பிரீமியம் ஸ்டோரி
‘ஆடிப்பட்டம் தேடி விதை’ என்பது பழமொழி. வேளாண் பணிகள் வேகம் எடுக்கும், இந்த நேரத்தில் மாநில அரசின் அறிவிப்பு விவசாயிகளை அலைக்கழித்து வருகிறது.

‘கூட்டுறவுச் சங்கங்களில் பொது மற்றும் விவசாய நகைக்கடன் வழங்குவதை நிறுத்திய அறிவிப்புக்குப் பின், திரும்பவும் கடன் கொடுக்க அறிவித்தோம்; இப்போது திரும்பவும் மறு உத்தரவு வரும் வரை கடன் கொடுக்க வேண்டாம் என அறிவிக்கிறோம்’ எனக் குழப்பிக் குழப்பி அறிவித்து வருகின்றன, கூட்டுறவுச் சங்க அமைப்புகள்.

இத்தனைக்கும் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, ‘நகைக்கடன் வழங்குவதை நிறுத்தவில்லை’ என ஊடகங்களில் தெளிவுபடுத்தினார். ஆனால், அதற்குப் பிறகுதான் குழப்ப அறிவிப்புகள், தினந்தோறும் விதவிதமாக வெளிவரத் தொடங்கியுள்ளன.

சொல்லப்போனால், கொடிய பெருந்தொற்று நேரத்திலும் துவண்டுவிடாமல், கழனியில் சுழன்று பணியாற்றும் விவசாயிகளின் வீடுகளுக்கே சென்று கடன் கொடுத்திருக்க வேண்டும். அதைச் செய்யாவிட்டாலும், வங்கிகளை நாடி வரும் விவசாயிகளை, ‘இன்று போய் நாளை வா…’ எனத் தினம் தினம் நோக அடிக்கக்கூடாது.

மகாராஷ்டிரா போன்ற வட மாநிலங்களில் கூட்டுறவு வங்கி அமைப்புகள் வலுவாக இல்லை. அதனால்தான் அங்கு, விவசாயிகள் கந்துவட்டிக்காரர்களிடம் கடன் வாங்கி விவசாயம் செய்கிறார்கள். கந்து வட்டிக் கொடுமை கழுத்தை நெறிக்கும்போது, விவசாயிகள் கடைசி முடிவாகத் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

தமிழ்நாட்டிலும் அந்த அவல நிலை உருவாகிவிடக் கூடாது. வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம், பச்சைத் துண்டைத் தோளில் போட்டுக்கொண்டு, ‘நானும் விவசாயி’தான் என்று சொல்லும் ‘விவசாய முதல்வர்’ ஆட்சியில், விவசாயிகள் கண்ணீர் சிந்துவது, அரசுக்குத்தான் அவமானம்.

-ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு