பிரீமியம் ஸ்டோரி

கொரோனாவுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படாத சூழலில் நம் கைவசம் உள்ள ஒரே தீர்வு சமூக இடைவெளிதான். ஆனால் இந்தச் சமூக இடைவெளியைக் குலைத்து கொரோனா பரவல் அதிகமாவதற்குத் தமிழக அரசே காரணமாக இருக்கலாமா என்ற கேள்விதான் எழுகிறது.

பாதுகாப்பு முறைகளையும் சமூக இடைவெளியையும் மக்கள் கடைப்பிடித்துப் பழகிவந்த நேரத்தில் திடீரென்று குறிப்பிட்ட மாநகராட்சிப் பகுதிகளில் மட்டும் முழு ஊரடங்கு என்று அறிவித்தார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. ஏற்கெனவே கொரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் இந்த முழு ஊரடங்குக்கு என்ன அவசியம்? அப்படி அறிவிப்பதாக இருந்தாலும் போதுமான கால அவகாசம் கொடுத்து அறிவிக்க வேண்டாமா? ‘ஞாயிறு முதல் நான்குநாள்கள் முழு ஊரடங்கு’ என்று அரசு அறிவித்தவுடன், நான்கு நாள்களுக்கான பொருள்களை வாங்க மக்கள் கூட்டம் கூட்டமாகக் குவிந்தனர். ‘கொரோனா பரவலைத் தடுக்க முழு ஊரடங்கு’ என்று அரசு அறிவித்த நோக்கத்துக்கு எதிர்மாறாகத்தான் அமைந்தது அரசின் இந்த தடாலடி அறிவிப்பு.

முதன்முதலில் ஊரடங்கை அறிவித்தபோதும் கால அவகாசம் கொடுக்காமல் ஒருநாள் இடைவெளியில்தான் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அப்போதும் எந்தப் பாதுகாப்புமின்றிக் கூட்டம் கூட்டமாக மக்கள் பேருந்துகளிலும் ரயில்களிலும் பயணித்ததைக் கண்டோம். இப்போதும் கால அவகாசம் கொடுக்காமல் திடீரென்று அறிவித்தது மட்டுமல்லாமல் முன்னுக்குப் பின் முரணான அறிவிப்புகளும் குழப்பத்தையே ஏற்படுத்துகின்றன.

பெரும் பீதியுடன் பொதுமக்கள் அங்காடிகளில் கூடியதைப் பார்த்த சென்னை மாநகராட்சி, ``முழு ஊரடங்கின்போது காய்கறிக் கடைகள் திறந்திருக்கும்’’ என்று அறிவித்தது. ஆனால் அன்று மாலையே, ``சில்லறை விற்பனை செய்யும் காய்கறிக் கடைகளைச் சொல்லவில்லை. கோயம்பேடு மொத்த விற்பனை காய்கறிக் கடைகளைத்தான் சொன்னோம்’’ என்று ஏற்கெனவே வெளியிட்ட விளக்கத்துக்கு விளக்கம் கொடுத்தது. முதல்வர் தன் பங்கிற்கு, ``மதியம் ஒரு மணிக்கு வழக்கமாக மூடப்படும் மளிகைக்கடைகளும் காய்கறிக் கடைகளும் சனிக்கிழமை மதியம் மூன்று மணிவரை செயல்படும்’’ என்று அறிவித்தார். இப்படி முன்னுக்குப் பின் முரணான அறிவிப்புகள் குழப்பங்களை ஏற்படுத்தின.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கேரள அரசு மக்களுக்குத் தேவையான பொருள்களை நேரடியாகக் கொண்டுசேர்த்து ஊரடங்கை வெற்றிகரமாகக் கையாண்டு, கொரோனா அபாயத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கிறது. ஆனால் தமிழக அரசோ அதில் இருந்து பாடம் படிக்காமல் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாகப் புதிய புதிய அறிவிப்புகளை வெளியிடுகிறது. ஏன் இத்தனைக் குழப்பங்கள், முடிவெடுப்பதில் தடுமாற்றங்கள்? மக்கள் வெளியில் வரத் தேவையில்லாத அளவுக்கு அனைத்துப்பொருள்களையும் நேரடியாகக் கொண்டுசேர்க்கும் முயற்சியில் தமிழக அரசு இறங்குவது ஒன்றுதான் இந்த ஊரடங்கை வெற்றிகரமாக ஆக்கும்.

சரியான திட்டமிடலும் குழப்பம் இல்லாத அறிவிப்புகளுமே மக்களுக்கு நன்மை சேர்க்கும். ஏற்கெனவே பீதியில் ஆழ்ந்திருக்கும் மக்களை மேலும் பீதியூட்டாதீர்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு