Published:Updated:

வெள்ளை அறிக்கை உணர்த்தும் உண்மைகள்!

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

தலையங்கம்

வெள்ளை அறிக்கை உணர்த்தும் உண்மைகள்!

தலையங்கம்

Published:Updated:
தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

தமிழகத்தின் நிதிநிலைமை குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டிருக்கிறார், நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன். பலருக்கும் மேலோட்டமாகத் தெரிந்த பல உண்மைகளைப் புள்ளிவிவர ஆதாரங்களுடன் தொகுத்திருப்பதாக இந்த வெள்ளை அறிக்கை உள்ளது. ‘இந்த அறிக்கை என்ன விளைவுகளை ஏற்படுத்தப்போகிறது’ என்பதுதான் மக்கள் மனதில் எழுந்திருக்கும் கேள்வி.

கடந்த 2005-06 நிதியாண்டில் ரூ. 57,457 கோடியாக இருந்த தமிழகத்தின் கடன் சுமை, 15 ஆண்டுகளில் ரூ. 4,85,502 கோடியாக உயர்ந்திருக்கிறது. தமிழ்நாட்டில் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் ரூ. 2,63,976 பொதுக்கடன் சுமத்தப்பட்டிருக்கிறது என்பது அதிர்ச்சி தரும் விஷயம். இந்தியாவின் எல்லா மாநிலங்களைவிடவும் வெளிச்சந்தையில் அதிக கடன் வாங்கும் மாநிலமாகத் தமிழ்நாடு இருக்கிறது. மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 25 சதவிகித வரம்பு வரை கடன் வாங்கலாம். அதை கடந்த நிதியாண்டில் எட்டிவிட்டோம். கடந்த மூன்று, நான்கு ஆண்டுகளில் சம்பளங்கள், ஓய்வூதியம், வட்டிச் செலவினங்களுக்குக்கூடக் கடன் பெற்றுள்ளனர்.

கடந்த 2012-13 நிதியாண்டில் உபரி பட்ஜெட் போட்ட ஒரு மாநிலம், எட்டே ஆண்டுகளில் ரூ. 61,320 கோடி ரூபாய் பற்றாக்குறையுடன் பட்ஜெட் போடும் மாநிலமாக ஏன் தேய்ந்தது என்பதை விவரிக்கிறது வெள்ளை அறிக்கை. இந்தியாவின் எந்த மாநிலத்திலும் இந்த அளவுக்கு வருவாய்ப் பற்றாக்குறை ஏற்படவில்லை.

‘மதுபான வரி, வாகன வரி, சொத்துவரி ஆகியவை பல ஆண்டுகளாக உயர்த்தப்படவில்லை. மற்ற மாநிலங்களில் இருப்பதுபோல மின்சார வரி இங்கு இல்லை, போக்குவரத்துக் கழகங்களும் குடிநீர் வாரியமும் பெரும் இழப்பைச் சந்திக்கின்றன’ என்று நிதியமைச்சர் சொல்வதைப் பார்த்தால் வரி உயர்வு, கட்டண உயர்வு போன்ற கசப்பு மருந்துகள் விரைவில் அறிமுகமாகலாம். மானியங்களுக்கான செலவுகள் கடந்த 14 ஆண்டுகளில் இரண்டு மடங்காக உயர்ந்துள்ளதைப் பற்றியும் அவர் கவலையுடன் குறிப்பிட்டிருக்கிறார். தி.மு.க தேர்தல் அறிக்கையில் பல்வேறு இலவசத் திட்டங்களை அறிவித்துள்ள நிலையில், இந்தச் செலவு இன்னும் அதிகரிக்கவே செய்யும். அதற்கான வருவாய் எங்கிருந்து வரும் என்பதே இப்போதைய கேள்வி.

தலையங்கம்
தலையங்கம்

‘முன்மாதிரி மாநிலம்’ என அரசியல் மேடைகளில் சொல்லப்படும் முழக்கங்களுக்கு மாறான உண்மையை வெளியிடுகிறது வெள்ளை அறிக்கை. ‘கல்வி, மருத்துவம், பொது சுகாதாரம், குடிநீர் வழங்கல் என தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான செலவினங்கள் குறைந்துகொண்டே வருகின்றன. தொழில்துறை மற்றும் சேவைத்துறைகள் போதிய உத்வேகத்துடன் துரித வளர்ச்சி பெறவில்லை. தனிநபர் வருமானத்திலும் கவலை அளிக்கும் அளவு வீழ்ச்சி அடைந்துள்ளது தமிழ்நாடு’ என்கிறது வெள்ளை அறிக்கை. உடனடியாகக் கவனிக்க வேண்டிய விஷயம் இது.

குறை சொல்லும், பழிபோடும் வழக்கமான அரசியலிலிருந்து விலகி, தமிழகத்தின் வளர்ச்சிக்கான முதலீடுகளில் அரசு கவனம் செலுத்த வேண்டும். தமிழகத்தின் எதிர்கால நன்மை கருதி அரசு எடுக்கும் ஆக்கபூர்வமான முடிவுகளுக்கு நாம் அனைவரும் துணை நிற்க வேண்டும். தொழில்துறையும் சேவைத்துறையும் வளர்ந்தால், தனிநபர் வருமானம் தானாக உயரும். அதுவே மாநிலத்தின் நிதி நிலையை வலுவாக்கும்.

தமிழகம் கடன் சுமையிலிருந்து மீள்வதும் முக்கியம்; தனிநபர் வருமானம் உயர்வதும் முக்கியம். பதவியேற்று 100 நாள்களை நிறைவுசெய்யும் இந்த அரசு, இந்த இரண்டையும் தனது முக்கியக் கடமைகளாகக் கருத வேண்டும்.