Published:Updated:

நமக்குள்ளே...

பெற்றோரே நம்பாத தன் இலக்கை, அந்தக் குழந்தை வேறு யாரிடம் விளக்க முடியும்? எப்படி நிரூபிக்க முடியும்?

பிரீமியம் ஸ்டோரி
ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. கல்லூரிப் படிப்பைத் தேர்ந்தெடுக்க வேண்டிய முக்கியமான காலகட்டத்தில் பல பெற்றோர்களும், மாணவர்களும் உள்ளனர்.

மேற்படிப்பு விஷயத்தில் பெற்றோர்களுக்கு, தங்களின் கனவுப் படிப்பு, தங்கள் நண்பர்கள்/உறவினர்களின் பிள்ளை படித்து நல்ல வேலைபெற்ற கோர்ஸ், தங்கள் பிசினஸில் தன் பிள்ளையை அமர்த்தப் பொருத்தமான படிப்பு, கல்வியாளர்கள் சுட்டிக்காட்டும் வளமான எதிர்காலம் தரும் படிப்பு... இப்படியான தேர்வுகள் இருக்கலாம். ஆனால், பிள்ளையின் விருப்பம், பல வீடுகளிலும் பின்னுக்குத் தள்ளப்படுகிறது, கொல்லப்படுகிறது. இதுவாக ஆக வேண்டும் என்ற அவர்களின் எதிர்கால ஆசையெல்லாம், காற்றில் பறக்கும் நீர்க்குமிழிகள் உடைபடும் தருணம்போல், அவர்களின் பள்ளிப்படிப்பு முடியும்போது பட்டென உடைந்துபோகிறது.

பெற்றோரே நம்பாத தன் இலக்கை, அந்தக் குழந்தை வேறு யாரிடம் விளக்க முடியும்? எப்படி நிரூபிக்க முடியும்?

சம்பாதிக்க, படிப்பு மட்டுமே அளவுகோல் இல்லை. பள்ளி, கல்லூரி இடைநின்ற எத்தனையோ இளைஞர்கள், இளம்பெண்கள், சுயதொழிலில் சாதித்து வருகிறார்கள். இன்னொரு பக்கம், கை நிறைய சம்பாதித்த வேலையை விட்டுவிட்டு, நேரெதிர் துறைக்கு மடை மாறுகிறார்கள் பலர். இரண்டுக்கும் காரணம் ஒன்றுதான்... மனதுக்குப் பிடிப்பதைச் செய்வது.

`குழந்தைகள் உங்கள் மூலம் வந்தவர்கள், உங்களிடமிருந்து வரவில்லை. உங்களுடன் இருந்தாலும் அவர்கள் உங்களுக்குச் சொந்தமில்லை' என்கிறார் கலீல் ஜிப்ரான். ஆனால், குழந்தைகளைத் தங்கள் உடைமைகளாகவே பார்க்கிறார்கள் பெரும்பாலான பெற்றோர்.

'கற்றல்குறைபாடுடைய உங்கள் குழந்தையை இனி பள்ளிக்கு அனுப்ப வேண்டாம்' என்ற கடிதத்துடன் அன்று வகுப்பிலிருந்து திரும்பிய தன் ஏழு வயது மகனை அணைத்துக்கொண்டு, வீட்டில் தானே பாடங்களைச் சொல்லிக்கொடுத்து வளர்த்தெடுத்தார் அந்தத் தாய். பின்னொரு நாள் தன் பெயர் வரலாற்றில் எழுதப்பட்ட பிறகு, 'தாமஸ் ஆல்வா எடிசன் ஒரு கற்றல்குறைபாடுள்ள குழந்தை என்று எழுதியவருக்கு நன்றி. அதனால் வெளிப்பட்ட அவன் அம்மாவின் ஹீரோயிஸம் அவனை நூற்றாண்டின் மேதையாக்கியது' என்று எழுதினார் எடிசன். தன் குழந்தையைப் பற்றிய ஒரு தாயின் தீர்க்கமான நம்பிக்கை, அவனை எதுவாகவும் ஆக்கும் வலிமையுடையது.

கொஞ்சம் உங்களைத் தளர்த்தி, பிள்ளையின் படிப்பு பற்றிய முன்முடிவுகளைத் தளர்த்தி, அவர்களிடம் மனம்விட்டுப் பேசிப்பாருங்களேன். `சரி, அந்த கோர்ஸை முடிச்சிட்டு என்ன பண்ணுவ?' என்று கேட்டுப்பாருங்களேன். தங்கள் கனவுப் பயணத்துக்கான வரைபடத்தை கூச்சத்துடனோ, கண்கள் விரித்தோ விவரிப்பார்கள். வழிவிட்டு, வாழ்த்தி, இலக்கடையும்வரை கதகதப்பு தந்துகொண்டிருங்கள் அந்த இளஞ்சிட்டுகளுக்கு.

மீனை, மரம் ஏறி வாழச் சொல்லாதிருப்போம்!

நமக்குள்ளே...
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு