கட்டுரைகள்
Published:Updated:

உயிர்களோடு விளையாடாதீர்கள்!

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
தலையங்கம்

தலையங்கம்

மதத்தின் பெயரைச் சொல்லிக்கொண்டு மனித உயிர்களோடு விளையாடும் உரிமை யாருக்கும் இல்லை. இதைப் பற்றிக் கவலைப்படாமல் தப்லிக் ஜமாத் அமைப்பு செயல்பட்டதோடு மட்டுமல்லாமல், இன்றுவரை மருத்துவப் பரிசோதனைக்கு ஒத்துழைக்காமல் அதன் உறுப்பினர்கள் ஒளிந்து ஓடுவதும் மனித நீதிக்கு எதிரானது.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஐயாயிரத்தைத் தாண்டியிருக்கிறது. ‘உயிரைவிடவும் எதுவுமே முக்கியம் இல்லை’ என்கிற நிலையில், குழந்தைகளின் படிப்பு, தொழில், வியாபாரம்... ஏன், அறுவை சிகிச்சைகள்வரைகூடத் தள்ளிவைக்கப்பட்டு வீட்டிலேயே முடங்கிக்கிடக்கிறார்கள் மக்கள். அதேசமயம், ஒரு சிலரின் அலட்சியம், அவர்களுடைய குடும்பத்தாருக்கும், சுற்றி இருப்பவர்களுக்கும் பெருங்கேடாக வந்து நிற்கிறது. அதிலும், ‘நான்கைந்து பேருக்கு மேல் கூடிநின்றாலே ஆபத்துக்கு வாசலைத் திறப்பது போன்றதுதான்’ என்கிற எச்சரிக்கைச் செய்திகள் றெக்கை கட்ட ஆரம்பித்த நேரத்தில், டெல்லியில் நடைபெற்ற ‘தப்லிக் ஜமாத்’ மாநாட்டில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டது பெரும் ஆபத்தை விதைத்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளான இந்தோனேசியா, தாய்லாந்து, மலேசியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து இந்த மாநாட்டுக்காகப் பலரும் வந்துள்ளனர். இவர்களுடன் நாடெங்கிலுமிருந்து இதற்காகத் திரண்டவர்கள் என மொத்தம் மூவாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் ஒரே இடத்தில் தங்க வைக்கப்பட்டனர்... ‘இந்த நேரத்தில், இப்படியொரு மாநாடு தேவையில்லை’ என்று சகாக்கள் அறிவுறுத்தியும் அதை அலட்சியப்படுத்தியிருக்கிறார் அந்த அமைப்பின் தலைவர் மௌலானா முகம்மது. ‘50 பேருக்கு மேல் கலந்துகொள்ளும் எந்த நிகழ்வும் டெல்லியில் நடைபெறக்கூடாது’ என்று டெல்லி அரசு அமல்படுத்தியிருந்த ஆணையையும் மதிக்காமல் கொஞ்சம்கூடப் பொறுப்பில்லாத நபராக, ஆர்ப்பாட்டத்துடன் இந்த மாநாட்டை நடத்தியிருக்கிறார் தப்லிக் ஜமாத் தலைவர். தடையை வலியுறுத்திய அதிகாரிகளும் அவமானப்படுத்தப்பட்டுள்ளனர்.

டெல்லி நிகழ்வை முடித்துவிட்டு இந்தியா முழுக்கப் பேருந்துகள், தொடர்வண்டிகளில் பொதுமக்களோடு பயணித்த வெளிநாடுகளைச் சேர்ந்த மதகுருமார்களின் மூலம், அவர்கள் சென்ற இடங்களிலெல்லாம் கொரோனா பரவியிருக்கிறது. இதனால், காஷ்மீர் தொடங்கி அந்தமான் தீவுகள் வரை 17 மாநிலங்களில் மொத்தம் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்குக் கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதில் ஐந்நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இருப்பது தமிழகத்தில்!

உலகமே அச்சத்தின் உச்சத்தில் உறைந்துகிடக்கும் நிலையில், மக்களுக்கு ஆன்மபலத்தை அதிகரிக்கச் செய்து வாழ்க்கையின்மீதான நம்பிக்கையை உறுதிப்படுத்தும் பணியைச் செய்யவேண்டியவர்களே, இப்படி நோய் பரப்பும் காரணிகளாக மாறிப்போனது மிகப்பெரும் துயரம். இதுமட்டுமல்ல, ‘வழிபாட்டுத் தலங்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்க வேண்டும்’ என்கிற அரசின் உத்தரவை மதிக்காமல் மசூதிகளில் பலர் ஒன்றுகூடுவது கண்டிக்கத்தக்கது. கொரோனாவைக் கட்டுப்படுத்த உலகமே தனித்திருத்தலைக் கடைப்பிடிக்கும்போது இவர்கள் கூட்டமாகத் திரள்வது கொரோனா அபாயத்தை அதிகரித்துள்ளது.

இதுபோன்றவர்களின் பொறுப்பற்ற செயலால் தற்போது ஒட்டுமொத்த இந்தியாவே கொடுத்துக்கொண்டிருக்கும் விலை... மிகமிக அதிகம்.