Published:Updated:

ஜனநாயக ஆயுதத்தை ஏந்துவோம்!

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

தலையங்கம்

ஜனநாயக ஆயுதத்தை ஏந்துவோம்!

தலையங்கம்

Published:Updated:
தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

தேர்தல் என்னும் ஜனநாயகத் திருவிழாவில் நம் வாக்கைப் பதிவு செய்யும் நேரம் இது. கடந்த ஐந்தாண்டுக்கால ஆட்சியை மதிப்பிடவும், நம்மை ஆள்வதற்கு யாருக்குத் தகுதியிருக்கிறது என்பதை முடிவு செய்வதற்குமான நாள் இது. இதை மற்றொரு விடுமுறை நாளாகக் கருதாமல் நம் ஜனநாயகக் கடமையை ஆற்றுவது முக்கியம். நாம் அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் நம் எதிர்காலத்துக்கும் தமிழகத்தின் வளர்ச்சிக்குமான விதை என்பதை மறந்துவிடக் கூடாது.

வாக்களிப்பது எந்த அளவுக்கு முக்கியமோ, அதேபோல் எந்த அடிப்படையில் வாக்களிக்க வேண்டும் என்பதும் முக்கியம். சாதி, மதம், பாலினம் என்று குறுகிய வரையறைகளை வைத்து மட்டுமே வாக்களிக்கக்கூடாது. நம் தொகுதியின் வளர்ச்சிக்காக உழைக்கக்கூடிய, மக்கள் நலனில் அக்கறை கொண்ட, தொலைநோக்குப் பார்வை கொண்ட வேட்பாளர் யார் என்று தேர்ந்தெடுத்து அவருக்கு வாக்களியுங்கள். ‘ஊர்க்கட்டுப்பாடு’, ‘பரம்பரை பரம்பரையாக இந்தக் கட்சிக்குத்தான் வாக்களிக்கிறோம்’ போன்ற மனநிலைகளிலிருந்து விடுபட்டு உங்களுக்கான முடிவை நீங்களே எடுங்கள்.

ஜனநாயக ஆயுதத்தை ஏந்துவோம்!

ஒரு போன் வாங்குவதற்குக்கூட அதுபற்றிய விமர்சனங்களை அலசிப் பார்க்கிறோம். நம்மை ஐந்து ஆண்டுகள் ஆளப் போகிறவர் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் சீர்தூக்கிப் பாருங்கள். கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள், வேட்பாளர்களின் வாக்குறுதிகளில் எவை எவை நம் வளர்ச்சிக்கு உதவும் என்று பாருங்கள். நம் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் முடிவு நம் கையில்தான் இருக்கிறது என்பது நினைவிருக்கட்டும்.

முக்கியமாக, பணம் வாங்கிக்கொண்டு வாக்களிப்பது நம்மை நாமே அவமானப்படுத்திக்கொள்ளும் செயல். விலைமதிக்க முடியாத நம் ஜனநாயக உரிமையைச் சொற்பத் தொகைக்காக அடகு வைப்பது பெருங்குற்றம். வாக்களிப்பதற்காக வாங்கும் பணம் சிலநாள் செலவுகளை ஈடுகட்டலாம். ஆனால், ஒரு தவறான நபரைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் ஐந்தாண்டுக் காலம் நம் உரிமைகளையும் எதிர்காலத்தையும் இழக்கப்போகிறோம் என்பதை மறந்துவிட வேண்டாம்.

‘தாங்கள் மட்டும் ஊழல் செய்தால் போதாது, மக்களையும் ஊழல்மயப்படுத்திவிட்டால் கேள்வி கேட்பதற்கான தகுதியை அவர்கள் இழந்துவிடுவார்கள்’ என்ற அற்பமான தந்திரம்தான் ‘வாக்குக்குப் பணம்’ என்னும் நடைமுறை. ‘நம் மக்கள் பிரதிநிதி நேர்மையாக இருக்கவேண்டும்’ என்று எதிர்பார்ப்பதற்கு, நாமும் நேர்மையான முறையில் வாக்களிப்பது அவசியம்.

வேறு எந்தத் தேர்தலைவிடவும் இந்தத் தேர்தல் தனித்துவமானது. கொரோனா என்னும் பெருந்தொற்றின் பிடியிலிருந்து நாம் இன்னும் விலகாத சூழலில்தான் தேர்தல் நடைபெறுகிறது. எனவே வாக்களிக்கச் செல்லும்போதும் மறக்காமல் சமூக இடைவெளியைக் கடைப்பிடியுங்கள். முகக்கவசம் அணிந்து செல்லுங்கள். வாக்குச்சாவடியிலும் பாதுகாப்பு வழிமுறைகளைத் தவறாமல் பின்பற்றுங்கள்.

உலகளவில் தேர்தல் ஜனநாயகத்தைச் சிறப்பாகப் பேணும் பெருமை இந்தியாவுக்கு உண்டு. குறிப்பாகத் தேர்தலின் மூலம் சரியான முடிவுகளை எடுப்பவர்கள் தமிழர்கள் என்பது வரலாறு. இந்தமுறையும் நமக்கான மக்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க வாக்குச்சீட்டு என்னும் ஜனநாயக ஆயுதத்தை சரியாக ஏந்துவோம்.