொண்டிருக்கும் நீதிமன்றங்களில் இந்த வழக்குகள் பத்தோடு பதினொன்றாகவே பார்க்கப்படும்.

‘உச்ச நீதிமன்றம் பல ஆண்டுகளாகத் தந்துவரும் வழிகாட்டுதல்கள் அடிப்படையில்தான் இந்த அவசரச் சட்டம் போடப்பட்டுள்ளது. இந்தியாவின் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் தீர்ப்பாயத்துக்கு அலைவதைவிட, அந்தந்த மாநிலங்களில் இருக்கும் நீதிமன்றங்களில் நீதி பெறுவது எளிது’ என்கிறது மத்திய அரசு. எனினும், சுயேச்சையாக இயங்கும் இந்தத் தீர்ப்பாயங்களைக் கலைத்ததன் மூலம் பல சுதந்திர வெளிகளைச் சுருக்கியிருக்கும் மத்திய அரசு, நீதிமன்றங்களின் சுமையையும் அதிகரித்திருக்கிறது என்பதே உண்மை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism