Published:Updated:

கண்களை விற்று?

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
தலையங்கம்

தலையங்கம்

அனைவருக்கும் பசுமை வணக்கம்!

‘‘பாரத மாதா, பூமித்தாய்’’ எனப் போற்றிப்பாடும் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பி.ஜே.பியினர், பாரத மாதாவின் முகத்தில் கரியைப் பூசும் வேலையை மத்திய சுற்றுச்சுழல் அமைச்சகம் செய்துவருவதை வேடிக்கை பார்த்துக்கொண்டுள்ளனர். சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு சட்ட வரைவு (EIA 2020) குறித்த கருத்துக் கேட்பை கடந்த மார்ச் மாதம் மத்திய அரசு வெளியிட்டது. அதற்கான காலக்கெடு இந்த மாதம் 11-ம் தேதியுடன் முடிவடைகிறது. கொரோனா காலத்தில் கமுக்கமாகச் சட்டத்தை நிறைவேற்றிவிடலாம் என்று நினைத்த மத்திய அரசின் எண்ணத்தில் மண் விழுந்துவிட்டது. ஆம், சமூக வலைதளங்களில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடுமையாக விமர்சனம் செய்யத் தொடங்கிவிட்டார்கள். குறிப்பாகப் பெண்களும்கூட இந்தச் சட்ட வரைவில் உள்ள ஓட்டைகளை வெளிச்சம்போட்டுக் காட்டி வருகிறார்கள். இப்போது எதிர்க் கட்சிகளும் விழித்துக்கொண்டு, எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

மேலை நாடுகளை ஒப்பிடும்போது, இங்கு சுற்றுச்சூழல் சட்டம் இயற்கையைக் காப்பதற்குப் பதில் அழித்து ஒழிக்கவே ஆதரவாக உள்ளது. தற்போது அரசு கொண்டுவந்திருக்கும் புதிய வரைவில் திட்டங்கள் A, B1, B2 என மூன்று பிரிவுத் திட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இதில் பொதுமக்களின் கருத்தைக் கேட்காமலே, சுற்றுச்சூழலுக்குக் கேடு செய்யும் தொழில்களுக்கு அனுமதி வழங்க வழிவகைச் செய்யப்பட்டுள்ளது. சூழலுக்குக் கேடு செய்து லாப வேட்டை நடத்தும் நிறுவனங்களுக்கு ‘பச்சை’க் கொடி காட்டியுள்ளனர். அதேசமயம் மனிதன் வாழ்வதற்கு ஆதாரமாக உள்ள நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் எனப் பஞ்சபூதங்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் சரத்துகள் சட்டம் முழுக்க விரவிக் கிடக்கின்றன. கண்களை விற்று ஓவியம் வாங்க துணிந்துவிட்டதா, மத்திய அரசு?