பிரீமியம் ஸ்டோரி

`கொரோனா' பதற்றத்தில் நாடே பதுங்கிக் கிடக்கும் சூழலில், சத்தமில்லாமல் மத்திய அரசு, தமிழக விவசாயிகளின் உரிமைக்கு வேட்டு வைத்திருப்பது அனைவரையும் அதிரவைத்துள்ளது.

`நீர்வளம் மற்றும் நதிநீர் மேம்பாடு', `குடிநீர்' ஆகிய இரண்டு துறைகளையும் `ஜல் சக்தி' என்கிற பெயரில் ஒரே துறையாக கடந்த ஆண்டில் உருவாக்கியது மத்திய அரசு. ஆனால், தனக்கான அதிகாரங்களுடன் சுயேச்சையாக இயங்கிவந்த `காவிரி மேலாண்மை ஆணையம்', அப்படியே இயங்க அனுமதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், `ஜல் சக்தி' துறையில் அந்த ஆணையமும் சேர்க்கப்பட்டிருக்கிறது.

`இந்தியாவின் பல்வேறு நதிநீர் மேலாண்மை அமைப்புகளைப் போலவே, காவிரி நதிநீர் ஆணையமும் அந்தத் துறையில் சேர்க்கப்பட்டிருக்கிறது' என்று மத்திய அரசு கொடுத்திருக்கும் பொதுவான விளக்கம், காவிரி நீருக்காக அரைநூற்றாண்டுக்கும் மேலாகப் போராடிக்கொண்டிருக்கும் தமிழக விவசாயிகளை அதிர வைத்துள்ளது. இதையடுத்து, `ஆணையத்தின் சம்பளம் போன்ற நிர்வாக விஷயங்கள் மட்டுமே அமைச்சகரத்தின் கீழ் இருக்கும். மற்றபடி அதன் அதிகாரங்கள் குறைக்கப்படவில்லை’ என்று தமிழக அரசு அதிகாரிகள் ஓடோடி வந்து விளக்கம் கொடுக்கின்றனர்.

ஏற்கெனவே, உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு, ஏனோதானோவென்றே அந்த ஆணையம் உருவாக்கப்பட்டது. தற்போது, சம்பளம் உள்ளிட்ட விஷயங்களுக்காகவும் அமைச்சகத்திடம் கெஞ்சவேண்டிய சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிராகக் கொதித்தெழுந்து, போர்க்குரல் எழுப்பவேண்டிய இடத்திலிருக்கும் தமிழக அரசோ சப்பைக்கட்டு கட்டுகிறது.

பல ஆண்டுகள் சட்டப்போராட்டம், உச்சநீதிமன்றத் தலையீடு ஆகியவற்றின் காரணமாகவே காவிரி நதிநீர் ஆணையம் அமைக்கப்பட்டது. ஆனால் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் இன்றுவரையிலும் அந்த ஆணையத்துக்கு முழுநேரத் தலைவரைக்கூட மத்திய அரசு நியமிக்கவில்லை. மத்திய நீர்ப்பாசன வளர்ச்சித்துறைச் செயலாளரே இதன் `பொறுப்புத் தலைவராக’ இருந்து பார்த்துக்கொள்வார் என்று சொல்லி, தன் கட்டுப்பாட்டிலேயே இந்த ஆணையத்தை வைத்திருக்கிறது மத்திய அரசு. இப்போது ஆணையத்தை மேலும் நீர்த்துப்போகச் செய்யும் வேலையைக் கையில் எடுத்துள்ளது மத்திய அரசு. சுயேச்சையான நிறுவனங்களாக இருக்கும் நீதிமன்றங்களை சட்டத்துறை அமைச்சரகத்தின் சில ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுடைய நிர்வாகத்தின் கீழ் கொண்டுவந்தால் என்னவாகும்? இதே நிலைக்குத்தான் தள்ளப்பட்டுள்ளது காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையமும். பாரபட்சமின்றி முடிவுகள் எடுக்க வேண்டிய ஆணையம், அரசியல் நிர்பந்தங்களுக்கும் அரசின் அழுத்தங்களுக்கும் பணிய வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

`ஆணையத்தைத் தனித்துவமாக இயங்க உத்தரவிட வேண்டும்... தகுதியுள்ள முழுநேரத் தலைவரைத் தாமதமின்றி நியமிக்க வேண்டும்' என்பதுதான் தமிழக விவசாயிகளின் ஒருமித்த குரல். இந்தக் கோரிக்கைகளை அழுத்தமாக வலியுறுத்திச் சொன்னால்தான் `நான் விவசாயி' என்று தொடர்ந்து தன்னை எடப்பாடி பழனிசாமி அடையாளப்படுத்திக்கொள்வதற்கு அர்த்தமிருக்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு