சினிமா
Published:Updated:

இன்னுயிர் காக்க இணையட்டும் கரங்கள்!

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
தலையங்கம்

தலையங்கம்

`காலையில் வெளியே சென்ற நீங்கள், அலுவலக வேலை, சொந்த வேலை எல்லாவற்றையும் முடித்துவிட்டு பத்திரமாக வீடு திரும்பிவிட்டீர்களா? வாழ்த்துகள். நீங்கள் தற்கொலை முயற்சியிலிருந்து இன்று தப்பிவிட்டீர்கள்.’

வாட்ஸ்அப் குழுக்களில் பரிமாறிக்கொள்ளப்படும் இந்தக் குறுஞ்செய்தியை நகைச்சுவை என்று கருத இயலாது. காரணம், உலகிலேயே அதிக சாலை விபத்துகளும், அதனால் அதிக உயிரிழப்புகளும் ஏற்படும் நாடு இந்தியா. இதில் இந்தியாவிலேயே தமிழகம் முன்னிலையில் இருப்பது துயரம். விபத்தில் சிக்கி ஒரு குடும்பத் தலைவர் உயிரிழந்தால், அது மனரீதியாகவும் பொருளாதாரரீதியாகவும் அவரது குடும்பத்தையே சிதைத்துவிடுகிறது என்பதுதான் இதில் மறைந்திருக்கும் இன்னொரு வேதனை.

அதனால்தான் தமிழக அரசு இப்போது கொண்டுவந்திருக்கும் `இன்னுயிர் காப்போம் திட்டம் - நம்மைக் காக்கும் 48’ என்ற திட்டத்தை அனைத்துத் தரப்பு மக்களும் வரவேற்றிருக்கிறார்கள். சாலை விபத்துகளில் உயிரிழப்புகளைத் தடுக்கவே இந்தத் திட்டம். விபத்தில் சிக்கியவர்களுக்கு முதல் 48 மணி நேர அவசர சிகிச்சைச் செலவை இந்தத் திட்டத்தின் கீழ் அரசே ஏற்கும். முதலமைச்சர் மருத்துவக் காப்பீடு இல்லாதவர்களும் இதைப் பெற முடியும். வெளிமாநிலத்தவர், வெளிநாட்டவர் என்ற எந்தப் பாகுபாடும் பார்க்காமல் இந்தச் சிகிச்சை அளிக்கப்படும். அரசு மருத்துவமனைகளைத் தாண்டி தனியார் மருத்துவமனைகளிலும் அவசர சிகிச்சை பெற முடியும். தமிழகம் முழுக்க 609 மருத்துவமனைகள் முதற்கட்டமாக இந்த அவசர சிகிச்சையைத் தரும்.

தலையங்கம்
தலையங்கம்

இதுதவிர, விபத்தில் சிக்கியவரை மருத்துவமனையில் அனுமதிக்கும் நபருக்கு 5,000 ரூபாய் ஊக்கத்தொகையும் வழங்கப்படும். `சாலை விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்வோருக்கு சங்கடம் கொடுக்கப்படாது. உயிருக்குப் போராடுகிறவர்களைக் காப்பாற்ற போலீஸ் வரும்வரை காத்திருக்கத் தேவையில்லை. போலீஸுக்குத் தகவல் மட்டும் சொல்லிவிட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கலாம்’’ என்று தொடர்ந்து விழிப்புணர்வு ஊட்டி வந்தாலும், அது அனைவரையும் முழுமையாகச் சென்று சேரவில்லை. ‘விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவினால், போலீஸ் விசாரணை, கோர்ட், வழக்கு என அலைய வேண்டியிருக்கும்’ என்ற தயக்கமே பலரது கையறு நிலைக்குக் காரணமாக இருந்துவந்திருக்கிறது. இந்தத் திட்டம் அந்தத் தயக்கத்தை நிச்சயம் நீக்கும்.

‘இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் பின்பற்ற வேண்டிய முன்மாதிரித் திட்டம்’ என்று இதை அனைவரும் பாராட்டுகின்றனர்.

கடந்த சில ஆண்டுகளாக சாலை விபத்துகளில் உயிரிழப்புகளைக் குறைப்பதில் நாம் வெற்றி பெற்றிருக்கிறோம். ‘ஆம்புலன்ஸ் சேவை, போலீஸ் ரோந்து வாகனங்கள், மருத்துவமனைகள் என அனைத்தும் ஒருங்கிணைந்து திறம்பட இயங்குவதே இதற்குக் காரணம். தமிழகத்தின் இந்த வழிமுறையை மற்ற மாநிலங்களும் பின்பற்ற வேண்டும்’ என்று மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி பாராட்டும் அளவுக்குத் தமிழகத்தின் செயல்பாடு அமைந்திருந்தது. எனினும், இப்போதும் அதிக விபத்து உயிரிழப்புகள் நிகழும் மாநிலமாகத் தமிழகம் இருப்பது கவலைக்குரியது. இந்த நிலையை மாற்ற இந்தத் திட்டம் உதவும்.

ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு முதலுதவிப் பயிற்சி, தரமான சாலைகள், சாலை விதிகளை மதிக்கும் மக்கள் என அனைத்தும் ஒருங்கே அமைய இந்தத் திட்டம் நல்ல ஆரம்பமாக அமையட்டும்.