Published:Updated:

நமக்குள்ளே...

நமக்குள்ளே
பிரீமியம் ஸ்டோரி
நமக்குள்ளே

தலையங்கம்

நமக்குள்ளே...

தலையங்கம்

Published:Updated:
நமக்குள்ளே
பிரீமியம் ஸ்டோரி
நமக்குள்ளே

பெண்கள் கல்வி அறிவு பெறுகிறார்கள், வேலைவாய்ப்பு பெறுகிறார்கள், தொழில்முனைவோர் ஆகிறார்கள் என வரவேற்கத்தக்க முன்னேற்றங்கள் பல நம் கண்முன்னே நடந்துகொண்டிருக்கின்றன. ஆனால், அரசியல் பகிர்விலும், அரசு இயந்திரத்தின் அதிகாரப் பகிர்விலும் நாம் பின்தங்கியிருப்பதும் மறுக்க முடியாத உண்மை.

சமீபத்தில், இந்திய நிர்வாகச் சேவை அலுவலர்கள் குறித்த தரவுகளின் (Indian Administrative Service Officers Dataset) அடிப்படையில் ‘இண்டியா ஸ்பெண்ட்’ செய்தி இணையதளம் வெளியிட்டிருந்த ஆய்வுக் கட்டுரையில், நாட்டுக்கு முதல் பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி கிடைத்த 1951-ம் ஆண்டு முதல் 2020 வரை தேர்வான ஒட்டுமொத்த ஐ.ஏ.எஸ் அலுவலர்களில் பெண்களின் நிலை, 13 சதவிகிதம் மட்டுமே என்று தெரிவித்துள்ளது. சுதந்திரம் பெற்று 75 ஆண்டைத் தொட்டுவிட்ட நிலையிலும், தற்போதிருக்கும் ஐ.ஏ.எஸ் அலுவலர்களில் 21 சதவிகிதம் மட்டுமே பெண்கள் என்பது அதிர்ச்சிக்கும் ஆராய்ச்சிக்கும் உரிய ஒன்று.

குடிமைப் பணி தேர்வு நடைமுறை, அதை எதிர்கொள்ளும் பயணத்தில் பெண்களுக்குக் கொடுக்கப்படும் சமூக அழுத்தம், தேர்ச்சி பெற்று ஐ.ஏ.எஸ் ஆகும் பெண்களுக்குக் காத்திருக்கும் அலுவல் அரசியல் என இந்தக் களம், ஆண்களைவிடப் பெண்களுக்குப் பல மடங்கு கடுமையாக இருக்கிறது என்பதே நிதர்சனம்.

இந்தியாவில் ஐ.ஏ.எஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற முதல் பெண்ணான அனா ராஜம் ஜார்ஜ்ஜின் பணி உறுதி கடிதத்துடன், ‘திருமணம் நடக்கும்போது பணி நிறுத்தம் செய்யப்படுவீர்கள்’ என்ற நிபந்தனையும் சேர்த்து வழங்கப்பட்டது என்பது அதிர்ச்சியான உண்மை. பின்னர், அந்த விதி மாற்றப்பட்டது என்றாலும், தொடர் ஓட்டத்திலும் தடைகளே நிறைய இன்றுவரை.

இந்தியக் குடிமைப் பணி தேர்வை எழுத பட்டப்படிப்பும், 21 வயது பூர்த்தியாகியிருப்பதும் தகுதி. மூன்று கட்டத் தேர்வு மற்றும் ஒரு நேர்காணல் அடங்கிய இந்தத் தேர்வை 32 வயது வரை எழுதலாம்; ஆறு முறை தேர்வு எழுதலாம். ஒடுக்கப்பட்ட மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பு நீட்டிப்பு உண்டு.

நமக்குள்ளே...

20 வயதின் ஆரம்பத்தில் தேர்வுக்குத் தயாராக ஆரம்பித்து, 30 வயதை நெருங்கும்போது தேர்ச்சி பெறுபவர்கள்தாம் இதில் அதிகம். ஆண்களைப்போல பெண்களை இந்த வயது வரை குடும்பங்கள் தட்டிக்கொடுத்து தேர்வுக்கு அனுப்புவதில்லை. தூர ஊர்களில் இருக்கும் குடிமைப் பணிகளுக்கான பயிற்சி மையங்களுக்கு மகள்களை அனுப்புவதிலும் குடும்பங்கள் பின்வாங்குகின்றன. ஒருவழியாகத் தேர்ச்சி பெற்றுச் செல்லும் பெண்களுக்கும், ஆணாதிக்க அலுவல் சூழலில் ‘சாஃப்ட் போஸ்டிங்’களே பெரும்பாலும் கொடுக்கப்படுகின்றன என்கிறார்கள் பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்.

இந்தத் தடைகளுக்கு எல்லாம் நடுவில் மிகவும் யோசிக்க வைக்கும், செய்யும் தரவு இதுதான்... ஐ.ஏ.எஸ் தேர்வில் தேர்ச்சி பெறும் பெண்களில் 53 சதவிகிதம் பேர், தங்களது 26 வயதுக்குள் அதை நிகழ்த்திவிடுகிறார்கள். ஆக, நம் மகள்கள் எப்போதும் திறமையுடன் தயாராக இருக்கிறார்கள் தோழிகளே... குடும்பங்களும் சமூகமும், அரசும்தான் அவர்களுக்கான அதிகார வெளியைப் பெரிதாக்க வேண்டும்!

உரிமையுடன்,

ஸ்ரீ

ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism