Published:Updated:

அன்பார்ந்த வாசகர்களே!

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

வணக்கம்.

அன்பார்ந்த வாசகர்களே!

வணக்கம்.

Published:Updated:
தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

ஒவ்வொரு வருடமும் உங்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் வண்ணம் சிறப்பாகத் தயாராகியிருக்கும் விகடன் தீபாவளி மலர் இதோ... இந்த வருடமும் உங்கள் கைகளில்.

தனக்கென்று ஒரு தனித்துவமான அடையாளம்கொண்டிருக்கும் விகடன் தீபாவளி மலர், இந்த வருடமும் உங்களை ஆச்சர்யப்படுத்தும் பக்கங்களோடு வண்ணமயமாகத் தயாராகியிருக்கிறது. அருளைப் பெருக்கும் ஆன்மிகப் பக்கங்கள், கலைகள் குறித்த தகவல்கள், சின்னத்திரை, பெரிய திரை ஆளுமைகளுக்கான பக்கங்கள், உங்கள் பொழுதை இனிதாக்கும் சிறுகதைகள், கவிதைகள், இயற்கையைப் போற்றும் இனிய சாட்சிகள், இன்னலற்ற இனிதான வாழ்க்கைக்கான வழிகாட்டிகள், தீபாவளியின் பிரத்யேகமான ஃபேஷன்கள் என உங்கள் ரசனைக்கேற்ப செதுக்கப்பட்டிருக்கிறது.

இந்த 2020-ல் `கொரோனா’ எனும் பேரிடர் நம்மை ஆட்டுவித்து, அலைகழித்துக்கொண்டிருக்கிறது. எதையும் எதிர்த்து, துணிந்து, மீண்டெழுந்து மானுடம் வென்றுகொண்டே இருக்குமென்பதை கண்டவர்கள்தான் நாம். இந்தப் பேரிடரையும் துணிந்து எதிர்கொண்டு, ஒரு புத்தியல்பு வாழ்வில் காலடி பதிக்கிறோம். இதற்குக் காரணமாக இருக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவலர்கள் ஆகிய முன்களப் பணியாளர்களை நன்றியோடு சிறப்பிக்கும் பக்கங்களும் இடம்பிடித்திருக்கின்றன.

எழுத்துலகில் தனக்கென தனி முத்திரை பதித்த தி.ஜா-வுக்கு இது நூற்றாண்டு. அவரையும், அவர் எழுத்தின் ஆழத்தையும் அலசியிருக்கிறார் கவிஞர் சுகுமாரன். இன்றைக்குத் திரையில் பாட்டெழுத வரும் கவிஞர்களும் ஆசானாக எண்ணும் மருதகாசி குறித்து, யுகபாரதி தன் அழகான எழுத்துகளில் வியந்திருக்கிறார். குரல்வழி ஒவ்வொரு தமிழருடனும் வாழ்ந்துகொண்டிருக்கும் எஸ்.பி.பி குறித்த நினைவலைகளை வீயெஸ்வி பகிர்ந்திருக்கிறார்.

அன்பார்ந்த வாசகர்களே!

இந்தியத் திரைத்துறையில் அடுத்த சில ஆண்டுகளுக்குத் தனி முத்திரை பதிக்கவிருக்கும் சிலர் உங்களையும் ஆச்சர்யப்படுத்துவார்கள்; ஒவ்வோராண்டும் தீபாவளிக்கு வெளியான சில படங்களின் ‘ஆனந்த விகடன்' விமர்சனத்திலிருந்து சில ‘நச்’ வரிகளைப் படிக்கப்போகும் நீங்கள் அவற்றை உங்கள் நண்பர்களோடு பகிர்ந்துகொள்ளப்போவது உறுதி. இன்றைக்கு நம் உடலோடு ஒன்றிவிட்ட ‘மாஸ்க்’குக்கு நூறாண்டு கடந்த வரலாறு உண்டு என்பது தெரியுமா? அதைப் படிக்கும் நீங்கள் வியப்பது நிச்சயம்.

நாஞ்சில் நாடன், பாஸ்கர் சக்தி, ம.காமுத்துரை, அ.வெண்ணிலா ஆகிய எழுத்தாளுமைகளின் சிறுகதைகள்; கலாப்ரியா, பழநி பாரதி, மனுஷ்யபுத்திரன், இளம்பிறை, சக்திஜோதி, கார்த்திக் நேத்தா, பெரு.விஷ்ணுகுமார்,

தி.பரமேஸ்வரி, உமாதேவி எனக் கவிஞர்களின் வரிசை உங்கள் வாசிப்பை வளப்படுத்தும். சினிமா பிரபலங்களின் பேட்டிகள், அரசியல் பிரமுகர்களின் அனுபவங்கள், நகைச்சுவைத் துணுக்குகள் என அற்புதமான வாசிப்புக்கான விருந்தே உங்களுக்காகக் காத்திருக்கிறது.

தீபாவளித் திருநாளில் மகிழ்ச்சியும் மங்கலமும் இரட்டிப்பாகப் பெருகட்டும்!

அன்புடன்,

ஆசிரியர்