Published:Updated:

மரணங்களை மறைக்கலாமா?

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

தலையங்கம்

மரணங்களை மறைக்கலாமா?

தலையங்கம்

Published:Updated:
தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

‘கொரோனா இரண்டாவது அலையின்போது, நாட்டில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் யாருமே இறக்கவில்லை’ என்று மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீண் பவார் நாடாளுமன்றத்தில் அறிவித்திருப்பது, ‘முழுப்பூசணிக்காயைச் சோற்றில் மறைப்பது’ என்னும் சொலவடைக்கு சரியான உதாரணம். இதில் வெறுமனே மத்திய அரசை மட்டும் குறைசொல்ல முடியாது. ‘தங்கள் மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நிகழும் மரணங்கள் குறித்து அந்தந்த அரசுகள் அளித்த தகவல்களின்படியே இதைத் தெரிவிக்கிறோம்’ என்று மத்திய அமைச்சர் கூறியுள்ளார். எனவே, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் அளிக்கும் புள்ளிவிவரங்களின் நம்பகத்தன்மை குறித்தும் கேள்வி எழுகிறது.

தலைநகர் டெல்லி தொடங்கி மும்பை, பெங்களூரு, ஏன், தமிழகத்தில் செங்கல்பட்டில்கூட ஆக்சிஜன் தட்டுப்பட்டால் மரணங்கள் நிகழ்ந்த செய்திகள், ஆறாத வடுவாக மக்கள் மனதில் இருக்கின்றன. மூச்சுத்திணறலால் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த கொரோனா நோயாளிகளோடு ஏராளமான ஆம்புலன்ஸ்கள் பல மணி நேரம் மருத்துவமனை வாசல்களில் காத்துக்கிடந்தன. அப்படிக் காத்திருந்ததாலேயே ஒருசிலர் உயிரிழந்த காட்சிகளும் நம் மனக்கண்ணில் நிழலாடுகின்றன.

டெல்லி, உத்தரப்பிரதேச வீதிகளில் ஆக்சிஜன் சிலிண்டரோடு நோயாளிகளின் உறவினர்கள் அலைந்தது நாடே பார்த்த துயரக்காட்சிகள். ‘இன்னும் இரண்டு மணி நேரத்துக்குத் தேவையான ஆக்சிஜன் மட்டுமே கையிருப்பில் உள்ளது. உடனடியாக ஆக்சிஜன் கிடைக்காவிட்டால் மருத்துவமனையில் இருக்கும் நூற்றுக்கணக்கான நோயாளிகளின் நிலை என்னவாகும் என்பதைக் கற்பனை செய்துகூடப் பார்க்கமுடியவில்லை’ என்று மருத்துமனைகள் சார்பில் நீதிமன்றத்தில் முறையிட்டதும் இன்னமும் நம் காதுகளில் ஒலிக்கிறது. ‘திருடுங்கள், பிச்சையெடுங்கள். ஆனால் போதுமான ஆக்சிஜனையும் தடுப்பூசிகளையும் ஏற்பாடு செய்யுங்கள்’ என்று டெல்லி உயர் நீதிமன்றம் கடுமையாக மத்திய அரசுக்கு உத்தரவிட்டதையும் மறக்க முடியுமா?

தலையங்கம்
தலையங்கம்

மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டு முதல்வராகப் பதவியேற்ற ஓரிரு நாள்களிலேயே செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக ஒரே நாளில் 13 பேர் பலியானதைக் குறிப்பிட்டு, தமிழ்நாட்டுக்குக் கூடுதலாக ஆக்சிஜன் ஒதுக்குமாறு பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதினார். ஆனால், ‘செங்கல்பட்டு மருத்துவமனையில் ஆக்சிஜன் இல்லாததால் யாரும் உயிரிழக்கவில்லை’ என்று இப்போது தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் புதிய விளக்கம் கொடுத்திருக்கிறார். இரண்டில் எந்தத் தகவலை மக்கள் நம்புவது?

கொரோனா மரணங்களைப் பதிவுசெய்வதில்கூட வெளிப்படைத் தன்மை இல்லை. ‘தமிழகத்தில் அரசு கொடுக்கும் புள்ளிவிவரங்களைவிட 6.4 மடங்கு அதிக கொரோனா மரணங்கள் நிகழ்ந்துள்ளன’ என்கிறது ஓர் ஆய்வு. ஆந்திராவில் இது 17.9 மடங்கு, மேற்கு வங்காளத்தில் 11 மடங்கு. மத்தியப்பிரதேசத்தில் 23.8 மடங்கு. இப்படிக் குறைத்துக்காட்டுவதன் மூலம் எதைச் சாதிக்கப்போகிறோம்?

ஆக்சிஜன் தட்டுப்பாட்டையும், மரணங்களின் எண்ணிக்கையையும் உண்மையாக ஒப்புக்கொள்வது அவசியம். ‘நாம் எதில் தவறினோம், என்ன செய்ய வேண்டும்’ என்று மருத்துவக் கட்டமைப்புகளைத் திட்டமிடுவதற்கு இந்த வெளிப்படைத்தன்மை உதவும். உண்மைகளை மறைத்துவிட்டு, வெறும் வெற்றி கோஷங்களுடன் கடந்து போனால், எதிர்காலத்திலும் மக்களைத் தவிக்க விடுவோம். இதை அரசுகள் புரிந்துகொள்ள வேண்டும்.