பிரீமியம் ஸ்டோரி
ன்றும்கூட... கல்லூரியில் படிக்கும் 20 வயதுப் பெண்ணுடன், ஆறாவது படிக்கும் 11 வயது தம்பியைத் ‘துணைக்கு’ அனுப்பும் சமூக அமைப்பு இது. பெண், தன்னைப் பாதுகாத்துக்கொள்வதில் வலிமை குன்றியிருப்பதாகவே இன்னமும்கூட இந்த உலகம் கற்பித்துக்கொண்டே இருக்கிறது. இந்த ‘அநியாய மனநிலை’யை மாற்றுவதற்காக அவ்வப்போது சில சம்பவங்கள் நடக்கத்தான் செய்கின்றன. ஆனாலும்கூட, பழைய ‘கற்பிதங்கள்’தான் மேற்கோள்களாக உலாவரச் செய்யப்படுகின்றன - அறிவார்ந்தவர்கள் என்று சொல்லப்படுபவர்கள் / சொல்லிக்கொள்பவர்களால்கூட!

கடந்த சில வாரங்களுக்கு முன்பு, திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஓர் இளம்பெண், இயற்கை உபாதைக்காக வழக்கம்போல காட்டுப் பகுதிக்குச் சென்றார். ஏற்கெனவே பல தடவை பாலியல் தொல்லை கொடுத்திருந்த உறவினர் ஒருவர், போதையில் அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயல, வீரத்துடன் அந்தப் பெண் போராடியபோது... போதை நபர் மறைத்து வைத்திருந்த கத்தி கீழே விழுந்திருக்கிறது. சட்டென்று அதைக் கையில் எடுத்த இளம்பெண், அந்த நபரைக் குத்திச் சாய்த்து, தன்னைக் காத்துக்கொண்டுவிட்டார்.

நமக்குள்ளே
நமக்குள்ளே

அடுத்தநொடியே அவர் சென்ற இடம்... காவல் நிலையம்தான். விசாரணையில் இறங்கிய மாவட்ட எஸ்.பி-யான அரவிந்தன், முதலில் கொலை வழக்கு (ஐ.பி.சி 302) பதியச் செய்தார். அடுத்தகட்டமாக, முழுமையான விசாரணைக்கு உத்தரவிட்டவர், ‘தற்காப்பு கொலை’ என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு, ஐ.பி.சி 100-ன் கீழ் வழக்கை மாற்றி, அந்தப் பெண்ணை விடுதலை செய்திருக்கிறார். எஸ்.பி-க்குப் பல தரப்புகளிலிருந்தும் பாராட்டுகள் குவிகின்றன.

இந்தச் செய்தி நம் மூளையின் ஏதோ ஓர் அடுக்கில் போய் நிச்சயமாகப் படியவே செய்யும். நம் பாதுகாப்பு கேள்விக்குள்ளாகும் ஓர் இக்கட்டான சூழலில், இந்த நினைவின் சேகரிப்பு, நிச்சயமாக நாம் துணிந்து ஒரு தற்காப்பு நடவடிக்கையை எடுக்க நம்மைத் தூண்டவே செய்யும். இப்படித்தானே தோழிகளே, பெண்களுக்கு எதிரான கொடுமைகளையெல்லாம் அதை எதிர்த்த வரலாற்று நினைவுகள் தந்த தைரியத்தில் நாம் கடந்துகொண்டே இருக்கிறோம்?!

இந்தச் சம்பவ செய்தி வைரலாகிக்கொண்டிருந்த சூழலில், ‘மக்கள் நீதி மய்யம்’ கட்சியின் தலைவர் கமல்ஹாசன், ‘கண்ணியமும் கட்டுக்கோப்பான நடத்தையும் இருந்தால், தற்காப்பு அகிம்சையாக மாறும். நீங்கள் அடிக்கும் பெப்பர் ஸ்பிரேயைவிட உங்கள் நம்பிக்கை வலிமையானது’ என்று கூறியிருந்தது சர்ச்சையானது. இந்தியாவில் ஒரு நாளில் பதிவு செய்யப்படும் பாலியல் வன்கொடுமை வழக்குகளின் எண்ணிக்கை 87. பதிவுக்கு வராதவற்றின் எண்ணிக்கை தனி. பெண்களுக்கு ‘என்ன செய்தாவது தப்பிக்கப் பார்’ என்று வலியுறுத்த வேண்டிய சூழலில், அஹிம்சை அட்வைஸுக்கு அவசியம் என்ன? தற்காப்புக்காக 0.001% பெண்களே பெப்பர் ஸ்பிரே/கம்பு/கத்தி எடுக்கும் சூழல்தான் இங்கே நிலவுகிறது. அதையும்கூட, ‘தவிர்க்கலாமே...’ என்பது என்ன வகை மனநிலை என்று பலரும் கொந்தளிக்க ஆரம்பித்துள்ளனர்.

தோழிகளே... நம் பாதுகாப்பை உறுதிசெய்வதில் 100 சதவிகிதம் நாம் கவனமாக இருப்போம். வீரத்தைவிட விவேகம் முக்கியமானது என்பதை உணர்ந்து எப்போதுமே எச்சரிக்கையுடனேயே நடைபோடுவோம். அதேநேரம், ஆபத்து எனும்போது சாத்தான்களிடம் வேதம் ஓதிக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லை என்பதை உணர்வோம்... துணிவோம்... வினையாற்றுவோம்.

உரிமையுடன்,

ஸ்ரீ

ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு