Published:Updated:

நல்ல அரசுக்கு...

கொரோனா
பிரீமியம் ஸ்டோரி
கொரோனா

தலையங்கம்

நல்ல அரசுக்கு...

தலையங்கம்

Published:Updated:
கொரோனா
பிரீமியம் ஸ்டோரி
கொரோனா

பொதுவாக ஆளுங்கட்சியின்மீது எதிர்க்கட்சிகள்தான் குற்றம் சாட்டும். ஆனால், ‘தமிழக அரசு விதிமீறலும் முறைகேடும் செய்கிறது’ என்று மத்திய அரசு ஒரு திட்டத்துக்கே சிவப்புக்கொடி காட்டியுள்ளது. அதுவும் ஒருமுறை அல்ல, இருமுறை.

கொரோனாப் பெருந்தொற்றுக்காலத்திலும் பல்வேறு பணிகள் நடைபெறவும் ஆன்லைன் வகுப்புகள் நடைபெறவும் இணைய வசதியே அடித்தளமாக இருந்தது. இந்த இணைய வசதி இந்தியாவின் எல்லாக் கிராமங்களுக்கும் சென்று சேரவேண்டும் என்பதற்காகக் கொண்டுவரப்பட்டதுதான் மத்திய அரசின் `பாரத்நெட்' திட்டம்.

தமிழகத்தில் இந்தத் திட்டத்துக்கான டெண்டர், ஆரம்பம் முதலே சர்ச்சைக்குரியதாக மாறியது. 1,950 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்தப் பணிக்கான டெண்டரை அறிவித்தபிறகு, சில நாள்கள் கழித்து டெண்டர் விதிகளை மாற்றி ஒரு திருத்தம் வெளியிட்டது தமிழக அரசு. அதன்மூலம் பல நிறுவனங்களை டெண்டரில் கலந்துகொள்ள விடாமல் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்துக்கு சாதகமாகச் செய்யப்பட்ட இந்த விதிமீறலுக்குப் பணிந்துகொடுக்காத ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தோஷ்பாபு, தகவல் தொழில்நுட்பத் துறை முதன்மைச் செயலாளர் பதவியிலிருந்து தூக்கியடிக்கப்பட்டார். பிறகு அவர் விருப்ப ஓய்வு பெற்றுப் பதவி விலகும் சூழலும் நேர்ந்தது பெரும் வேதனை.

தமிழக அரசின் பாரத்நெட் டெண்டர் முறைகேடுகளை அறப்போர் இயக்கம் ஆதாரங்களுடன் மத்திய அரசின் கவனத்துக்குக் கொண்டுபோனது. அதனால் கடந்த ஜூன் மாதம் மத்திய அரசு இந்த டெண்டரை நிறுத்திவைத்ததுடன் ‘பாரபட்சமற்ற முறையில் டெண்டரை விடுமாறு’ தமிழக அரசுக்கு அறிவுறுத்தியது.

நல்ல அரசுக்கு...

என்றாலும் தமிழக அரசு இரண்டாவது முறையாக டெண்டர் விடும்போதும் அதேபோன்ற தவறு செய்திருக்கிறது. ஒரே ஒரு வெளிநாட்டு நிறுவனத்தின் ரௌட்டர்களை மட்டுமே வாங்கிப் பயன்படுத்தும் வகையில் டெண்டர் விதிகளை தமிழக அரசு வகுத்துள்ளது. ‘மேக் இன் இந்தியா' என்று சொல்லும் மத்திய அரசு இந்த முறைகேட்டை எப்படி அனுமதிக்கலாம் என்று கேட்டு அறப்போர் இயக்கம் மீண்டும் போர்க்கொடி பிடித்தது.

இதையடுத்து, ‘உள்நாட்டு நிறுவனங்களைப் பங்கேற்க விடாமல் செய்த அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தப் பிரச்னையைத் தீர்க்காமல் டெண்டரை முடிவு செய்ய வேண்டாம்’ என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஊழலுக்கு எதிரான அறப்போர் இயக்கத்தின் முயற்சிக்கு வாழ்த்துகள்.

ஏற்கெனவே அம்பலப்பட்டபோதும் அதுகுறித்த எந்தக் கூச்சமும் இன்றி மீண்டும் மீண்டும் தமிழக அரசு அதிகாரிகள் முறைகேடுகளில் ஈடுபட்டிருப்பது அவமானகரமானது. இந்த முறைகேடுகளுக்குப் பின்னணியில் உள்ள அதிகாரிகள், அரசியல் சக்திகள் குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட்டு, தவறுகளுக்குக் காரணமான அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும். கிராமங்களை இணையத்தால் இணைக்கும் திட்டத்தில் முறைகேடுகள் செய்வதன்மூலம் மக்களின் பணத்தைச் சுரண்ட நினைப்பவர்களுக்கு, விரைவில் நடைபெறும் தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism