Published:Updated:

நல்ல தொடக்கம்!

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

தலையங்கம்

நல்ல தொடக்கம்!

தலையங்கம்

Published:Updated:
தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி உலகமே வியக்கும் வண்ணம் நம் மாமல்லபுரத்தில் கோலாகலமாக நடைபெற்றுவருகிறது. இந்தியாவின் 74 செஸ் கிராண்ட் மாஸ்டர்களில் 26 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதால் எந்த வகையில் பார்த்தாலும் இந்தப் போட்டி இங்கு நடைபெறுவதே பொருத்தம்.

கத்தியைத் தீட்டுவதற்கு முன்னர், புத்தியைத் தீட்டுவது அவசியம் என்பதை சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முன்பே இந்த மண்ணில் வாழ்ந்த மக்கள் புரிந்து வைத்திருந்தார்கள். அறிவாயுதத்தைக் கூர்தீட்ட அவர்கள் வடிவமைத்த விளையாட்டுதான் சதுரங்கம். 188 அணிகளைச் சேர்ந்த இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட சதுரங்க வீரர்கள் இப்போது அறிவாயுதம் ஏந்தி விளையாடிவருகிறார்கள்.

ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக இந்தப் போட்டியைத் திட்டமிட்டபடி ரஷ்யாவில் நடத்த முடியாத சூழல் உருவானபோது, தமிழ்நாடு அரசு துரிதமாக முன்முயற்சி எடுத்து, மத்திய அரசின் உதவியுடன் இந்தப் போட்டியை நம் மாநிலத்துக்குக் கொண்டுவந்திருக்கிறது. இதன்மூலம் சென்னைதான் இந்தியாவின் சதுரங்கத் தலைநகரம் என்பது உறுதியாகியுள்ளது. ‘‘தற்போது உலகின் சிறந்த செஸ் வீரர்கள் சென்னையிலிருந்துதான் வருகிறார்கள்'' என உலகின் நம்பர் ஒன் வீரர் மேக்னஸ் கார்ல்சனும் கூறியிருக்கிறார்.

இந்தப் போட்டிக்கு 100 கோடி ரூபாய்க்கும் மேல் செலவு செய்வது குறித்துச் சிலர் கேள்வி எழுப்புகிறார்கள். ஒருபோதும் இதை வீண் செலவாகப் பார்க்க முடியாது. செஸ் ஒலிம்பியாட் இங்கே நடப்பதால், நம் இளைஞர்களுக்கு செஸ்மீது நிச்சயம் ஆர்வம் ஏற்படும். அதன் பலனாக நம் இளைஞர்களின் சிந்திக்கும் ஆற்றல் பன்மடங்காகப் பெருகும். இந்தியாவின் அறிவுத் தலைநகர் என்று இதுநாள்வரை அறியப்பட்டு வந்த சென்னை, உலக செஸ் வரைபடத்தில் `இந்தியாவின் செஸ் தலைநகர்' என்றும் அழுத்தமாகக் குறிப்பிடப்படும். வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதில் முன்னணியில் இருக்கும் தமிழகம், இனி மேலும் அதிகமான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க இந்தப் போட்டி உதவும். இம்மாநிலத்தில் பல்கிப் பெருகியிருக்கும் அறிவுத்திறன் கொண்ட மனித ஆற்றல் தொடங்கி, கல்வி, சுகாதாரம் மற்றும் தொழில் ஆகிய துறைகளில் நாம் உருவாக்கி வைத்திருக்கும் உள்கட்டமைப்பு வசதிகள், இந்த சர்வதேசப் போட்டியின் மூலம் உலகம் முழுவதுமுள்ள முதலீட்டாளர்களின் கண்களுக்கு மேலும் தெளிவாகத் தென்படும்.

சதுரங்கமாக இருந்தாலும் சரி, மென்பொருள் உருவாக்கமாக இருந்தாலும் சரி, இரண்டுக்குமே அடிப்படையானது தர்க்க அறிவுதான் என்பதால் இந்தத் துறையில் நம் இளைஞர்களுக்கு இருக்கும் ஆற்றலை உலகிற்கு எடுத்துரைக்க இந்த செஸ் ஒலிம்பியாட் மிகப்பெரிய கிரியா ஊக்கியாக இருக்கும்.

`எப்போது பதுங்க வேண்டும், எப்போது பாய வேண்டும்' என்று முடிவெடுக்கும் திறன் தொடங்கி, தொலைநோக்குப் பார்வை, திட்டமிடல், அடுத்தடுத்த நகர்வுகளில் என்னவெல்லாம் நடக்கக்கூடும் என்பதை முன்கூட்டியே கணித்து அதற்கேற்ப வியூகம் வகுக்கும் ஆற்றல் - இவையெல்லாம் சதுரங்கத்தில் வெற்றி பெற மட்டுமல்ல, வாழ்க்கையில் வெற்றிபெறவும் தேவை.

மாணவர்களின் சிந்தனைக் கதவுகளை விரியத்திறக்க இந்த சர்வதேச செஸ் ஒலிம்பியாட் ஒரு நல்ல ஆரம்பமாக அமையட்டும்!