Published:Updated:

வேண்டும் நாகரிகம்!

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

தலையங்கம்

வேண்டும் நாகரிகம்!

தலையங்கம்

Published:Updated:
தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

ஐந்து மாநிலத் தேர்தல்கள் தொடங்கி நம்மூர் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரை எல்லாத் தேர்தல் களங்களிலும் முகம் சுளிக்கவைக்கும் பிரசாரங்கள் தொடர்ந்து நடைபெற்றுவருவது ஜனநாயகத்துக்கே பெரும் அவமானம்.

உத்தரப்பிரதேசத்தில் பிரசாரம் செய்துவரும் அந்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், ‘`பா.ஜ.க-வுக்கு நீங்கள் வாக்களிக்கவில்லை என்றால், நம் மாநிலம் கேரளா, மேற்கு வங்காளம், காஷ்மீர்போல ஆகிவிடும்’’ என்று எச்சரிக்கை விடுத்தார். இந்தியாவிலேயே இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் மாநிலங்களாக இந்த மூன்றும்தான் இருக்கின்றன. எனவே, அவர் எந்த அர்த்தத்தில் இப்படிப் பேசினார் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. கேரள முதல்வர் பிரனாயி விஜயன் உடனடியாக இதற்கு பதில் கொடுத்தார். “கேரளாபோல உத்தரப் பிரதேசம் மாறினால், அங்கிருக்கும் மக்களுக்குச் சிறந்த கல்வி, சுகாதார வசதி, சமூகநலத் திட்டங்கள், வாழ்க்கைத்தரம் எல்லாமே கிடைக்கும். மதம் மற்றும் சாதியின் பெயரால் படுகொலைகள் நிகழாமல், மக்கள் இணக்கமான சூழலில் வாழ்வார்கள். இதைத்தான் உ.பி மக்கள் எதிர்பார்க்கிறார்கள்” என்றார் அவர்.

மாநில சட்டமன்றங்களுக்கு நடைபெறும் தேர்தலில் பாகிஸ்தானைப் பற்றி பா.ஜ.க பிரசாரத்தில் பேசுவதும், சீனா விவகாரம் பற்றி காங்கிரஸ் பிரசாரத்தில் பேசுவதும் தேசநலனுக்கு எந்த வகையிலும் உகந்ததில்லை. இதேபோல எல்லை தாண்டிய தனிநபர் தாக்குதல்களை அத்தனை கட்சிகளும் செய்துவருகின்றன.

முன்பெல்லாம் ஆபாசமாகவும் மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டும் விதமாகவும், எந்தவிதத் தரவுகளும் இல்லாமல் வாய்க்கு வந்த பொய்களை அள்ளிவிடும் பேச்சாளர்களை, அரசியல் கட்சிகளே நாலாம்தரப் பேச்சாளர்கள் என்றுதான் அடையாளப்படுத்தும். ஆனால், இப்போதோ முதல்வர் தொடங்கி அமைச்சர்கள் வரை கட்சியிலும் ஆட்சியிலும் முக்கியப் பொறுப்புகளில் இருப்பவர்களே இப்படிப் பேசுகிறார்கள்.

தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்திலும் இதேபோன்ற காட்சிகளைப் பார்க்க முடிகிறது. ‘மேற்கு வங்காள சட்டமன்றம் போல தமிழக சட்டமன்றம் முடக்கப்படும், நாடாளுமன்றத் தேர்தலோடு தமிழக சட்டமன்றத்துக்கும் தேர்தல் வரும்’ என்று அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பேசுவதும், முன்னாள் முதல்வர் என்றும் பாராமல் அவரை தி.மு.க தலைவர்கள் சிலர் தரக்குறைவாக விமர்சனம் செய்வதும் கண்ணியமான செயல்கள் அல்ல.

தேர்தல்கள் வரும், போகும். இந்தத் தேர்தல் வெற்றி தோல்விகளைத் தாண்டி எல்லாக் கட்சியினரும் இணைந்துதான் இங்கு மக்கள்நலப் பணிகளைச் செய்தாக வேண்டும். மக்களுக்கு தாங்கள் செய்த சாதனைகளையும், கட்சியின் கொள்கைகளையும், எதிர்காலத் திட்டங்களையும் எடுத்துச் சொல்லி வாக்கு சேகரிப்பதுதான் தேர்தல் நடைமுறை. மதவாதத்தைத் தூண்டி மக்களைப் பிளவுபடுத்தும் பிரிவினைப் பேச்சுகள், வெறுப்பை முன்வைக்கும் முழக்கங்கள், ஆபாசம், மிரட்டல், அபாண்டமான பொய்கள் என்று மாறி மாறி சேற்றை வாரி வீசிக்கொள்ளும் இதுபோன்ற பிரசாரங்களைத் தலைமைத் தேர்தல் ஆணையமும், மாநிலத் தேர்தல் ஆணையமும் கட்டுப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால், அரசியல் என்றாலே காதைப் பொத்திக்கொண்டு மக்கள் விலகிப் போய்விடும் நாகரிகமற்ற சூழல் வந்துவிடும்.