கட்டுரைகள்
Published:Updated:

வீட்டிலேயே இருங்கள்.... வெறிச்சோடட்டும் தெருக்கள்!

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
தலையங்கம்

தலையங்கம்

அசாதாரணமான ஒரு சூழ்நிலையை இப்பொழுது நாம் கடந்து கொண்டிருக்கிறோம்.

கொரோனாவிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ள சுய ஊரடங்கு, மக்கள் ஊரடங்கு, சமூகத்தனிமை எனப் பலவற்றைக் கடைப்பிடித்திருக்கும் நாம் இப்போது அடுத்த கட்டத்தில் இருக்கிறோம். தமிழகத்தில் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டிவிட்டது.

வீட்டிலேயே இருங்கள்.... வெறிச்சோடட்டும் தெருக்கள்!

நமக்கான கட்டுப்பாடுகள் அதிகமாகிக்கொண்டே போகின்றன. மாலைவரை செயல்பட்ட மளிகைக்கடைகளும் பெட்ரோல் பங்குகளும் மதியம் 2.30 மணி வரைதான் செயல்பட வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. வீட்டில் இருந்தே பணிபுரியும் கலாசாரத்துக்கு நாம் கொஞ்சம் கொஞ்சமாகப் பழக ஆரம்பித்திருக்கிறோம். இப்போது நாம் கடைப்பிடிக்கும் சமூகத்தனிமையை இதே உறுதியுடன் இன்னும் தீவிரமாகப் பின்பற்ற வேண்டும். `ஏப்ரல் 14-க்கு மேல் ஊரடங்கை நீட்டிக்கும் எண்ணமில்லை' என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது. அதற்குள் எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவோம். ஒருவேளை நிலைமைகள் சரியாகவில்லை என்றால் இன்னும் சுயக்கட்டுப்பாட்டுடன் நாம் தனிமைப்படுதலைக் கடைப்பிடிக்க வேண்டியிருக்கும்.

மருத்துவப் பணியாளர்கள், தூய்மைப்பணியாளர்கள், காவல்துறையினர் போன்றவர்கள் நம்மைக் காக்க சேவை மனப்பான்மையுடன் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றனர். வீட்டுக்குச் சென்றாலும் தங்கள் குழந்தைகளிடமும் குடும்பத்திடமும் தள்ளியே இருக்கும் நிலை. இவர்களின் அர்ப்பணிப்பு மனப்பான்மையை நாம் போற்ற வேண்டும். ஆனால் சிலர் மருத்துவப் பணியாளர்களைப் புறக்கணிக்கப்பட்டவர்களைப்போல் நடத்துவது, வீட்டைக் காலி செய்யச் சொல்லி நிர்பந்திப்பது ஆகியவற்றை மேற்கொள்வது கடுமையாகக் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று. மருத்துவர்களுக்குத் தகுந்த கவசங்கள் வழங்கப்படவில்லை, சிகிச்சையளிக்கப் போதிய வென்டிலேட்டர்கள் இல்லை என்பது போன்ற குறைகளை அரசு உடனடியாகச் சரிசெய்ய வேண்டும்.

இவ்வளவு பேர் அர்ப்பணிப்புடன் நமக்காகச் செயல்படுகிறார்கள் என்றால், சுயக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிப்பதே நாம் அவர்களுக்கு அளிக்கும் மரியாதை. அதி அவசரத் தேவை இருந்தாலொழிய நாம் யாரும் இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. நம் அலட்சியமும் அறியாமையும் ஓர் உயிரல்ல பல உயிர்கள் போகக் காரணமாகிவிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

குறு, சிறு, பெருந்தொழில் நடத்துகிறவர்களுக்கும் இதில் பெரும்பங்கு உண்டு. ஆம், உங்கள் நிறுவனத்தில் பணியாற்றிய அண்டை மாவட்ட அல்லது மாநிலப் பணியாளர்களுக்கு, அரசு கூறியிருப்பதுபோல உணவும் உறைவிடமும் கொடுத்து நீங்கள் ஆதரவளிக்க வேண்டும்; இந்த ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அரசு சொல்லியிருக்கும் பாதுகாப்பு வழிமுறைகளின்படி உதவுவோம்.

சுயநலமாக எடுத்துக்கொண்டாலும் சரி, பொதுநலமாக எடுத்துக்கொண்டாலும் சரி, நம்மை நாம் காத்துக்கொள்வதன் மூலமே நாட்டைக் காக்க முடியும்.