Published:Updated:

தெளிவும் உறுதியும்தான் தேவை!

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

தலையங்கம்

தெளிவும் உறுதியும்தான் தேவை!

தலையங்கம்

Published:Updated:
தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

கொரோனா குறித்துத் தமிழக மக்களுக்குக் கடிதம் எழுதியுள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழக அரசு செய்த பணிகளைப் பட்டியலிட்டுள்ளார். மருத்துவப்பணியாளர்கள், காவல்துறையினர், தூய்மைப்பணியாளர் எனப் பலரின் அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பு இந்தப் பணிகளுக்குச் செலவழிக்கப்பட்டுள்ளது என்பது உண்மையே. ஆனால் தமிழக அரசு இத்தனை முயற்சிகளை மேற்கொண்டும் அது ஏன் விழலுக்கு இறைத்த நீராகி, சென்னையில் கொரோனாத் தாக்கம் அதிகரித்துக்கொண்டே போகிறது என்பது குறித்துத் தமிழக அரசு சிந்திக்க வேண்டிய நேரம் இது.

எந்த ஒரு பிரச்னைக்கும் தீர்வு காண சரியான முடிவுகளையும் நிலைப்பாடுகளையும் எடுப்பதும் அந்த நிலைப்பாட்டில் உறுதியாக நிற்பதும்தான் அவசியம். ஆனால் தமிழக அரசு மாற்றி மாற்றி நிலைப்பாடுகளை எடுத்ததும் எடுத்த நிலைப்பாட்டில் உறுதியாக நிற்காததும்தான் கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியாமைக்குக் காரணம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கடைகள் மூடப்படும் நேரத்தைக் குறைத்துக் கூட்டம் அதிகரிக்க வாய்ப்பை ஏற்படுத்தியது, கொரோனா குறித்து ஆராய டெல்லியில் இருந்து ஒரு குழு வருகிறது என்றது, ஊரடங்குக்குள் ஊரடங்கு என்ற தமிழக அரசின் விநோதமான அறிவிப்பால் கோயம்பேட்டில் மக்கள் கூட்டம் குவிந்தது, பிறகு கோயம்பேட்டைத் தாமதமாக மூடிவிட்டு ‘வியாபாரிகள் ஒத்துழைக்கவில்லை’ என்று பழியைத் தூக்கி வியாபாரிகள் மீது போட்டது என்று எதற்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும், எப்படித் திட்டமிட வேண்டும் என்ற தெளிவில்லாத தமிழக அரசின் உறுதியில்லாத நிலைப்பாடுகள் குறித்தும் எடப்பாடி பழனிசாமியைப் போலவே விரிவாகப் பட்டியலிட முடியும்.

கொரோனாத் தாக்கம் அதிகரிக்கும் சூழலில் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வை நடத்தியே ஆகவேண்டும் என்று தமிழக அரசு அவசரம் காட்டுவதை சென்னை உயர்நீதிமன்றம் கண்டித்திருக்கிறது. மற்ற வகுப்புகளுக்குப் பாடத்திட்டத்தை நிர்ணயிப்பதற்கும் பள்ளிகளை எப்போது திறக்கலாம் என்பதை முடிவு செய்யவும் ஒரு குழுவை அமைத்துள்ள தமிழக அரசு, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் குறித்துக் கல்வியாளர்களைக் கலந்தாலோசித்து மாற்றுவழிகள் குறித்து ஏன் யோசிக்க மறுக்கிறது? கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனைகளில் இடம் கிடைக்கவில்லை என்ற புகார்கள் வந்துகொண்டே இருந்தாலும் அரசு அதைப் பூசி மெழுகவே பார்ப்பது ஏன்?

சுகாதாரத்துறைச் செயலாளர் பீலா ராஜேஷ், தலைமைச்செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் கொரோனா பாதிப்பு மற்றும் தடுப்பு குறித்த அறிவிப்புகளை அடுத்தடுத்து வெளியிட்டனர். பிறகு ஒவ்வொரு மண்டலத்துக்கும் ஓர் அதிகாரி நியமிக்கப்பட்டார். அடுத்து, சென்னையின் கொரோனா பாதிப்பைத் தடுப்பதற்கென்றே சிறப்பு அதிகாரியாக ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டார். அடுத்தகட்டமாக ஐந்து அமைச்சர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் ‘கொரோனாத் தடுப்பு நுண்ணிய செயல்திட்டச் சிறப்பு ஒருங்கிணைப்பாளர்’ என்ற பதவியில் பங்கஜ்குமார் பன்சால் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார். எந்த அதிகாரிக்கும் செயல்படுவதற்கான அவகாசம் அளிக்காமல் பொறுப்புகளை மாற்றிக்கொண்டேயிருப்பது தமிழக அரசின் உறுதியற்ற நிலைப்பாடுகளையே காட்டுகிறது.

அதிகாரிகள் மாறுவதால் பயனில்லை. அரசின் அணுகுமுறை மாற வேண்டும். தெளிவான முடிவுகளையும் நிலைப்பாட்டையும் எடுப்பது, அதில் உறுதியாக நின்று செயல்படுத்துவது மட்டும்தான் கொரோனாத் தடுப்புப் பணியில் பயனளிக்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism