Published:Updated:

முழு ஊரடங்கு மட்டுமே முழுமையான தீர்வல்ல!

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
தலையங்கம்

தலையங்கம்

தமிழகத்தின் தலைநகரான சென்னையில் வசிக்கும் மக்களை, கொரோனா குறித்த அச்சமும், யாரைப் பார்த்தாலும் `இவருக்குக் கொரோனாத் தொற்று இருக்குமோ' என்ற சந்தேகமும் சூழ்ந்துள்ளது. `முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு' என்ற அடைமொழியுடன்தான் சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினந்தோறும் அறிவிக்கப்படுகிறது.

ஒருபுறம் நோய் குறித்த அச்சம், இன்னொருபுறம், அடுத்தவேளை உணவே உறுதியில்லாத நிலையில், வீட்டு வாடகை உள்ளிட்ட பல்வேறு பொருளாதார நெருக்கடிகள் காரணமாகப் பலர் சென்னையிலிருந்து குழந்தைகளுடன் நடந்தே சொந்த ஊர்களுக்குக் கிளம்பிச் செல்லத் தொடங்கிவிட்டனர். வந்தாரை வாழ வைத்த சென்னை, இப்போது அவர்களை வருத்தத்துடன் வழியனுப்பிவைக்கிறது.

சென்னையில் கொரோனா பாதிப்பைக் குறைக்க `12 நாள்கள் முழு ஊரடங்கை' மீண்டும் அறிவித்துள்ளது தமிழக அரசு. சென்ற ஊரடங்கில் இறைச்சிக்கடைகள் உள்ளிட்டவற்றுக்கு இருந்த தளர்வுகள்கூட இப்போது முற்றிலும் நீக்கப்பட்டு இந்த முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படுகிறது. கோயம்பேடு உள்ளிட்ட மக்களின் அத்தியாவசியத் தேவைகளுக்குரிய இடங்களைச் சரிவரக் கையாளாமல் விட்டது, கடும் எதிர்ப்புகளையும் மீறி டாஸ்மாக் கடைகளைத் திறந்தது, ஊரடங்குக்குள் ஊரடங்கு, கடைகள் திறந்திருக்கும் நேரத்தை அடிக்கடி மாற்றியமைத்தது போன்ற கடந்தகாலத் தவறுகளிலிருந்து பாடம் கற்று, அத்தகைய தவறுகள் நிகழாமல் இந்த ஊரடங்கை நடைமுறைப்படுத்த வேண்டியது தமிழக அரசின் கடமை. முழு ஊரடங்குக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கவேண்டியது பொதுமக்களின் கடமை.

‘ஆனால், ஊரடங்கு மட்டுமே தீர்வாகாது’ என்று சொல்லும் தமிழக சுகாதாரத்துறையின் முன்னாள் செயலாளர் பூர்ணலிங்கம் ஐ.ஏ.எஸ் போன்றவர்களின் அனுபவப் பாடங்களையும் கவனத்தில் கொள்ளவேண்டியது அவசியம். 90களில் உலகையே உலுக்க ஆரம்பித்த உயிர்க்கொல்லியான ஹெச்.ஐ.விக்கு எதிரான நடவடிக்கைகளைத் தமிழகத்தில் வெற்றிகரமாக முன்னெடுத்தவர் இந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி என்பது கவனிக்கத்தக்கது. பூர்ணலிங்கம் போன்ற நிபுணர்களின் கருத்துப்படி ஊரடங்கைத் தாண்டித் தமிழக அரசு செய்யவேண்டிய பணிகள் ஏராளம் இருக்கின்றன.

ஒடிசா அரசு தனியார் மருத்துவமனைகளுக்குத் தகுந்த தொகையை அளித்து அவற்றைத் தன்வசப்படுத்தி, மாவட்டந்தோறும் கொரோனாவுக்கான சிறப்பு மருத்துவமனைகளாக மாற்றியுள்ளது. தமிழகத்தில் அப்படி கொரோனாவுக்கு என்று தனி மருத்துவமனைகளே இல்லை. அரசு மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு என்று தனி வார்டுகள் இருந்தாலும் வார்டுகளுக்கு இடையே சமூக விலகல் முறையாகக் கடைப்பிடிக்கப்படாததால் அரசு மருத்துவமனைகளில் மருத்துவப்பணியாளர்களுக்கும் மற்ற நோயாளிகளுக்கும்கூட கொரோனா பரவுகிறது. எனவே, தமிழக அரசு கொரோனாவுக்கு என்று தனி மருத்துவமனைகளை எல்லா மாவட்டங்களிலும் அமைக்க வேண்டும்.

ஒடிசாவில் ஊராட்சி ஒன்றியத் தலைவருக்கு மாவட்ட ஆட்சித் தலைவருக்கு நிகரான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதால் கொரோனாத் தடுப்புப் பணிகள் பரவலாக்கப்பட்டுள்ளன. மக்களும் உள்ளூர் நிர்வாகிகளுடன் ஒத்துழைக்கின்றனர். தமிழகத்திலோ அதிகாரிகளுக்கே முழுமையாகச் செயல்பட அதிகாரம் வழங்கப்படவில்லை. அடிக்கடி அதிகாரிகள் மாற்றப்படுவதால் கொரோனா தடுப்புப் பணிகள் பாதிக்கப்படுகின்றன.

சென்னையில் மண்டலங்களுக்கு ஏற்ப கொரோனாத் தடுப்புக்காக நியமிக்கப்பட்ட ஐந்து அமைச்சர்களும் முழுமையாகச் சென்னையில் தங்கிப் பணிகளை மேற்கொள்வதில்லை. அதில் ஓர் அமைச்சரே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி வெளியானதும் அதைத் தமிழக அரசு மறுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. தலைமைச்செயலக ஊழியர்கள், முதல்வர் உள்ளிட்ட பல அமைச்சர்களின் உதவியாளர்கள், வாகன ஓட்டுநர்கள் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது குறித்துச் செய்திகள் வெளியாகவே செய்கின்றன. சென்னையில் கொரோனா தனிமைப்படுத்தல் முகாம்களில் கழிவறை போன்ற அடிப்படை வசதிகள்கூட இல்லாத அவலம் தொடர்கிறது. மருத்துவமனைகளில் அனுமதி கிடைப்பதில்லை, தகுந்த படுக்கைகள் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் நிலவுகிறது.

சென்னையிலிருந்து வெளியூருக்குச் செல்வதற்குக் கடும் கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்பட்டாலும், செல்வாக்கைப் பயன்படுத்தி வெளியூருக்குச் செல்பவர்கள் மற்றும் கெடுபிடிகளை ஏமாற்றி வெளியூருக்குச் செல்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கத்தான் செய்கிறது. இதனால் வெளியூர்களிலும் இப்போது கொரோனா பாதிப்பு அதிகரிக்கிறது. தகுந்த மருத்துவ வசதிகள் இல்லாதபோது எல்லோரையும் சென்னையில் அடைத்துவைக்க வேண்டியது சரிதானா என்று தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும். சென்னையிலிருந்து சொந்த ஊருக்குச் செல்பவர்களைத் தகுந்த பரிசோதனை செய்து, எல்லா மாவட்டங்களிலும் கொரோனா மருத்துவ முகாம்களை அமைத்து அங்கேயே தனிமைப்படுத்தலை மேற்கொள்ள வேண்டும். இதனால் சென்னையில் கொரோனாப் பரவல் குறையவும் வாய்ப்புள்ளது.

சீனாவும் கேரளாவும் அலோபதி மருந்துகளுடன் பாரம்பர்ய மருந்துகளையும் பயன்படுத்தி கொரோனாவுக்கு எதிரான போரில் சிறப்பான வெற்றியைப் பெற்றுள்ளன. தமிழகத்திலும் சித்த மருத்துவத்தால் கொரோனா நோயாளிகள் விரைவில் குணமடைவதாகத் தகவல்கள் வெளியாகின்றன. எனவே, அலோபதியுடன் மாற்று மருத்துவ முறைகளையும் இணைத்த ஒருங்கிணைந்த சிகிச்சை முறைக்குக் கூடுதல் முக்கியத்துவத்தைத் தர தமிழக அரசு முன்வர வேண்டும்.

இதுபோன்ற இன்னும் பல சாதகமான, அவசியமான அம்சங்களையும் பரிசீலித்து, ஊரடங்கோடு அவற்றையும் நடைமுறைப்படுத்தினால்தான் தகுந்த பலன் கிடைக்கும். அதை விட்டுவிட்டு, `சென்னையில் சமூகப்பரவல் நடைபெறவில்லை’, `கொரோனாவைத் தடுப்பது மக்கள் கையில்தான் உள்ளது', `கொரோனா எப்போது ஒழியும் என்று கடவுளுக்குத்தான் தெரியும்' என்றெல்லாம் தமிழக முதல்வர் என்கிற பதவியில் இருந்துகொண்டு எடப்பாடி பழனிசாமி பேசுவது பொறுப்பற்றதனத்தையே காட்டுகிறது.

பொறுப்பை உணர்ந்து, இனியாவது விழித்துக்கொண்டு தீவிரமாகக் களத்தில் இறங்குங்கள் முதல்வரே!