Published:Updated:

நம்பிக்கைகளும் ஏமாற்றங்களும்...

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

தலையங்கம்

நம்பிக்கைகளும் ஏமாற்றங்களும்...

தலையங்கம்

Published:Updated:
தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

கர்நாடக, ஆந்திர மாநிலங்களைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் முதன்முறையாக வேளாண்மைக்குத் தனி பட்ஜெட் தாக்கல் செய்து நம்பிக்கை ஏற்படுத்தியிருக்கிறது தமிழக அரசு. 2021-22 நிதியாண்டில் தமிழகத்தின் கடன் 5.7 லட்சம் கோடி ரூபாயாக உயரக்கூடும் என்று கடந்த பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தச் சூழலில் ரூ.34,220 கோடியில் வேளாண்மைக்கெனத் தனி பட்ஜெட் போட்டிருப்பதன் மூலம் அரசு விவசாயத்தை முதன்மைத் தொழிலாகக் கருதுவதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

மனிதர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு தொற்றாநோய்களுக்கு நாம் உண்ணும் உணவே காரணமாக இருக்கிறது. இந்தச் சூழலில் நஞ்சில்லாத இயற்கை வேளாண்மை, மரபு வேளாண்மைக்கு பட்ஜெட்டில் முக்கியத்துவம் தரப்பட்டிருப்பது நல்ல நகர்வு. அடுத்த ஐந்து ஆண்டுகளில் 11.75 லட்சம் ஹெக்டேர் தரிசு நிலங்கள் சாகுபடிப் பரப்பாக மாற்றப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதுவும் நம்பிக்கை தரும் அறிவிப்பு.

தனி மனிதராக நெல் ஜெயராமன் செய்துவந்த பாரம்பர்ய நெல் ரகங்களைத் திரட்டிப் பரவலாக்கும் திட்டத்தை அரசே கையில் எடுத்திருப்பதும் பாராட்டுக்குரியது. பனைமரங்களைப் பாதுகாக்கவும், பனை வெல்லத்தை ரேஷன் கடைகளில் விற்கவும் எடுத்திருக்கும் முயற்சியும் நல்விளைவுகளை ஏற்படுத்தும். வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பு மக்களிடம் கருத்து கேட்டது நல்லதொரு முன்னுதாரணம்.

தலையங்கம்
தலையங்கம்

அதேநேரம், இந்த பட்ஜெட்டில் புதிய திட்டங்களுக்கான அறிவிப்புகள் இருக்கிறதே தவிர, விவசாயிகளுக்கு நேரடியாக பலன்தரக்கூடிய அம்சங்கள் மிகவும் குறைவாகவே இருக்கின்றன. வறட்சி, வெள்ளம், கொரோனா என பேரிடர்களைத் தாண்டியும் வேளாண்மையைக் கைவிடாமல் போராடிக்கொண்டிருக்கும் விவசாயிகளுக்குத் தற்போதைய தேவை, உற்பத்திக்குத் தகுந்த விலை. 2004-ல் எம்.எஸ்.சுவாமிநாதன் குழு, உற்பத்திச் செலவுக்கு மேல் 50 சதவிகிதம் வைத்து குறைந்தபட்ச ஆதார விலையைத் தீர்மானிக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது. 17 ஆண்டுகள் கடந்தும் அது நடக்கவில்லை. தற்போதுவரை 1 குவிண்டால் சன்ன ரக நெல்லுக்கு 1,960 ரூபாயும் சாதாரண ரகத்துக்கு 1,940 ரூபாயும் மட்டுமே வழங்கப்படுகிறது. தி.மு.க தேர்தல் அறிக்கையில், ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒரு குவிண்டால் நெல்லுக்கு குறைந்தபட்சம் 2,500 ரூபாய் விலை தருவோம்’ என்று கூறப்பட்டது. ஆனால் மாநில அரசு வழங்கி வந்த ஊக்கத்தொகையை 25 ரூபாய் முதல் 30 ரூபாய் அளவுக்கு மட்டுமே உயர்த்திவிட்டு கடமையை முடித்துக்கொண்டிருக்கிறது அரசு. இது விவசாயிகளுக்குப் பெருத்த ஏமாற்றத்தைத் தந்துள்ளது. 11.75 லட்சம் ஹெக்டேர் தரிசு நிலங்களை சாகுபடிப் பரப்பாக மாற்ற நீராதாரம் முக்கியம். ஆனால் பட்ஜெட்டில் நீராதார மேம்பாட்டுக்கான அறிவிப்புகள் இல்லை. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நாட்டுக் கால்நடை வளர்ப்பை ஊக்குவிக்கும் திட்டங்களும் பட்ஜெட்டில் இல்லை.

ஆயினும், உழவுத்தொழிலை அங்கீகரித்துத் தனி பட்ஜெட் கொண்டு வந்திருப்பது நல்ல தொடக்கம். இனிவரும் காலங்களில் வேளாண்மை முக்கியத்துவம் பெறும் வாய்ப்பை இது உருவாக்கியிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism