Published:Updated:

நமக்குள்ளே...

‘சென்னை தமிழச்சி’ என்ற பெயரில் சமூக வலைதளங்களில் அழகுப் பராமரிப்பு முதல் சமூகப் பிரச்னைகள், பெண்களுக்கு எதிரான வன்முறைகள்வரை பல வீடியோக்களை வெளியிட்டு வரும் சாமான்ய பெண்தான் பத்மப்ரியா

பிரீமியம் ஸ்டோரி
பத்மப்ரியா, தன் யூடியூப் சேனலில் ‘EIA 2020’ வரைவை விளக்கியும் விமர்சித்தும் பதிவிட்ட ஒரு வீடியோ வைரலாகிறது. பல தரப்பிலிருந்தும் பாராட்டுகிறார்கள்.

இன்னொரு பக்கம், அந்த இளம்பெண்ணுக்கு மிரட்டல்களும் வலுக்கின்றன. சட்டென்று வீடியோவை நீக்கிவிடுகிறார். அவருக்கு என்னவானதோ... ஏதானதோ என்று தமிழக நெஞ்சங்கள் பலவும் பதைபதைத்துக்கொண்டிருக்கும் சூழலில்... தன்னை மிரட்டியவர்களுக்குப் பதிலும் பதிலடியாகப் புதிதாக ஒரு வீடியோவை அவர் வெளியிட, உற்சாகமாகி உச்சிமுகர்கிறது சமூக வலைதளம்.

மத்திய அரசு, ‘சூழலியல் தாக்க மதிப்பீட்டுக்கான புதிய சட்டவரைவை (EIA 2020- Environmental Impact Assessment notification 2020) சமீபத்தில் வெளியிட்டது. புதிதாகத் தொழிற்சாலைகள் தொடங்குவதற்குரிய சுற்றுச்சூழல் அனுமதி, பொதுமக்களின் கருத்துக்கேட்பு ஆகியவற்றில் இருந்தெல்லாம் தப்பிக்கவைக்கும் வகையில் இந்த வரைவு உள்ளது என்பதே குற்றச்சாட்டு.

இது, பொதுமக்கள், வல்லுநர்கள், சூழலியல் ஆர்வலர்கள் உள்ளிட்டோரின் கருத்துகளைப் பெறுவதற்காக கடந்த மார்ச் மாதமே பகிரப்பட்டது. ஆனால், ஜூலை இறுதியில் பத்மப்ரியா வெளியிட்ட இந்த ஒற்றை வீடியோதான், சாமான்ய மக்கள் வரை இதன் ஆபத்து பக்கங்களை எளிய மொழியில் கொண்டு சேர்த்தது.

‘சென்னை தமிழச்சி’ என்ற பெயரில் சமூக வலைதளங்களில் அழகுப் பராமரிப்பு முதல் சமூகப் பிரச்னைகள், பெண்களுக்கு எதிரான வன்முறைகள்வரை பல வீடியோக்களை வெளியிட்டு வரும் சாமான்ய பெண்தான் பத்மப்ரியா. இந்த வீடியோ வெளியானதுமே, ‘பெயர், விலாசம், மொபைல் நம்பர் கொடுங்கள்’ என்று மிரட்டும் தொனியில், வெளிப்படையாக சமூக வலைதளத்திலேயே கேட்டார் பி.ஜே.பியைச் சேர்ந்த ஒரு நபர். சொல்ல முடியாத வசைகளும் மிரட்டல்களும் கமென்ட்களில் குவிந்தன. வீட்டில் தொலைக்காட்சிச் செய்தி சேனல்களைப் பார்த்தால், ‘நீயெல்லாம் என்ன நியூஸ் பார்க்குற’ என்று பெண்களை நோக்கி வீசப்படும் பிற்போக்கு எண்ணத்தின் நீட்சிதான், பத்மப்ரியாவை அச்சுறுத்திய பேய்க்குரல்கள்.

ஓர் ஆண் இப்படி வீடியோ வெளியிடும்போது, அவருடைய கருத்தாழம் மற்றும் கட்சி சார்புமீது என்றே கேள்விகள் எழுப்பப்படும். ‘ஒரு ஆம்பள... நீ என்ன கேள்வி கேட்குறது?’ என்று ஒருபோதும் கேட்கப்படுவதில்லை. ஆனால், பெண் என்றதும்... ‘ஒரு பொம்பள, நீ என்ன கருத்து சொல்றது?’ என்று கேட்கப்படுவது எத்துணை கொடூரம்... அடுப்படியிலிருந்து வந்து, வீட்டுத் திண்ணையில் நடக்கும் ஒரு கலந்துரையாடலில் கலந்துகொள்ள நினைக்கும் பெண்ணிடம் காட்டப்படும் முறைப்புகள், முகச்சுளிப்புகளின் டிஜிட்டல் வெர்ஷன்தான், தொலைக்காட்சி விவாதங்களில் கலந்துகொள்ளும் பெண்களிடம் காட்டப்படுகிற அநாகரிகமான ஆணாதிக்கம்.

சாமான்ய பத்மப்ரியாக்கள், இனி கேள்விகள் கேட்க வேண்டும். பெண்கள் பிரச்னைகள் மட்டுமன்றி, பொதுமக்களின் பிரதிநிதியாகவும் பேச வேண்டும். இந்த 21-ம் நூற்றாண்டிலும் பெண்கள் பேசுவதே பிரச்னையாகிறது எனில், பிற்போக்குவாதிகளின் செவிப்பறைகள் அதிர அதிரப் பேசிப் பேசித்தான் அதை நாம் கடக்க வேண்டும் என்பதுதானே நிதர்சனம் தோழிகளே!

நமக்குள்ளே...
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு