பிரீமியம் ஸ்டோரி
‘பிள்ளையார் பிடிக்கக் குரங்காய் முடிந்தது’போல உள்ளது மத்திய அரசின் செயல். உலகமே, கொடிய கொரோனாவின் பிடியிலிருந்து மீள என்ன செய்யலாம் என்று அச்சத்தில் இருந்தபோது, அவசர அவசரமாக மூன்று வேளாண் சட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றியது. அதன் பலனைத்தான் இப்போது டெல்லியில் அறுவடை செய்துகொண்டிருக்கிறது.

‘டெல்லி சலோ’ என்று கூவியபடி தலைநகருக்குள் நீதி கேட்டுப் புகுந்தவர்கள், தடியடி நடத்தி வரவேற்கப்பட்டார்கள். பஞ்சாப், ஹரியானா… மாநிலங்களிலிருந்து ஆயிரமாயிரம் விவசாயிகள் திரண்டு வருவார்கள் என மத்திய அரசு கனவிலும் நினைக்கவில்லை.

‘‘தயவு செய்து பேச்சு வார்த்தைக்கு வாருங்கள்’’ என்று அழைப்பு விடுக்கும் மத்திய அரசு, மறுபுறம் கூலிக்கு ஆட்களை வைத்து, “போராடுபவர்கள் விவசாயிகளே இல்லை; கமிஷன் ஏஜென்ட்களின் பிரதிநிதிகள்’’ என்று ஊடகங்களில் சேற்றை வாரி இறைக்கிறது.

எந்தவொரு சட்டமாக இருந்தாலும் நடைமுறைக்கு வந்தவுடன் அதில் குறைகள் தென்பட்டால், அதை மாற்றி இயற்றுவதுதான் நல்ல அரசுக்கு அடையாளம். டெல்லியில் வீசும் கடும் குளிர்க் காற்றுக்கும் அஞ்சாமல், மீசை முறுக்கியபடி சர்தார்ஜிகள், மோடி அரசுக்கு எதிராகக் கோஷங்களை எழுப்புகிறார்கள். இப்படியே விவசாயிகள் போராட்டம் நீளுமானால், உலக வங்கியிலிருந்து நிதியுதவி பெறுவதில் சிக்கல் ஏற்படும். ஆம், ‘மக்களுக்கும் விவசாயிகளுக்கும் நல்ல திட்டங்களைச் செயல்படுத்துகிறோம்; செய்கிறோம்’ என்று சொல்லித்தான், உலக வங்கி உள்ளிட்ட அமைப்புகளிடம் கடன் வாங்கப்படுகிறது. விவசாயிகளுக்கு விரோதமாக ஆளும் அரசு செயல்படும்போது, சர்வதேச அமைப்புகள் எப்படி நிதியுதவிகள் செய்ய முன்வரும்?

‘இந்தியா ஒரு விவசாய நாடு மட்டுமல்ல; விவசாயிகளின் நாடு’ என்பதை டெல்லிப் போராட்டம் பிரதிபலித்து வருகிறது. வறட்டுக் கெளரவம் பார்க்காமல் இறங்கி வந்து விவசாயிகளின் குரல்களுக்குச் செவிசாய்க்க வேண்டிய நேரம் இது. அப்போதுதான் மனதின் குரலுக்கு மதிப்பு இருக்கும்.

- ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு