Published:Updated:

ஆனந்த சுதந்திரம் - 75

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

கடந்த 75 ஆண்டுகளில் நாம் பெற்ற வளர்ச்சியை அடித்தளமாகக் கொண்டு அடுத்த 25 ஆண்டுகளுக்கான வளர்ச்சியைத் திட்டமிட்டுக்கொண்டிருக்கிறோம்.

ஆனந்த சுதந்திரம் - 75

கடந்த 75 ஆண்டுகளில் நாம் பெற்ற வளர்ச்சியை அடித்தளமாகக் கொண்டு அடுத்த 25 ஆண்டுகளுக்கான வளர்ச்சியைத் திட்டமிட்டுக்கொண்டிருக்கிறோம்.

Published:Updated:
தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்

`உலகம் முழுவதும் ஆகஸ்டு 15-ம் தேதி இந்தியாவை நோக்கி வணங்கி வாழ்த்திற்று! மகத்தான அந்தச் சுபதினத்தில் இந்தியாவின் சுய ஆட்சி ஆரம்பமாயிற்று. கோடி சூரியப் பிரகாசம் கொண்டு சுதந்திர சூரியன் இந்திய வானிலே தோன்றினான். அதனின்று பொற்கிரணங்களின் ஒளிபட்டு, அடிமை இருள் அறவே அகன்றது. அந்தப் பொன்மயமான ஒளியிலே, பாரதநாட்டுச் சுதந்திர மாளிகையின் நவரத்தின அரியாசனத்தில் சுதந்திர தேவி அமர்ந்தபோது வானவர்கள் வாழ்த்தொலி கூறி வாத்தியங்கள் முழக்கினர். பூலோகவாசிகள் இந்தியாவை வாழ்த்தி வணங்கினார்கள்.

தேசத்தினர் இன்று சுதந்திர தரிசனம் செய்வதும், உலகோர் முன்னிலையில் கௌரவமாகத் தலைநிமிர்ந்து நிற்பதும் சாத்தியமாயிற்று. இப்படி இந்தியாவின் சுயமதிப்பு உயர்வதற்கு, விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு உயிர்நீத்த பல்லாயிரக்கணக்கான தியாகிகளை நினைத்து இந்த நன்னாளில் வணங்குவதைப் போன்ற புனிதக் கடமை வேறு எதுவுமிருக்க முடியாது.'

- தேச விடுதலையின்போது 17.08.1947 ஆனந்த விகடன் இதழில் `உலக மகா வைபவம்!' என்ற தலைப்புடன் வெளியான தலையங்கம் இது.

ஆங்கிலேயர்களின் எதேச்சதிகார ஆட்சி முடிவுற்று முக்கால் நூற்றாண்டு கடந்துவிட்டது. தன்னாட்சி நிலப்பரப்புகளாக இருந்த பல நூறு சமஸ்தானங்களையும், ஜமீன்களையும், ஆங்கிலேயர்களின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்த ராஜதானிகளையும் இணைத்து மட்டும் இந்தியா என்கிற நாடு உருவாக்கப்படவில்லை. பல மொழிகள், மதங்கள், இனங்கள், பண்பாடுகள் ஆகியவற்றையும் இணைத்து நம் தேசம் உருவாக்கப்பட்டது. இந்நாட்டில் வேற்றுமைகளுக்குக் குறைவே இல்லை என்றாலும், வேற்றுமையில் ஒற்றுமை கண்டு உருவானது நம் நாடு.

தலையங்கம்
தலையங்கம்

இந்த 75 ஆண்டுக்காலத்தில் மக்களின் பசிப்பிணி போக்கிய பசுமைப்புரட்சி, ஊட்டச்சத்து அளித்த வெண்மைப்புரட்சி, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பளித்த தகவல் தொழில்நுட்பப்புரட்சி ஆகியவை நம் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தியுள்ளன. தங்க நாற்கர சாலை போன்ற திட்டங்கள் நாட்டின் பல பகுதி மக்களையும் ஒன்றிணைத்துள்ளன. அணுசக்தியில் தொடங்கி விண்வெளி ஆராய்ச்சிவரை நாம் அடைந்த உயரம், பல முன்னேறிய நாடுகளே நம்மை வியந்து பார்க்க வைத்துள்ளது.

கடந்த 75 ஆண்டுகளில் நாம் பெற்ற வளர்ச்சியை அடித்தளமாகக் கொண்டு அடுத்த 25 ஆண்டுகளுக்கான வளர்ச்சியைத் திட்டமிட்டுக்கொண்டிருக்கிறோம். உலகின் மிகப்பெரிய ஜனநாயக தேசமான இந்தியா, வெகு விரைவில் உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக உருவெடுக்க இருக்கிறது. உலகின் அதிவேகமாக வளர்ந்துவரும் பொருளாதார வல்லரசாகவும் நாம் இருக்கிறோம். ‘உழைக்கும் திறன் கொண்ட இளைஞர்கள் பெருமளவில் இருக்கும் நாடு’ என்ற அடையாளத்தையும் இந்தியா பெற்றுள்ளது. உழைக்கும் திறனுள்ள உலகின் மனிதவளத்தில் ஐந்தில் ஒருவர் இந்தியராக இருப்பார். அவர்கள் உலகெங்கும் உள்ள நாடுகளின் வளர்ச்சிக்கு உதவுவார்கள். இப்போதே உலகின் பல நிறுவனங்களை இந்தியர்கள் திறமையாக வழிநடத்தி, அவற்றை வெற்றிகரமான நிறுவனங்களாக மாற்றியுள்ளனர். இதனால், திறமையான இந்தியர்களுக்கு உலகமே வாசலைத் திறந்து வைத்துக் காத்திருக்கிறது.

சர்வாதிகாரம், தீவிரவாதம் என்று நம்மைச் சூழ்ந்துள்ள தேசங்களில் பரவிய நோய்களுக்கு இடம்தராமல், ஜனநாயக மாண்புகளுடன் சுதந்திரத்தின் நூற்றாண்டை நோக்கிய பயணத்தைத் தொடர வேண்டும். பாலினம், மதம், இனம், மொழி, பண்பாடு என்று வேற்றுமைகளைப் புரிந்துகொண்டு ஒற்றுமையுடன் வாழ்ந்து இந்தக் கனவைச் செயலாக்குவோம். அனைவருக்கும் 75-வது சுதந்திர தின நல்வாழ்த்துகள்.