பிரீமியம் ஸ்டோரி
‘உலகமே ஒரு கிராமம்’ (Global Village) என்று சொல்லி வந்ததை நிரூபணம் செய்திருக்கிறது இந்த ‘கொரோனா வைரஸ்’ என்ற நச்சுயிரி.

சின்ன நாடு, பெரிய நாடு என்ற பேதமில்லை... அனைத்து நாடுகளிலும் இந்த நச்சுயிரி நஞ்சு பரப்பி நடமாடிவருகிறது. அத்தனை தொழில்களும் முடங்கிக்கிடக்கின்றன. ஆனால், இந்தக் கடுமையான சூழ்நிலையிலும் கழனியில் சுற்றிச் சுழன்று வேலை செய்துவருகிறார்கள் விவசாயிகள். இவர்கள் மட்டும் பயிர்ச் சாகுபடியைத் தொடர்ந்து செய்யவில்லையென்றால், எல்லோரும் சாகும்படியாகும் என்பதை உலகம் உணரத் தொடங்கியிருக்கிறது. `உழவுத் தொழில்தான் உலகில் முதன்மையானது’ என்பது எல்லோராலும் மனமார ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிறது.

ஆனாலும், விவசாயிகள் விளைவித்த பொருள்களைச் சந்தைக்குக் கொண்டு செல்ல முடியாத சூழ்நிலை நிலவுகிறது. வயலில் வீணாவதைத் தடுக்க, சில பகுதிகளிலுள்ள விவசாயிகள் நகர மக்களுக்குக் காய்கறிகளைக் கொண்டு வந்து இலவசமாகக் கொடுத்துவருகிறார்கள். இப்படியொரு கருணை உள்ளம் விவசாயிகளுக்கு மட்டுமே உண்டு. நாடே நடுக்கத்தில் வீட்டில் அடங்கிக்கிடக்கும் நேரத்தில், நமக்காக உணவு உற்பத்தியில் இறங்கியிருக்கும் விவசாயிகளுக்கு நன்றி சொல்ல வேண்டிய நேரம் இது. நாட்டிலுள்ள ஒவ்வொருவரும் தங்களின் ஊதியத்தில் ஓரிரு சதவிகிதத்தைக் கொடுத்தால்கூட போதும்... விவசாயிகளின் தற்போதைய துயரம் நீங்கிவிடும். அரசும் விவசாயிகளின் நலன்காக்க அவசரத் திட்டத்தை அறிவிக்க வேண்டும். இப்படிச் செய்தால் இது, விவசாயிகள் இன்னும் வேகமாக உணவு உற்பத்தி செய்ய உறுதுணையாக இருக்கும். இது உதவி அல்ல; நன்றிக் கடன்!

- ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு