Published:Updated:

ஜனநாயக முதிர்ச்சியின் அடையாளம்!

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

விரைவில் தீர்வு எட்டப்பட்டு விவசாயிகளின் கவலைகள் அகற்றப்படும் என்று நம்புவோம்

ஜனநாயக முதிர்ச்சியின் அடையாளம்!

விரைவில் தீர்வு எட்டப்பட்டு விவசாயிகளின் கவலைகள் அகற்றப்படும் என்று நம்புவோம்

Published:Updated:
தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்
ரண்டு வாரங்களைத் தாண்டி நீள்கிறது விவசாயிகளின் போராட்டம். தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டுப் போராடும் விவசாயிகள் சுங்கச்சாவடி முற்றுகை, உண்ணாவிரதம் என்று தீவிரம் கூட்டுகிறார்கள். இன்னொரு பக்கம் விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து விளையாட்டு வீரர்கள், கலைஞர்கள் பலர் தாங்கள் வாங்கிய விருதுகளைத் திருப்பித் தருகிறார்கள். முன்னாள் ராணுவத்தினர் தங்கள் மெடல்களை அரசிடம் ஒப்படைக்கிறார்கள்.

விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய ஆறுகட்டப் பேச்சுவார்த்தைகள் எந்த முடிவையும் எட்டவில்லை. ‘கடந்த செப்டம்பரில் மத்திய அரசு நிறைவேற்றிய மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும்’ என்கின்றன விவசாய அமைப்புகள். ஆனால், அதற்கு பதிலாக சில திருத்தங்களை மட்டும் மேற்கொள்ள முன்வந்த மத்திய அரசு, ஒரு திருத்த வரைவை விவசாயிகளிடம் அளித்தது. அதை விவசாயிகள் ஏற்கவில்லை.

பேசித் தீர்க்க முடியாத விஷயங்கள் எதுவுமில்லை. கடும் பகையுடன் போர் புரியும் இரண்டு தரப்பினர்கூட பேச்சுவார்த்தை மேஜைக்கு நம்பிக்கையுடன் வருகிறார்கள். ‘அரசு இறங்கிவரும்’ என்ற நம்பிக்கையுடன் விவசாயிகள் போராட்டத்தைத் தொடர்கின்றனர். ஆனால், இந்த நம்பிக்கையை நொறுக்கும்விதமான சில செயல்கள்தான் கவலையளிக்கின்றன.

ஜனநாயக முதிர்ச்சியின் அடையாளம்!

பஞ்சாப் விவசாயிகளே பெருமளவில் போராடுவதால், ‘காலிஸ்தான் தீவிரவாதிகள், தேச விரோதிகள்’ என முத்திரை குத்த பா.ஜ.க-வினர் சிலர் முயன்றனர். ‘‘விவசாயிகள் போராட்டத்துக்குப் பின்புலத்தில் சீனாவும் பாகிஸ்தானும் உள்ளன’’ என்று மத்திய அமைச்சர் ராவ் சாகேப் தன்வே குற்றம் சாட்டுகிறார். விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியவர்களில் ஒருவரான, மத்திய வர்த்தக அமைச்சர் பியுஷ் கோயல், ‘‘போராட்டத்தில் மாவோயிஸ்ட்களும் இடதுசாரிகளும் ஊடுருவியுள்ளனர்’’ என்கிறார்.

இதேபோல விவசாயிகள் தரப்பிலும் சில நெருடல்கள். 32 விவசாய அமைப்புகள் இணைந்து நடத்தும் இந்தப் போராட்டத்தில், ‘எந்த அரசியல் கட்சியினருக்கும் தங்கள் மேடையைக் களமாக அளிப்பதில்லை’ என உறுதி எடுத்து ஆரம்பம் முதல் செயல்பட்டு வருகிறார்கள். ஆனால், விவசாயிகளின் கோரிக்கைகளுக்குக் கொஞ்சமும் தொடர்பில்லாத சிறைவாசிகள் சிலரின் விடுதலை பற்றிய முழக்கங்களை ஒரு விவசாய அமைப்பு எழுப்பியது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இருதரப்பிலும் மேற்கொள்ளப்படும் இத்தகைய செயல்கள் பரஸ்பர அவநம்பிக்கையையே ஏற்படுத்தும். போராட்டத்தின் நோக்கத்தைத் திசைதிருப்பும் செயல்களை இருதரப்பும் கைவிட வேண்டும்.

‘விளைபொருள்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைக்க வேண்டும், மண்டிகள் மூலம் நடைபெறும் கொள்முதல் தொடர வேண்டும்’ என்பவையே விவசாயிகளின் முக்கிய கோரிக்கைகள். ‘அவை தொடரும்’ என்று சொல்லும் மத்திய அரசு அதற்கான வழிவகைகளை விளக்கவில்லை.

வேளாண் சட்டங்களைக் கொண்டு வருவதற்கு முன்பே, கூட்டாட்சித் தத்துவத்தை மதித்து மாநில அரசுகளுடன் ஆலோசனை செய்திருக்க வேண்டும். விவசாயிகளின் குரலைக் கேட்டிருக்க வேண்டும். அவசரக்கோலத்தில் அமல்படுத்தியதே எல்லாப் பிரச்னைகளுக்கும் காரணம்.

எடுத்த முடிவிலிருந்து பின்வாங்குவது என்பது தோல்வியோ, கௌரவக் குறைச்சலோ அல்ல! அதுவே ஜனநாயக முதிர்ச்சியின் அடையாளம். அது, ‘நாம் பக்குவப்பட்டிருக்கிறோம்’ என ஆட்சியாளர்கள் உணர்ந்துகொள்ளும் தருணம்.

விரைவில் தீர்வு எட்டப்பட்டு விவசாயிகளின் கவலைகள் அகற்றப்படும் என்று நம்புவோம்.