Published:Updated:

ஏன் இந்த மெத்தனம்?

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

தலையங்கம்

ஏன் இந்த மெத்தனம்?

தலையங்கம்

Published:Updated:
தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து, தவறான காரணங்களுக்காகவே செய்திகளில் அடிபடுகிறது, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை. தலைநகர் டெல்லியில் இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனை தரும் உயரிய சேவைகளை, இந்தியாவின் எல்லாப் பகுதிகளில் இருக்கும் மக்களும் பெற வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் நாடு முழுக்க 22 எய்ம்ஸ் மருத்துவமனைகளை உருவாக்க பல்வேறு கட்டங்களில் அறிவிப்பு வெளியிட்டது மத்திய அரசு. இதன் ஓர் அங்கமாக தமிழகத்தின் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என்ற அறிவிப்பு, தென் தமிழகத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றது. ஆனால், அறிவிப்புக்கும் செயலாக்கத்துக்கும் இடையே பெரும் இடைவெளி நிலவுகிறது.

2015-ம் ஆண்டு மத்திய பட்ஜெட் உரையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பஞ்சாப் மாநிலம் பதிண்டா எய்ம்ஸ் மருத்துவமனை கடந்த ஆண்டே செயல்பட ஆரம்பித்துவிட்டது. மதுரையிலோ இன்னும் எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளே தொடங்கப்படவில்லை.

‘2019 ஜனவரியில் பிரதமர் நரேந்திர மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டும் ஏன் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகள் தொடங்கப்படவில்லை?’ என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் கேட்கப்பட்டபோது, ‘எய்ம்ஸ் மருத்துவமனைக்கான இடத்தைத் தமிழக அரசு இதுவரை தரவில்லை’ என்று பதில் வந்தது. ஆனால், ‘222.49 ஏக்கர் நிலத்தைத் தருவதாக கடந்த மாதமே உறுதியளித்து விட்டோம்’ எனத் தமிழக அரசு, சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளையில் தெரிவித்துள்ளது.

ஏன் இந்த மெத்தனம்?

‘பொதுவாகவே எய்ம்ஸ் மருத்துவமனைகள் விஷயத்தில் தேவையற்ற அலட்சியம் நிலவுகிறது. பணிகள் தாமதமாவதால், செலவும் அதிகரிக்கிறது’ என, தலைமை கணக்குத் தணிக்கை அலுவலரின் அறிக்கை மத்திய அரசைக் கண்டித்துள்ளது.

எதிர்க்கட்சி ஆளும் மாநிலமான பஞ்சாப்பிலேயே எய்ம்ஸ் பணிகள் முழுமைபெற்றுவிட்ட நிலையில், மத்திய அரசுடன் இணக்கமாக இருக்கும் தமிழகத்தில் இதுவரை மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக் கட்டடத்துக்காக ஒரே ஒரு செங்கல்கூட எடுத்து வைக்கப்படவில்லை என்பது ஆச்சர்யத்தையும் வேதனையையும் அளிக்கிறது.

இத்தனைக்கும் தமிழகம் பல்வேறு துறைகளில் சாதித்து மத்திய அரசிடமிருந்தே பல விருதுகளைப் பெறுகிறது. கொரோனாவால் நெருக்கடிக்குள்ளான 2020 முதல் காலாண்டில் மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களைப் பின்னுக்குத் தள்ளி, ‘அதிகம் அந்நிய முதலீடுகளை ஈர்த்த மாநிலம்’ என்ற பெருமையைப் பெற்றிருக்கிறது தமிழகம். வளர்ச்சியின்மீது அக்கறை கொண்டு அதைச் செயல்படுத்தியும் காட்டும் தமிழக அரசு, எய்ம்ஸ் விஷயத்தில் மட்டும் மத்திய அரசுக்கு அழுத்தம் தராமல் மெத்தனம் காட்டுவது புரியாத புதிர்தான்.

எய்ம்ஸ் மருத்துவமனை இயங்கத்தொடங்கினால் அது தமிழகத்தின் பெருமைமிகு அடையாளமாக மாறுவதுடன் மாநிலத்தின் வளர்ச்சிக்கட்டுமானத்துக்கும் உதவும். நீதிமன்றத்துக்கு இந்த விஷயம் சென்றுவிட்ட பிறகாவது, அதன் தீவிரத்தை உணர்ந்து எய்ம்ஸ் மருத்துவமனைப்பணிகள் முழுமையடைய மத்திய அரசைத் தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். மத்திய அரசும் இனியாவது மதுரை எய்ம்ஸ் பணிகளைத் துரிதப்படுத்த வேண்டும்.