Published:Updated:

ஆணைய அறிக்கையை வெளியிடுங்கள்!

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

தலையங்கம்

ஆணைய அறிக்கையை வெளியிடுங்கள்!

தலையங்கம்

Published:Updated:
தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

`ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது' என்ற வார்த்தைகள் மீண்டும் உண்மையாகிவிடுமோ என்ற அச்சம் எழுந்திருக்கிறது. காரணம், அ.தி.மு.க ஆட்சியில் நடைபெற்ற தூத்துக்குடித் துப்பாக்கிச் சூடு தொடர்பாக அமைக்கப்பட்ட, ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் விசாரணை ஆணையம் தன் அறிக்கையை சமர்ப்பித்து சுமார் மூன்று மாதங்கள் கடந்துவிட்டபோதும், தி.மு.க அரசு அந்த அறிக்கையைக் கிடப்பில் போட்டு வைத்திருக்கிறது.

2018 மே மாதம் நடைபெற்ற தூத்துக்குடித் துப்பாக்கிச் சூடு சம்பவம் தமிழக வரலாற்றில் காவல் துறை நிகழ்த்திய மிக மோசமான தாக்குதல்களில் ஒன்று. நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடையவும், 13 அப்பாவிகள் உயிரிழக்கவும் காரணமாக இருந்த துப்பாக்கிச் சூடு பற்றி விசாரிக்க அமைக்கப்பட்ட இந்த ஆணையத்தின் அறிக்கை எவ்வளவு முக்கியமானது என்பதைப் பற்றி தி.மு.க அரசுக்கு நாம் சொல்ல வேண்டியதில்லை. அப்பாவி மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டதற்குக் காரணமானவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்று அப்போது எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க தொடர்ந்து போராடியது.

தி.மு.க கேட்டதைப் போலவே இப்போது அவர்கள் கையில், `யார் தவறு செய்தார்கள். எப்படித் தவறு செய்தார்கள்' ஆகிய விவரங்கள் இருக்கின்றன. என்றாலும் அந்த விசாரணை ஆணைய அறிக்கையை வெளியிடவில்லை அரசு. அந்த விசாரணை அறிக்கையின் சில பகுதிகள் வெளியில் வந்து, பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.

தலையங்கம்
தலையங்கம்

`வன்முறையில் ஈடுபட்டவர்களைத் தடுப்பதற்காகவே துப்பாக்கிச் சூடு நடத்தினோம் என்ற காவல் துறையின் வாதத்துக்கு எந்த ஆதாரமும் இல்லை. ஒரே ஒரு காவலரைத் தவிர வேறு காவலர்கள் யாரும் இந்தச் சம்பவத்தில் படுகாயம் அடையவில்லை. துப்பாக்கியால் சுடுவதில் மிகவும் தேர்ச்சி பெற்ற சுடலைக்கண்ணு என்ற காவலரை வைத்து மட்டும் நான்கு வெவ்வேறு இடங்களில் 17 ரவுண்ட் சுட வைத்திருக்கிறார்கள். மறைவான இடத்தில் ஒளிந்துகொண்டு துப்பாக்கிச் சூடு நடத்தியதால், எந்தப் பக்கத்தில் இருந்து சுடுகிறார்கள் என்று தெரியாமல் மக்கள் நாலாபக்கமும் சிதறி ஓடியிருக்கிறார்கள். சிதறி ஓடும் மக்களை நோக்கித் துப்பாக்கியால் சுட்டிருக்கிறார்கள். இறந்துபோன 13 பேரில் 6 பேர் பின்புறம்தான் குண்டு பாய்ந்து இறந்திருக்கிறார்கள்' என்று விசாரணை அறிக்கை கூறுகிறது.

துப்பாக்கிச் சூட்டைத் தவிர்க்க வழக்கமாகக் கடைப்பிடிக்கப்படும் தடியடி, கண்ணீர்ப்புகை, வானத்தை நோக்கி எச்சரிக்கை விடுக்கும் விதமாகத் துப்பாக்கியால் சுடுதல் என்று எந்தவித வழிகாட்டலும் கடைப்பிடிக்கப்படவில்லை என்பதும் தெரியவந்திருக்கிறது. துப்பாக்கிச் சூட்டுக்குக் காரணமான உயர் காவல்துறை அதிகாரிகள் உட்பட 17 பேரின் தவறுகளை இந்த அறிக்கை சுட்டிக்காட்டியிருக்கிறது. அந்த ஆணையம் சுட்டிக்காட்டும் அத்தனை பேரும் இப்போதும் உயர் பொறுப்புகளில் இருக்கிறார்கள்.

ஒரு தவறு நிகழ்ந்தால், அதன் காரணங்களைக் கண்டறியவும், இனி அதுபோன்ற தவறுகள் நிகழாமல் தடுக்கவுமே விசாரணை ஆணையங்கள் அமைக்கப்படுகின்றன. ஆனால், அந்த ஆணையங்கள் தரும் அறிக்கைகள் வெளியிடப்படாமலே தூசு படிந்து கிடப்பது, நீதி நடவடிக்கைகளுக்கு எந்த வகையிலும் உதவாது. கனிமக்கொள்ளை தொடர்பான சகாயம் அறிக்கை பல ஆண்டுகளாக அப்படியே கிடக்கிறது. விசாரணை ஆணையங்களின் நோக்கம் நிறைவேற, அவை மக்களுக்குப் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும்.