Published:Updated:

மோதல் வேண்டாம், விவாதம் செய்யுங்கள்!

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

தலையங்கம்

மோதல் வேண்டாம், விவாதம் செய்யுங்கள்!

தலையங்கம்

Published:Updated:
தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

‘எதிர்க்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்ற அலுவல்கள் ஒத்திவைப்பு.’ ஒவ்வொரு முறை நாடாளுமன்றம் கூடும்போதும் இதுதான் தலைப்புச் செய்தி. புதிய ஆண்டின் பட்ஜெட் தொடருக்காக நாடாளுமன்றம் மீண்டும் கூடிய முதல் நாளே பிரதமர் நரேந்திர மோடி செய்தியாளர்களைச் சந்தித்து, ‘`பட்ஜெட் கூட்டத்தொடரை ஆக்கபூர்வமாக நடத்த எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும். அனைத்து உறுப்பினர்களும் ஆரோக்கியமான விவாதங்களில் கலந்துகொள்ள வேண்டும். அனைத்துப் பிரச்னைகள் குறித்தும் விவாதிக்க அரசு தயாராக உள்ளது’’ என்று எதிர்க்கட்சிகளுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

கடந்த குளிர்காலக் கூட்டத்தொடரில் அமளிகளும் புறக்கணிப்புகளும் உச்சம் தொட்டன. மாநிலங்களவையில் இடைநீக்கம் செய்யப்பட்ட எதிர்க்கட்சி எம்.பி-க்களை அவைக்குள் அனுமதிக்கும் விஷயத்தில் ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சிகளும் பிடிவாதம் காட்டின. பிரதமரே நாடாளுமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்காதது, அப்போது குற்றச்சாட்டாக வைக்கப்பட்டது.

கொரோனாத் தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக நாடாளுமன்றம் கூடும் நேரம் குறைந்திருக்கிறது. இம்முறை கொரோனாக் கட்டுப்பாடுகள் காரணமாக மக்களவையும் மாநிலங்களவையும் வெவ்வேறு நேரங்களில் கூடுவதால், அலுவல் நேரம் இன்னும் குறைகிறது. இப்படி விவாதிப்பதற்கான நேரம் மிகவும் குறைந்துவிட்ட காலத்தில்தான், அதையும் அமளிகளால் நம் மக்கள் பிரதிநிதிகள் வீணடிக்கிறார்கள். இந்த அமளிகளுக்கு மத்தியில் பல சட்டங்கள் முறையான விவாதங்கள் இல்லாமலே நிறைவேற்றப்படுகின்றன.

‘`நாடாளுமன்றத்தில் தரமான விவாதங்கள் இல்லாமல் சட்டங்கள் நிறைவேறுவதைப் பார்க்கிறோம். அந்தச் சட்டங்கள் குறித்து ஏகப்பட்ட வழக்குகள் நீதிமன்றங்களுக்கு வருகின்றன. முறையான விவாதம் அங்கு நடக்காததால், அந்தச் சட்டம் கொண்டுவருவதன் நோக்கத்தை நீதிமன்றங்கள் புரிந்துகொள்ள முடிவதில்லை’’ என்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா சில மாதங்களுக்கு முன்பு சொன்னார். அதற்கு அரசியல் வட்டாரத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது.

மோதல் வேண்டாம், விவாதம் செய்யுங்கள்!

இப்போது மீண்டும் அதே கருத்தை வலியுறுத்தியிருக்கிறது உச்ச நீதிமன்றம். மகாராஷ்டிரா பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் 12 பேர் ஓராண்டுக் காலம் சஸ்பெண்டு செய்யப்பட்டதை ரத்து செய்து தீர்ப்பு வழங்கியது உச்ச நீதிமன்றம். நீதிபதிகள் கன்வில்கர், தினேஷ் மகேஸ்வரி, ரவிக்குமார் அடங்கிய அமர்வு, இந்தத் தீர்ப்பில் மக்கள் பிரதிநிதிகளுக்குப் பல யோசனைகளைச் சொல்லியிருக்கிறது.

‘`நாடாளுமன்றமும் சட்டமன்றங்களும் புனிதமான இடங்கள். அங்கு ஒழுங்கீனத்துக்கு இடமில்லை. ஆரோக்கியமான விவாதங்களுக்கே அங்கு நேரம் செலவிட வேண்டும்; தனிநபர் தாக்குதல்களுக்கு அல்ல. எளிய மக்களுக்கான நீதியைத் தீர்மானிக்கும் முதல் இடமாக இந்த அவைகளே இருக்கின்றன. கடைக்கோடி கிராமத்தில் இருக்கும் மக்களுக்கும் ‘தங்கள் தலையெழுத்தைத் தீர்மானிக்கும் விவாதங்கள் இங்கு நடக்கின்றன’ என்ற நம்பிக்கையை இந்த அவைகள் ஏற்படுத்த வேண்டும். தேசத்தின் நலனும் மக்களின் மகிழ்ச்சியும் மட்டுமே மக்கள் பிரதிநிதிகளின் இலக்காக இருக்க வேண்டும்’’ என்று நீதிபதிகள் சொல்லியிருக்கின்றனர்.

எனவே மக்கள் பிரதிநிதிகளே, மோதல் வேண்டாம், விவாதம் செய்யுங்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism