Published:Updated:

மாநில அரசுகளின் உரிமையைப் பறிக்கலாமா?

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
தலையங்கம்

தலையங்கம்

தமிழகத்தைச் சேர்ந்த அனைத்துக்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி அணைப் பாதுகாப்பு மசோதாவை நாடாளுமன்ற மாநிலங்களவையில் நிறைவேற்றி சட்டமாக்கியுள்ளது மத்திய அரசு. 2019-ம் ஆண்டில் நாடாளுமன்ற மக்களவையில் இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டபோதே தமிழகம் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த மசோதாவுக்கு எதிராகத் தமிழக சட்டமன்றத்தில் அப்போது ஒருமனதாகத் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. தமிழகத்தின் குரலுக்கு மதிப்பு தெரிவித்து, அப்போது இந்த மசோதா கிடப்பில் போடப்பட்டது. இப்போது மீண்டும் அது உயிரூட்டப்பட்டிருக்கிறது.

உலகிலேயே அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில்தான் அணைகள் அதிகம். பெரும்பாலான அணைகள் இரு மாநிலங்களைத் தாண்டி ஓடும் நதிகளில் கட்டப்பட்டுள்ளன. ‘திடீர் வெள்ளம் வரும்போதோ, ஏதேனும் பாதிப்புகள் நேரும்போதோ அணையின் கீழ்ப்பகுதியில் உள்ள மாநில மக்கள் அபாயத்தில் சிக்குகிறார்கள். எனவே, தேசிய அளவில் ஒரு பாதுகாப்பு அமைப்பு அவசியம்’ என்பது மத்திய அரசின் வாதம்.

அணைப் பாதுகாப்பு மசோதாவின்படி தேசிய அணைப் பாதுகாப்பு அமைப்பு ஒன்று உருவாக்கப்படும். மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவரே இதன் தலைவராகவும் இருப்பார். மத்திய அரசின் பிரதிநிதிகள் 10 பேரும் மாநில அரசுகளின் பிரதிநிதிகள் 7 பேரும், நிபுணர்கள் 3 பேரும் இந்த அமைப்பில் இருப்பார்கள். கிட்டத்தட்ட இந்தியாவில் இருக்கும் பெரிய அணைகள் எல்லாமே இந்த அமைப்பின் கட்டுப்பாட்டில் வந்துவிடும். மாநில அளவில் இதேபோல அணைப் பாதுகாப்பு அமைப்புகள் உருவாக்கப்படும். அவற்றிலும் மத்திய அரசின் பிரதிநிதிகள் இருவர் இடம்பெறுவார்கள். எனவே, கிட்டத்தட்ட அணைகளின் எல்லாச் செயல்பாடுகளையும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு சென்றிருக்கிறது இந்தச் சட்டம். அணைகளும் நீர்ப்பாசனமும் மாநில அரசின் உரிமை வரம்பிற்குள் வருபவை. ஆனால், மாநில அரசுகளிடம் ஆலோசனை செய்யாமலே மத்திய அரசு இப்படி ஒரு சட்டத்தைக் கொண்டுவந்திருக்கிறது.

மாநில அரசுகளின் உரிமையைப் பறிக்கலாமா?

நதிகள்மீது மாநில அரசுகளே அணைகளைக் கட்டி, தொடர்ந்து பராமரிக்கின்றன. நீர்ப்பாசன மற்றும் குடிநீர்த் தேவைகள், மின்சார உற்பத்தி, மீன் வளர்ப்பு என்று எல்லாவற்றையும் மாநிலங்களே கவனிக்கின்றன. ஒரு பகுதியின் நீர்த்தேவை எப்படிப்பட்டது என்பதை மாநிலங்களே அறியும். மத்திய அரசு அமைக்கும் அமைப்பில் இருப்பவர்களுக்கு இந்த விஷயங்கள் புரியாது.

தமிழகத்துக்கு இதைத் தாண்டியும் இன்னொரு பிரச்னை இருக்கிறது. முல்லைப் பெரியாறு, பரம்பிக்குளம், தூணக்கடவு, பெருவாரிப்பள்ளம் ஆகிய நமது நான்கு அணைகள் கேரளாவில் அமைந்துள்ளன. இந்த அணைகளை இயக்கி, பராமரிக்கும் அதிகாரம் தமிழக அரசுக்குத்தான் உள்ளது. புதிய நடைமுறையின்படி இவை மத்திய அணைப் பாதுகாப்பு அமைப்பின் கட்டுப்பாட்டில் போகும் நிலை உள்ளது. இப்போது உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் இருக்கும்போதே, நீதிமன்றம் உத்தரவிட்ட அளவுக்கு முல்லைப்பெரியாறு அணையில் நீர் தேக்க முடியவில்லை. அணைப் பராமரிப்புக்கும் கேரளா முட்டுக்கட்டை போடுகிறது. புதிய அணை கட்டுவதில் தீவிரம் காட்டுகிறது. அணையின் உரிமை நம் கையை விட்டுப் போனால் என்ன ஆகுமோ என்று கவலையாக இருக்கிறது.

கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரான அணைப் பாதுகாப்பு மசோதாவை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும்.