அனைவருக்கும் பசுமை வணக்கம்!
‘தமிழகத்தில் அந்நிய நாட்டுத் தாவரங்கள் நிறைந்திருக்கின்றன. அவற்றைக் கண்டறிந்து அகற்றுவதற்கு 5.35 கோடி ரூபாய் வேண்டும்’ என்று தமிழக வனத்துறை சார்பில் அரசுக்குக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இதில் அந்நிய தாவரங்கள் என்று வனத்துறை கொடுத்திருக்கும் பட்டியல்தான் அதிர்ச்சி தரத்தக்கதாக உள்ளது. பொன்னாங்கண்ணி, கரிசலாங்கண்ணி, சுண்டைக்காய், பருப்புக்கீரை, பண்ணைக்கீரை என்று நம் மக்கள் அன்றாடம் பயன்படுத்திக்கொண்டிருக்கும் பல்வேறு மூலிகைகளும்கூட இதில் இடம்பிடித்திருக்கின்றன.
கடந்த சில ஆண்டுகளாகவே சீமைக்கருவேல மரத்தை தமிழகத்திலிருந்து அகற்ற வேண்டும் என்கிற கோரிக்கை ஒலித்துக் கொண்டுள்ளது. ம.தி.மு.க-வின் பொதுச் செயலாளர் வைகோ உட்பட சிலர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். அண்மையில் இவ்வழக்கு விசாரணையின்போது, வனத்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், ‘சீமைக் கருவேலமரம் உள்ளிட்ட 196 வகையான அந்நிய தாவரங்கள் தமிழகத்தில் பரவியுள்ளன. இவற்றில் 23 வகையானவை உடனடியாக அப்புறப்படுத்தப்பட வேண்டியவை. இதற்கு 5.35 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய வேண்டும்’ என அரசிடம் கேட்டிருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தத் தாவரங்களையெல்லாம் அகற்றுவதற்காகப் பொதுமக்களிடம் கருத்துக் கேட்கப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், யாரிடம் கேட்டார்கள் என்பதுதான் புரியாத புதிராக இருக்கிறது. ஊர் கூடி பேசியிருக்க வேண்டியதை, சத்தமில்லாமல் முடித்துவிட்டார்கள்போல!
காலகாலமாகத் தமிழகத்தில் பயன்பாட்டிலிருக்கும் கீரைகளையெல்லாம் அந்நியம் என்று பட்டியலிட்டவர்கள், சில்வர் ஓக், கேரட், பீட்ரூட் இதையெல்லாம் அதில் சேர்க்கவே இல்லை.
அந்நிய தாவரங்கள் என்று அறிவியல்பூர்வமான ஆராய்ச்சிகள் நடத்தி, பாதிப்பை உறுதிப்படுத்தியிருக்க வேண்டும். ஆராய்ச்சி முடிவை பொதுமக்களின் பார்வைக்கு வைத்திருக்க வேண்டும். ஆனால், இது எதுவுமே நடந்ததுபோல தெரியவில்லை!
இது மிகமிக எச்சரிக்கையாகக் கையாள வேண்டிய ஒரு விஷயம். ஆழ ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டிய விஷயம். அதைவிடுத்து, எடுத்தோம் கவிழ்த்தோம் என்று வெட்டுக்கத்தியைக் கையில் தூக்கினால், இயற்கையின் தாக்குதல் விபரீதமாகவே இருக்கும்; ஜாக்கிரதை!
- ஆசிரியர்
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALS