கட்டுரைகள்
பேட்டிகள்
Published:Updated:

இந்தச் சிக்கனம் எக்கணமும் தேவை!

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
தலையங்கம்

தலையங்கம்

கொரோனாவும் ஊரடங்கும் இந்தியப் பொருளாதாரத்தைக் குலைத்துப்போட்டிருக்கும் நிலையில் அதைச் சரிசெய்வதற்காக எடுத்துவைக்கப்படும் எந்த ஓர் அடியும் வரவேற்கப்பட வேண்டியதே. வரி வருவாய் குறைந்திருக்கும் இந்த நேரத்தில், மாநில அரசின் கையிருப்பில் இருக்கும் நிதி மிகச் சொற்பமானது.

அதன் பலன், சிந்தாமல் சிதறாமல் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அதிலும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட அடித்தட்டு மக்களுக்குச் சென்று சேர வேண்டும். அரசின் அவசர - அவசியமில்லாத செலவுகளைக் கட்டுப்படுத்தியாக வேண்டும். இந்த அடிப்படையில் தமிழக அரசு அறிவித்திருக்கும் சிக்கன நடவடிக்கைகள் வரவேற்கப்பட வேண்டியவை.

அதிகாரிகள் மற்றும் அரசு ஊழியர்களின் பயணச்செலவுகளைக் கட்டுப்படுத்த அவர்களுக்குப் பல கட்டுப்பாடுகளைத் தமிழக அரசு அறிவித்துள்ளது. புதிய அலுவலகம் அமைத்தல், ஏற்கெனவே உள்ள உள்கட்டமைப்புகளை மேம்படுத்துதல் போன்றவற்றுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் 50 சதவிகிதத்தை அரசு குறைத்துள்ளது. அதேபோல் முன்னெச்சரிக்கையுடன் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டியிருப்பதால், அரசு நிகழ்ச்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியும் குறைக்கப்பட்டுள்ளது.

சுகாதாரத்துறை, தீயணைப்புத்துறை, மீட்புப்பணிகள் துறை போன்றவற்றைத் தவிர மற்ற துறைகளுக்கு உபகரணங்கள் வாங்குவது தள்ளி வைக்கப்படுவதுடன் இதற்காக ஒதுக்கப்பட்ட நிதியில் 25 சதவிகிதம் குறைக்கப்பட்டிருப்பதாகவும் அரசு தெரிவித்திருக்கிறது. மருத்துவத்துறை, காவல்துறை, தீயணைப்புத்துறை தவிர மற்ற துறைகளுக்கு வாகனங்கள் வாங்குவதும் தடை செய்யப்பட்டுவிட்டதாக அரசு அறிவித்திருக்கிறது. தேவையற்ற வெளிநாட்டுப் பயணங்களுக்குத் தடை, காணொலிக் காட்சி மூலம் ஆய்வுக்கூட்டங்கள், பரிசுப் பொருள்கள், பூங்கொத்துகள், சால்வைகள், நினைவுப் பரிசுகள், மலர் மாலைகள் உள்ளிட்ட இதர பொருள்களை வாங்குவதற்குத் தடை ஆகியவை ஆக்கபூர்வமான சிக்கன நடவடிக்கைகள்.

இத்தகைய நடவடிக்கைகள் நிவாரணப்பணிகளை மேம்படுத்தவும் அரசு திட்டமிடலுக்கும் உதவும். ஆனால் இத்தகைய நடவடிக்கைகள் கொரோனா காலத்துடன் முடிந்துவிடக்கூடாது என்பதே மக்கள்நலனில் அக்கறையுள்ள அனைவரின் விருப்பமும். இவற்றுள் அவசியமான, சாத்தியமான நடவடிக்கைகளை கொரோனா காலத்துக்குப் பிறகும் தொடரவேண்டும். ஆடம்பரமான அரசு விழாக்கள், ‘மரியாதை நிமித்தமான சந்திப்பு’ என்ற பெயரில் ஆளுநர், முதலமைச்சர், உயர் அதிகாரிகளைச் சந்திக்கச் செல்லும்போது பூங்கொத்துகள், பரிசுப்பொருள்கள் ஆகியவற்றை வாங்கிச்செல்வது, தேவையற்ற வெளிநாட்டுப்பயணங்கள், அமைச்சர்கள், உயர் அதிகாரிகளின் வாகனங்களைத் தொடரும் வாகன அணிவகுப்பு ஆகியவற்றை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும்.

ஊழலும் ஊதாரித்தனமும் ஒழிந்தால் அரசு நிர்வாகம் மேம்படும். அதன் பலன் மக்களுக்குப் போய்ச்சேரும். அரசு நிறுவனங்களும் லாபத்தில் இயங்கும். கொரோனா கற்றுக்கொடுத்திருக்கும் இந்தப் பாடம் எதிர்காலத்துக்கும் சேர்த்துதான்.