Published:Updated:

நமக்குள்ளே...

நமக்குள்ளே...
பிரீமியம் ஸ்டோரி
News
நமக்குள்ளே...

‘கொரோனாவெல்லாம் எனக்கு வராது’ என்ற மூடநம்பிக்கைக்கு முந்தைய அலைகளில் நாம் கொடுத்த விலை அதிகம் என்பதை அறிவோம்.

கொரோனாவோடு நாம் வாழப் பழகி கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன. முதல் அலையில் பறிகொடுத்த உயிர்கள் தந்த வலி ஆறுவதற்குள், இரண்டாம் அலையும் பல உயிர்களை வாரிச்சுருட்டிக் கொண்டது. மூன்றாவது அலை வருமா, வராதா என்ற பதைபதைப்புடனேயே மாதங்களை நாம் நகர்த்திக்கொண்டிருந்த நிலையில், தற்போது தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸின் ஒமிக்ரான் திரிபு, உலகம் முழுக்க மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் இரண்டு நோயாளிகளுக்கு ஒமிக்ரான் திரிபு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதைத் தொடர்ந்து ஒமிக்ரான் இந்தியாவில் தன் கணக்கை ஆரம்பித்துள்ளது.

நாம் இயல்பு நிலைக்குத் திரும்பிக்கொண்டிருக்கிறோம் என்று உலகின் நுரையீரல் பெருமூச்சுவிட ஆரம்பித்த சூழலில், பெருந்தொற்றின் முடிவை நோக்கிச் சென்றுகொண்டிருந்த நமக்கு இது ஒரு பின்னடைவு என்று ஒமிக்ரான் குறித்து எச்சரித்துள்ளது உலக சுகாதார நிறுவனம். தடுப்பூசி பெருவாரியாக செலுத்தப்பட்ட நாடுகளில் இந்த பாதிப்பு குறைவாக இருக்கும் என்று சொல்லப்பட, இன்னொரு பக்கம், ஒமிக்ரான் திரிபுக்கு தடுப்பூசிகளின் செயல்திறன் பற்றி இனியே தெரியவரும் என்று காத்திருக்கின்றன மருத்துவ ஆராய்ச்சி ஆய்வகங்கள்.

கல்வி நிலையங்கள் முதல் கோயில்கள் வரை அனைத்தும் திறக்கப்பட்டு, இந்தியா இயல்பு நிலைக்குத் திரும்பிக்கொண்டிருந்த சூழல், இனி எப்படி தொடரப்போகிறது தெரியவில்லை. இந்த நிலையில் மீண்டும் நம் ஒவ்வொருவரின் கைகளிலும் நோய்ச் சங்கிலியை அறுக்கும் பொறுப்பு வந்து சேர்கிறது தோழிகளே.

நமக்குள்ளே...

‘கொரோனாவெல்லாம் எனக்கு வராது’ என்ற மூடநம்பிக்கைக்கு முந்தைய அலைகளில் நாம் கொடுத்த விலை அதிகம் என்பதை அறிவோம். எனவே மாஸ்க், சானிடைசர், தனிநபர் இடைவெளி உள்ளிட்ட சுகாதார நடவடிக்கைகளை மீண்டும் தீவிரப்படுத்துவோம். மக்கள்தொகையில் உலகின் இரண்டாவது பெரிய நாடு நாம். எனவே, மருத்துவமனைப் படுக்கைகள் முதல் மருந்து கையிருப்பு வரை பல மடங்கு அதிக செயல்பாடுகளுடன் போருக்குத் தயாராக அரசு தொலைநோக்குப் பார்வையுடன் திட்டங்களை வகுக்க ஆரம்பிக்க வேண்டும்.

நோய் குறித்து நமக்கு வேண்டியது விழிப்புணர்வே, அச்சம் அல்ல என்று முதல் இரண்டு அலைகளில் கற்றுத்தேர்ந்த அனுபவசாலிகள்தானே நாம் தோழிகளே? இப்போதும் அதே விழிப்புணர்வுடன் வரும் நாள்களை எதிர்கொள்வோம். நோய்த்தடுப்பு நடவடிக்கைகளில் அரசு இயந்திரத்துக்கு நம் முழு ஒத்துழைப்பையும் கொடுப்போம். ஒருவேளை மூன்றாம் அலை சூழல் வந்து, தொழில், வேலை என கொரோனா மீண்டும் நம்மை திணறடித்தாலும் தாக்குப்பிடிப்போம், திரும்பி எழுவோம்... மீள்வோம், மீட்போம்!

உரிமையுடன்,

ஸ்ரீ

ஆசிரியர்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz