பிரீமியம் ஸ்டோரி

மத்திய அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் டெல்லியில் நடத்திவரும் போராட்டம் ஓராண்டைத் தொடும் நேரத்தில், அந்தச் சட்டங்களை வாபஸ் பெறுவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருப்பது போராடும் விவசாயிகளை நிம்மதிப் பெருமூச்சு விடவைத்திருக்கிறது. ‘‘இதனால் சிரமங்களைச் சந்தித்தவர்களிடம் நான் பரிசுத்தமான இதயத்துடன் மன்னிப்பு கோருகிறேன். இந்தச் சட்டங்களின் முக்கியத்துவத்தை விவசாயிகளுக்கு விளக்க முடியவில்லை என்பதால் திரும்பப் பெற முடிவு செய்திருக்கிறோம்’’ என்று பிரதமர் மோடி கூறியிருக்கிறார்.

அத்துடன் நிற்காமல், ‘‘விவசாயிகள் எழுப்பிவரும் பல்வேறு பிரச்னைகள் குறித்துப் பரிசீலிக்க மத்திய, மாநில அரசு அதிகாரிகள், விவசாய நிபுணர்கள், விவசாயிகள் அடங்கிய குழு அமைக்கப்படும். விவசாயிகளுக்கு வளமான எதிர்காலத்தை சாத்தியமாக்குவது குறித்து இந்தக் குழு ஆராயும்’’ என்றும் பிரதமர் உறுதி கொடுத்திருக்கிறார்.

பிரதமரின் இந்த அறிவிப்பை, `விவசாயிகளின் ஒரு வருட தொடர் போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றி’ என்று எதிர்க்கட்சிகள் வர்ணிக்கின்றன. உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட் மாநிலங்களில் நடக்கவுள்ள தேர்தலை உத்தேசித்தே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. அரசியல் நிர்ப்பந்தங்கள் காரணமாக எடுக்கப்பட்ட முடிவாக இருந்தாலும், இது வரவேற்கத்தக்க முடிவே!

நம்பிக்கையை விதையுங்கள்!

பிரதமர் மோடியின் ஏழரை ஆண்டுக்கால ஆட்சியில் அதிக எதிர்ப்பைச் சந்தித்தவை இந்த வேளாண் சட்டங்கள்தான். விவசாயிகள் தரப்பின் கருத்தைக் கேட்காமல், வெளிப்படையான விவாதங்கள் இல்லாமல், மாநில அரசுகளையும் கலந்தாலோசிக்காமல் அவசரக்கோலத்தில் இவை நிறைவேற்றப்பட்டன. அப்போதே எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டனர். மத்திய அமைச்சருடன் விவசாயிகள் சங்கங்களின் பிரதிநிதிகள் நடத்திய பேச்சுவார்த்தைகள் எந்த முடிவையும் எட்டவில்லை. ஒரு கட்டத்தில் உச்ச நீதிமன்றத்தின் தலையீடு காரணமாக, மூன்று வேளாண் சட்டங்களையும் நடைமுறைப்படுத்துவதை மத்திய அரசு நிறுத்தி வைத்தது. என்றாலும், ‘சட்டங்களை வாபஸ் பெறுவது தவிர வேறு எந்தக் கோரிக்கை பற்றி வேண்டுமானாலும் பேச்சுவார்த்தை நடத்தலாம்’ என்று மத்திய அரசு பிடிவாதம் காட்டியது. உறுதியாக ஓராண்டுக் காலம் போராடி தங்கள் கோரிக்கையை வென்றெடுத்திருக்கிறார்கள் விவசாயிகள்.

ஜனநாயகத்தில் மக்களின் குரலுக்கு மதிப்பு கொடுக்க வேண்டியது அரசின் பொறுப்பு. எந்தச் சட்டமும் கொள்கை முடிவும் மக்களின் விருப்பத்தைவிட உயர்ந்தது இல்லை. ஆட்சியாளர்கள் தங்களின் கண்களையும் காதுகளையும் திறந்துவைத்து, மக்கள் கருத்தைக் கேட்க வேண்டும். காலம் தாழ்த்தியேனும் விவசாயிகளின் குரலுக்கு மத்திய அரசு பணிந்தது பாராட்டத்தக்கது.

‘விளைபொருள்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலையை உறுதிசெய்யும் வகையில் சட்டமியற்ற வேண்டும்’ என்று விவசாயிகள் கோரிவருகிறார்கள். திறந்த மனத்துடன் அவர்களின் கோரிக்கைகள் குறித்து அரசு உரையாட வேண்டும். விவசாயிகள் மனத்தில் முதலில் நம்பிக்கையை விதைக்க வேண்டும். இல்லையெனில், இந்த வாபஸ் அறிவிப்பெல்லாம் வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டுச் செய்யப்படும் நடவடிக்கை என்றே மக்களால் பார்க்கப்படும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு