சினிமா
Published:Updated:

அரசு எவ்வழியோ...

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
தலையங்கம்

தலையங்கம்

கொரோனா இரண்டாவது அலை மிக மோசமாக இந்தியாவைத் தாக்கிவருகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு வேகமாகப் பரவிவரும் கொரோனாவைக் கட்டுக்குள் வைக்க புதிய கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்திருக்கின்றன. ‘மக்களின் அலட்சியம்தான் எல்லாவற்றுக்கும் காரணம்’ என ஒரு தரப்பின்மீது மட்டுமே பழியைப் போட்டுவிட முடியாது. அரசு எவ்வழியோ மக்கள் அவ்வழி. கிட்டத்தட்ட கொரோனாவை வென்றுவிட்டதாக அரசுகள் நிகழ்த்திய கொண்டாட்டம்தான் மக்களின் இந்த மனநிலைக்குக் காரணம் என்பது மறுக்கக்கூடியது அல்ல. இந்த வெற்றிக் கொண்டாட்டங்களின் அவசரத்தில், கொரோனா இரண்டாவது அலையை கவனிக்கத் தவறிவிட்டோம். பூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருண்டுவிடுவதில்லையே!

மாநிலங்களில் கொரோனாவைக் கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு மாநில அரசுகளின் கையில் இருந்தாலும், தடுப்பூசி, மருந்துகள் என எல்லாமே மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. ஒவ்வொரு மாநிலத்தின் தேவைகளையும் உணர்ந்து தட்டுப்பாடு இல்லாமல் அவற்றைக் கொடுக்கத் தவறியது மத்திய அரசு. இன்று நிலைமை கையை மீறிப் போன பிறகு, மாநிலங்களுக்கு அதிகாரம் கொடுக்கிறது.

மக்களிடம் தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ‘தடுப்பூசித் திருவிழா’ நடத்தியது மத்திய அரசு. இதற்கு முன்பாகவே கொரோனாப் பரவலால் அச்சம் அடைந்திருந்த மக்கள், தடுப்பூசி போட்டுக்கொள்ளக் குவிய ஆரம்பித்தாலும் பலருக்குத் தடுப்பூசி கிடைக்கவில்லை. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கொரோனாத் தடுப்பூசி உலகம் முழுக்கச் சென்றிருக்கிறது. ஆனால், இந்த நாட்டின் மக்களை தடுப்பூசித் தட்டுப்பாடு வதைக்கிறது. திட்டமிடலில் நிகழ்ந்த தவறு மட்டுமே இதற்குக் காரணம்.

தேசம் முழுக்கப் பல மாநிலங்களில் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு நோய்ப்பரவல் இருக்கும் சூழலில், மருத்துவமனைகளில் இடம் கிடைக்காமல் நோயாளிகள் திண்டாடுகிறார்கள். தீவிர சுவாசத் தொற்று உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கும் தட்டுப்பாடு நிலவுகிறது. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு உதவும் ரெம்டெசிவிர் மருந்துக்கும் பற்றாக்குறை.

தலையங்கம்
தலையங்கம்

தேசமே இவற்றுக்காகத் தவிக்கும்போது, இவற்றை முன்கூட்டியே திட்டமிட்டு சரிசெய்ய வேண்டிய பொறுப்பில் இருக்கும் பிரதமர் நரேந்திர மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் மேற்குவங்கத் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார்கள். கொரோனா முதல் அலையை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தியதற்கு உரிமை கொண்டாடும் இவர்களுக்கு இந்த இரண்டாவது அலை கண்ணுக்குத் தெரியவில்லையா? முகக்கவசம்கூட அணியாத பெரும் மக்கள் நெரிசலில் அவர்கள் நடத்தும் பேரணிகளும் பொதுக்கூட்டங்களும், ‘சாதாரண மனிதர்களுக்கு இருக்கும் அச்சம்கூட இந்த தேசத்தை ஆள்பவர்களுக்கு இல்லையோ’ என்ற கேள்வியை எழுப்புகிறது. கும்பமேளா போன்ற பல லட்சம் மக்கள் கூடும் திருவிழாக்களால் நோய்த்தொற்று அதிகரிக்கும் என்பது அரசுக்குத் தெரியாதா?

பேரச்சம் சூழும் காலத்தில் அரசு நம்மைக் காக்கவேண்டும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள். அப்படிப்பட்ட சூழலில்தான் மத்திய அரசு மக்களைக் கைவிட்டிருக்கிறது. மருந்துகளும் ஆக்சிஜனும் சிகிச்சையும் நோயாளிகளுக்குக் கிடைப்பதை அரசு அவசர நடவடிக்கை எடுத்து உறுதிசெய்ய வேண்டும். ‘நமக்கு சிகிச்சை கிடைக்காதோ’ என்ற அச்சம் அவர்களைக் கொன்றுவிடக்கூடாது. கொரோனாவை வீழ்த்த தடுப்பூசியே மிக முக்கிய ஆயுதம். அதை எல்லோருக்கும் வழங்க வேண்டிய கடமையிலிருந்து மத்திய அரசு தவறக்கூடாது.